'சிறுத்தையின் கண்கள்' என்பதை 'சீதாவின் கண்கள்' ஆக்கியதா நீட் கேள்வித் தாள்?

படத்தின் காப்புரிமை Getty Images

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித் தாளில் ஒரு கேள்வியில் 'சிறுத்தையின் கண்கள்' என்று குறிப்பிடுவதற்குப் பதில் 'சீதாவின் கண்கள்' என அச்சிடப்பட்டு இருந்ததாக கூறுகிறார் ஒரு மாணவர். நீட் தமிழ் கேள்வித் தாளில் இருந்த பல குளறுபடிகளுக்கு இது ஒரு உதாரணம்.

இத்தகைய குளறுபடிகளால் மதிப்பெண் குறைந்து தங்கள் கனவு நிறைவேறுமா நிறைவேறாதா என்ற நிச்சயமற்ற நிலையில், பதற்றத்தில் இருக்கும் மாணவர்கள் பலர். அத்தகைய மாணவர்களில் ஒருவர்தான் பொருள் செல்வன்.

''சிவகாசியில இருக்கிற எங்க தருகணி கிராமத்துக்கு போற ஒவ்வொரு முறையும், இங்கவந்து ஒரு ஆஸ்பத்திரி கட்டி, மருத்துவரா இருக்கனும்னு எனக்கு ஆசை. அந்த ஆசை கொஞ்ச நாள்ல லட்சியமா மாறுச்சு. ஆனா இப்போ அது நடக்குமான்னு பயமா இருக்கு''- தமிழ் வழியில் மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய சென்னை மாணவன்(18) பொருள்செல்வன் உறுதி குலைந்த குரலில் பேசுகிறார்.

சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பொருள்செல்வனின் தந்தை சுசேந்திரன் சலூன் கடை நடத்துகிறார், தாய் சித்ராதேவி சத்துணவு ஊழியராகப் பணிசெய்கிறார். பொருள்செல்வனின் தம்பியும், தங்கையும் கூட இவரை 'மருத்துவர்' செல்வனாகவே பார்க்கவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

பதற்றத்தில் தேர்வுக்கு தயாரானேன்

சிவகங்கையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த குடும்பம் என்றாலும், கிராமங்களில் மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதை தருகணியில் ஏழாம் வகுப்பு படித்தபோது அறிந்துகொண்டதாகவும், அதுமுதல் மருத்துவராகி தனது கிராமத்திற்கு வேலை செய்யவேண்டும் என்ற லட்சியம் தனக்கு பிறந்ததாகவும் கூறுகிறார் இந்த மாணவர்.

சமீபத்தில், நீட் தேர்வில் தமிழ் கேள்வித்தாளில் உள்ள 49 கேள்விகளில் மொழி பெயர்ப்புப் பிழைகள் இருந்ததால், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை சிபிஎஸ்இ வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்துள்ளதால், பொருள்செல்வன் போன்ற பல மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணோடு, நேர்மையாக தங்களுக்கு வழங்கப்படவேண்டிய மதிப்பெண்களை சிபிஎஸ்இ வழங்கினால், அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக கூறுகிறார்கள்.

நீட் நுழைவுத்தேர்வை தமிழ்வழியில் எழுதிய சுமார் 24,000 மாணவர்களில் ஒருவரான பொருள்செல்வன், நீட் தேர்வு அறிவிப்பு வந்ததில் இருந்து பதற்றத்தோடு தேர்வுக்கு தயாரானதாகவும், பயிற்சி வகுப்புக்கு செல்லும்அளவுக்கு குடும்பச்சூழல் இல்லை என்பதால் தானாக படித்துக்கொண்டதாகவும் கூறுகிறார்.

