மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் முடிவு

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (தமிழ்) - மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் முடிவு

இன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோதி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே, பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முனைப்பில் தெலுங்கு தேசம் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடப்பு கூட்டத்தொடரிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே அறிவித்துள்ளன. இது தொடர்பாக இவ்விரு கட்சிகளும் இன்று மக்களவைச் செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து மனு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - இங்கிலாந்துக்கெதிரான தொடரை இழந்தது இந்தியா

இந்தியாவுக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றிருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிக நேரம் நிலைக்கவில்லை என்றாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட்டும், கேப்டன் மோர்கனும் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு மைதானத்தின் நான்கு புறமும் சிதறிடித்தனர். எனவே, இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 44.3 ஓவர்களில் 260 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ரன் குவிக்காததும், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாத பௌலர்களின் சொதப்பலான பந்துவீச்சுமே இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - சென்னையில் பறக்கும் ரயிலும், மெட்ரோ நிறுவனமும் இணைப்பு?

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செயல்பட்டு வரும் பறக்கும் ரயில் (MRTS) சேவையையும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் இணைக்கும் திட்டத்திற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த திட்டம் அரசால் ஏற்கப்படும் பட்சத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில் திரும்பபெறப்பட்டு குளிர்சாதன மற்றும் அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த மெட்ரோ ரயில்களை போன்று மாற்றப்படும் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - மாற்றங்களுடன் தகவல் அறியும் உரிமை மசோதா

மாற்றங்களுடன் கூடிய தகவலறியும் உரிமை சட்ட மசோதா - 2018 இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.

தகவலறியும் சட்டத்தை நீர்த்துபோகச்செய்வதற்காக இந்த சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவருவதாக எதிர்க்கட்சிகள், தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். ஆனால், நேற்று சட்ட நிபுணர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்ட அந்த சட்டம் குறித்த தகவலில் மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் மற்றும் ஊதியத்தை நிர்ணயிக்கும் விடயம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: