‘துயரத்தில் முடிந்த சுற்றுலா பயணம்’: வாட்ஸ் ஆப் படுகொலை

உற்சாகமாக தொடங்கிய ஒரு வாரயிறுதி சுற்றுலா பயணம் மிக துன்பமாக முடிந்து இருக்கிறது. ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் முகமது அசாமும், அவரது ஐந்து நண்பர்களும் சுற்றுலாவுக்கு திட்டமிட்டபோது அந்த பயணம் இப்படி முடியும் என்று நிச்சயம் அவர்கள் யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

Image caption முகமது அசாம்

குழந்தை கடத்தல் தொடர்பான ஒரு வாட்ஸ ஆப் புரளி அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் என்று நினைத்து பார்த்து இருக்கமாட்டார்கள். ஆம், ஒரு வாட்ஸ் ஆப் புரளி மரணத்தில் முடிந்து இருக்கிறது. முகமது அசாம் கொல்லப்பட்டு இருக்கிறார்.

என்ன நடந்தது?

முகமது அசாமும், அவரது நண்பர்களும் முக்ரி கிராமத்தில் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கி கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை மோசமாக தாக்கியது.

இதற்கு காரணம் குழந்தை கடத்தல் தொடர்பான ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி.

எப்படி ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி ஒரு துன்பவியல் சம்பவத்திற்கு காரணமாகி இருக்கிறது என்பதை அறிய பிபிசி தெலுகு செய்தியாளர் தீப்தி பதினி கர்நாடகத்தில் உள்ள பீதர் மாவட்டத்திற்கு பயணித்தார்.

அசாம், சல்மான், சலாம், நூர், அஃப்ரோஸ் ஆகிய ஐவரும் தங்களது புதிய காரில் ஒரு நெடும்பயணம் செல்ல திட்டமிட்டு, கர்நாடகத்தில் உள்ள தூரத்து உறவினர்கள் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஜூலை 13 ஆம் தேதி மாலை ஹைதராபாத்திலிருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள ஹண்டிகேரா கிராமத்திற்கு சென்று இருக்கிறார்கள். பச்சையம் கொடுத்த உயிர்ப்பு அந்த நிலம் எங்கும் பரவி அந்த பகுதியே ரம்மியமாக இருந்திருக்கிறது.

அந்த கிராமத்தில் 20 இஸ்லாமிய குடும்பம் உட்பட ஏறத்தாழ 150 குடும்பம் வசித்து வருகிறது. பழங்குடிகளும், லிங்காயத்துகளும் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

பசுமையான அந்த கிராமத்தில்தான், அந்த துயர்மிகு சம்பவம் நடந்து இருக்கிறது.

என்ன நடந்தது என்பதை அஃப்ரோஸ் பிபிசியிடம் விளக்கினார். அவரும் தாக்குதலுக்கு உள்ளானவர்தான். "நாங்கள் எங்களது உறவினரை சந்தித்துவிட்டு, அவர்களை மதிய உணவு சமைக்க சொல்லிவிட்டு, அந்த கிராமத்தில் உள்ள எங்கள் நிலத்திற்கு சென்றோம். செல்லும் வழியில் சில பள்ளி மாணவர்களை பார்த்தோம். அவர்களுக்கு கத்தாரை சேர்ந்த சல்மான் சாக்லேட்டுகளை வழங்கினார். பின், அங்கிருந்து புறப்பட்டு ஒரு ஏரிக்கு சென்று, அங்கள் எங்கள் நற்காலியில் அமர்ந்த போது, எங்கிருந்தோ வந்த ஒரு கும்பல் எங்களது வாகன டயரில் காற்றை பிடுங்கிவிட்டு, எங்களை தாக்க தொடங்கியது. என்ன நடக்கிறது என்று நாங்கள் உணர்வதற்குள் நிலைமை மோசமானது".

"எங்களை குழந்தை கடத்தல் கும்பல் என்று குற்றஞ்சாட்டியது. அவர்களுக்கு புரிய வைக்க எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால், எதற்கும் செவி கொடுக்க அந்த கும்பல் தயாராக இல்லை. பின் எங்களது உறவினர்களை உதவிக்கு அழைத்தோம்" என்கிறார் அஃப்ரோஸ்.

அஃப்ரோஸின் உறவினர் முகமது யாகூப்பும் வந்து அந்த கிராம மக்களுக்கு விளக்கி இருக்கிறார். ஆனால், அதுவும் எந்த பலனும் தரவில்லை.

"இந்த மொத்த கைகலப்பையும் அந்த கிராம மக்களுடன் இருந்த அமர் பாட்டில் தனது செல்பேசியில் பதிவு செய்து 'மதர் மர்கி' என்னும் வாட்ஸ் ஆப் குழுவுக்கு அனுப்பினார். கிராம மக்கள் கற்களை கொண்டு எங்களை தொடர்ந்து தாக்கினர். இந்த தாக்குதலில் நூருக்கு தலையில் அடிபட்டது. நானும் எனது நண்பர்களும் நூரை அந்த கும்பலிடமிருந்து மீட்டு, ஒரு பைக்கில் அவனை வேறு இடத்திற்கு அனுப்பினோம். சலாம், சல்மான் மற்றும் அசாம் காரில் ஏறி, வேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நானும் எல்லாம் முடிந்தது. பிரச்சனையிலிருந்து தப்பினோம் என்று நினைத்தேன். ஆனால், சில நிமிடங்களில் அவர்களுடமிருந்து அழைப்பு வந்த்து. கார் ஒரு குழியில் விழுந்துவிட்டது என்றனர்" என்கிறார் அஃப்ரோஸ்.