கலைஅறிவியல் படிப்பில் சேரும் மருத்துவ மாணவர்கள்

''கேள்வித் தாளில் இருந்த மொழிமாற்றப் பிழைகளை, தவறு என்று தெரிந்துகொள்வதற்குள் அரைமணிநேரம் கடந்துவிட்டது. தேர்வு எழுதுவதற்கு முன்பாக, அனைத்துக் கேள்விகளையும் ஒரு முறை படித்துவிட்டு எழுதினேன். சிறுத்தையின் கண்கள் என்பதற்கு பதிலாக 'சீதாவின் கண்கள்' என்று கேள்வி அமைந்திருந்தது. எனக்கு ஒருபக்கம் உண்மையில் சீதா என்ற விலங்கு உள்ளது, அதைப்பற்றி நான்தான் தெரிந்துகொள்ளவில்லை என்று தோன்றியது. அதேபோல வௌவால் என்பதற்கு பதிலாக 'வவனவால்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் ஒரு விலங்காக இருக்கும் என்று நினைத்தேன்,'' என கேள்வித்தாளில் இருந்த பிழைகள் குறித்து பேசினார் பொருள்செல்வன்.

Image caption பொருள்செல்வன்

செல்வனின் வகுப்பில் மருத்துவக் கனவுடன் இருந்த 30 மாணவர்களில், வெறும் நான்கு நபர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுதியுள்ளார்கள்.

மாணவர்களின் நியாயத்தை சிபிஎஸ்இ பார்க்கவேண்டும்

''நீட் தேர்வு பற்றிய பயத்தால், என்னுடைய நண்பர்கள் பலரும் கலை, அறிவியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள். சிலர் இந்த தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு சென்று படிக்க காசில்லை என்றும் தேர்வு எழுதவேண்டாம் என்றும் முடிவுசெய்தார்கள். தேர்வு எழுதிய நான்கு பேரும் தேர்வுத்தாளில் இருந்த பிழைகளை எங்களுக்கு தெரியாத கேள்விகள் என்று பயந்து தேர்வை எழுதினோம். எங்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்குமா என்ற அச்சத்தில் இருக்கிறோம்,'' என்கிறார் மாணவர் செல்வன்.

தவறான பதிலை எழுதினால், மொத்த மதிப்பெண்களில் தவறான பதில்களுக்கான மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதால், பல கேள்விகளை எழுதவில்லை என்கிறார் மாணவர் செல்வன்.

''எங்களைப் போல பல மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாத மாணவர்கள். ஒரு சிலருக்கு விடைத்தாளாக கொடுக்கப்பட்ட ஓஎம்ஆர் தாளில் பதில் அளிப்பது எப்படி என்ற குழப்பம் இருந்தது. இந்த ஆண்டு தேர்வு குழப்பமும், பயமும் நிறைந்த தேர்வாக இருந்தது. இதில் எங்களைப் போன்ற ஏழை மாணவர்களின் நியாயங்களை சிபிஎஸ்இ பார்க்கவேண்டும்,'' என்கிறார் செல்வன்.

பொருள்செல்வனைப் போலவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் படித்த தாந்தானி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகாவும்(17) மருத்துவராக வேண்டும் என்ற தனது லட்சியம் சாத்தியமாகுமா என்ற குழப்பத்தில் இருப்பதாக கூறுகிறார்.

தமிழ்வழி மாணவர்களுக்கு ஏற்பட்ட அச்சம்

நீட் தேர்வுக்கு படிப்பது ஒரு பக்கம் என்றாலும், தேர்வு நடக்குமா என்ற சர்ச்சை, தேர்வு மையம் அறிவித்ததில் இருந்த குழப்பம், தேர்வுக்கு செல்வதற்கான உடை கட்டுப்பாடு எனப் பலதும் தனக்கு மனஅழுத்தத்தை தந்ததாக சொல்கிறார். அதிலும் தேர்வு எழுதுவதற்கு திருச்சியில் உள்ள மையத்திற்குச் செல்லவேண்டும் என்பதால், தேர்வு தினத்தன்று அதிகாலைப் பயணம், களைப்பு என அசௌகரியங்கள் இருந்ததாக கூறுகிறார்.

Image caption கார்த்திகா

''தேர்வுக்கு முந்தைய தினம் வரை தினமும் தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பேன். புது அறிவிப்பு உள்ளதா, தேர்வு பற்றி என்ன சொல்லப்போகிறார்கள் குழப்பமாக இருந்தது. நாங்கள் படித்த பள்ளிக்கூட புத்தகங்கள் மட்டுமல்லாது வேறுபாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் வருமா, எப்படி தயார் ஆவது என்ற பதற்றம் இருந்தது. சென்னையில் இருந்து ஒரு மருத்துவர் குழு எங்கள் கிராம மாணவர்களுக்கு இணையம் மூலமாக இலவசமாக ஒருமாதம் பயிற்சி கொடுத்தது. கடுமையாக தாயாரானபோதும், கேள்வித்தாளில் இருந்த பிழைகள் எங்களைப் போன்ற தமிழ்வழி மாணவர்களுக்கு மேலும் அச்சம் ஊட்டியது,'' என்கிறார் கார்த்திகா.

நீட் தேர்வுக்கு தனது பள்ளி ஆசிரியர்கள், தெரிந்த நண்பர்கள், உள்ளூர் மருத்துவர்கள் எனப் பலரும் தன்னைப்போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்தனர் என்கிறார்.

தற்போது வெளியான முடிவுகளின்படி கார்த்திகா 97/200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வந்தது. பிழையான கேள்விகளுக்கு சிபிஎஸ்இ மதிப்பெண்களை வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய மதிப்பெண்கள் அதிகரிக்கும், நிச்சயம் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

நீட் தேர்வுக்காக காத்திருக்க வேண்டுமா?

''சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்று தெரிந்துகொண்டேன். எங்களைப் போன்ற கிராமப்புற ஏழை மாணவர்களை மேலும் அலைக்கழிக்காமல், எங்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்கினால், பேருதவியாக இருக்கும். தமிழ்வழியில் பயின்ற எங்களுக்கு ஆங்கிலம் ஒரு பாடம் மட்டுமே; தமிழ் மொழியில்தான் கேள்விகளை புரிந்து எழுதுவோம் என்பதை உணர்ந்து எங்களுக்கு மதிப்பெண்களை வழங்கவேண்டும்,'' என்கிறார் கார்த்திகா.

படத்தின் காப்புரிமை MANPREET ROMANA/AFP/GETTY IMAGES

கார்த்திகாவின் தந்தை நடராஜன் கிராம தபால் அலுலகத்தில் பணிபுரிகிறார். தனது மகள் நீட் தேர்வு எழுதியது பெரிய சாதனைதான் என்கிறார். ஏனெனில், கார்த்திகாவின் வகுப்பில் இருந்த 25 மாணவர்களில் மூவர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். அதிலும் கார்த்திகா மட்டுமே, மருத்துவ சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு பெற்றவராக இருக்கிறார்.

பெண் குழந்தைகள் மேல்படிப்பு படிப்பதற்கான அனுமதி இன்னும்கூட சில குடும்பங்களில் மறுக்கப்படுவதாகவும், இந்த ஆண்டு நீட் தேர்வு நடந்ததுபோல நடத்தப்பட்டால், பல பெற்றோர்கள் பெண் குழந்தைகளை மருத்துவப்படிப்பிற்கு பதிலாக உள்ளூரில் உள்ள கல்லூரியில் கலை அறிவியல் பாடத்தை தேர்வுசெய்ய சொல்வார்கள் என்கிறார் கார்த்திகா.

''என் பெற்றோர் எனக்கு துணையாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு சீட் கிடைத்தால் படிக்கலாம். அடுத்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுதுவதற்காக காத்திருக்கமுடியாது. விரைவாக படிப்பை முடித்துக்கொண்டு என குடும்பத்திற்கு என்னால் ஆன பொருளுதவிகளை செய்யவேண்டும் என்றே தோன்றுகிறது. எனக்கு பிடித்தமான மருத்துவ படிப்பை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற கடைசி நம்பிக்கையில் காத்திருக்கிறேன்,'' என்கிறார் கார்த்திகா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்