வதந்தி வீடியோ

இது அனைத்துக்கும் காரணம் ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி வீடியோதான்.

அமர் பாட்டில் எடுத்த அந்த காணொளி சில நிமிடங்களில் வைரலாக பரவ தொடங்கி இருக்கிறது.

முர்கி கிராம பேருந்து நிறுத்தத்தில் தேநீர் கடை நடத்தும் விஜய், "எங்கள் அனைவருக்கும் அந்த வீடியோ வந்தது. அதே சமயம் ஹண்டிகேரா கிராமத்தில் இருந்து ஒருவர் அழைத்து, குழந்தை கடத்தல்காரர்கள் சிவப்பு நிற வாகனத்தில் தப்பி எங்கள் கிராமம் நோக்கி வருவதாக கூறினார். உடனே டீ கடையில் இருந்த கிராம மக்கள், கடையில் இருந்த நாற்காலி மற்றும் பலகைகளை கொண்டு சாலையில் தடையை ஏற்படுத்தினர். அப்போது வேகமாக வந்த அந்த கார், பலகை நாற்காலியில் மோதி, சாலை ஓரத்தில் இருந்த குழியில் விழுந்தது. கிராம மக்கள் கோபமாக கற்களை கொண்டு காரை தாக்கினர். வேகமாக அதிகளவில் கிராம மக்களும் திரள தொடங்கினர், ஏறத்தாழ 1000 பேர் திரண்டனர்." என்கிறார்.

ஒரு தவறான வாட்ஸ் ஆப் செய்தியின் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்று உணர்ந்த பின் அந்த வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து விலகி இருக்கிறார் விஜய்.

முர்கி கிராமத்தில் நடந்த தாக்குதலையும் சிலர் வீடியோ எடுத்து இருக்கிறார்கள். அதனை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது.

அந்த வீடியோவில் கிராம மக்களிடமிருந்து இளைஞர்களை மீட்கும் முயற்சியில் போலீஸ் ஈடுப்பட்டு இருப்பதும் தெளிவாக தெரிகிறது.

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து பலர் அந்த கிராமத்திலிருந்து தப்பி சென்று இருக்கிறார்கள்

"இந்த சம்பவத்திற்குப்பின் கிராமமே வெறிசோடி போய்விட்டது. பலர் தப்பி வேறு எங்கோ சென்றுவிட்டார்கள்" என்கிறார் முர்கி கிராமத்தை சேர்ந்த ராஜேந்தர் பட்டீல்.

படுகாயம் அடைந்த போலீஸார்

இந்த சம்பவத்தில் போலீஸாரும் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

அன்று நடந்த நிகழ்வினை நம்மிடம் விளக்குகிறார் காவலர் மல்லிகார்ஜூன். இவர்தான் சம்பவத்தை கேள்விபட்டு அந்த கிராமத்திற்கு முதலில் சென்றவர்.

அவர், "இப்போதும் என்னால் அந்த காட்சியை மறக்க முடியவில்லை. காரில் சிக்கி இருந்த மூன்று பேர் முகத்தில் ரத்தம் வடிந்தபடி, அந்த கிராம மக்களிடம் கெஞ்சும் காட்சி என் நினைவில் அவ்வப்போது வந்து செல்கிறது. என்னால் உறங்க முடியவில்லை. மனிதாபிமானமற்ற இப்படியான செயலில் மக்களால் எப்படி ஈடுபட முடிந்தது? அவர்களை கிராம மக்களிடமிருந்து மீட்க எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால், குழந்தையை கடத்துபவர்களை நான் காப்பாற்ற முயற்சிப்பதாக அந்த கிராம மக்கள் என்னிடம் சண்டையிட்டனர்" என்கிறார்

மல்லிகார்ஜூனும் இடது கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

"ஏறத்தாழ 20 வாட்ஸ் ஆப் குழுவின் அட்மின்கள், இந்த சம்பவத்திற்கு பின் வாட்ஸ் ஆப் குழுவை கலைத்து இருக்கிறார்கள்" என்கிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவராஜா.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கில் 22 பேரை கைது செய்திருக்கிறோம். அதில் வாட்ஸ் ஆப் குழு அட்மினும் ஒருவர் என்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர்.

கிராம மக்கள் என்னசொல்கிறார்கள்?

நடந்த சம்பவத்திற்கு கிராம மக்கள் வருந்துகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள ஒருவரின் சகோதரர், "நாங்கள் அந்த செய்தியை உண்மை என்று நினைத்தோம். ஆனால், இப்போது நாளிதழை படிக்கும் போது எங்களுக்கு கவலையாகவும் குற்ற உணர்வாகவும் இருக்கிறது" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்