நீண்ட மகப்பேறு விடுமுறை: பணிக்கு திரும்பும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

  • சரோஜ் சிங்
  • பிபிசி செய்தியாளர்

டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மகப்பேறுவிடுமுறைக்கு பிறகு 13 மாத இடைவெளியை அடுத்து விம்பிள்டன் போட்டியில் கலந்து கொண்டபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை.

பட மூலாதாரம், Thinkstock

விளையாட்டில் வெற்றி தோல்விகள் சகஜம் என்றாலும், 23 கிராண்ட் ஸ்லாம்களை வென்ற செரீனாவின் இந்தத் தோல்வி அவர் மகப்பேறு விடுமுறைக்கு பிறகு ஏற்பட்டது என்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, மகப்பேறு காலத்திற்காக பெண்கள் எடுக்கும் நீண்டகால விடுமுறை அவர்களின் தொழில் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பது பற்றிய விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

ஆனால், மகப்பேறு விடுமுறைக்கு பிறகு வழக்கமான பணிக்கு திரும்புவதில் ஏற்படும் பிரச்சனை செரீனாவுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களும் சந்திப்பதுதான்.

டெல்லி மருத்துவமனை ஒன்றில் ரேடியாலஜி துறையில் பணியாற்றுகிறார் ரஷ்மி வர்மா. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு குழந்தை பிறந்தது.

ஆறு மாத விடுப்புக்கு பிறகு அவர் வேலைக்கு வர முடிவு செய்தபோது, பழைய வேலையிலேயே அவரால் தொடர முடிந்தது. ஆனால், ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சம்பள உயர்வு அவருக்கு கொடுக்கப்படவில்லை.

பிபிசியிடம் மகப்பேறு கால விடுமுறைப் பற்றி பேசிய ரஷ்மி இவ்வாறு கூறுகிறார்: 'மகப்பேறு விடுமுறைக்கான ஆறு மாத ஊதியம், அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. என் நிறுவனம் எனக்கு என்ன செய்தது? எனக்கு கிடைக்க வேண்டிய இயல்பான ஊதிய உயர்வை கொடுக்கவில்லை'.

பட மூலாதாரம், AFP

இதைப் பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கவில்லையா என்று ரஷ்மியிடம் கேட்டோம். அவர்கள் நேரடியாக எதுவும் சொல்லவில்லை என்றாலும், 'ஆறு மாதத்திற்கான ஊதியத்தை அரசு வழங்கவில்லை, அதைக் கொடுத்த்து நிறுவனம் தான்; இந்த நிலையில் ஆறு மாதம் வேலை பார்க்காதவர்களுக்கு சம்பள உயர்வு எப்படி கொடுக்க முடியும்' என்பதுதான் நிறுவனத்தின் கண்ணோட்டம் என்பது சக பணியாளர்கள் மூலம் எனக்கு தெரியவந்தது என்று கூறுகிறார் ரஷ்மி.

மகப்பேறு சட்டம்

2017ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்தியாவில் பணிபுரியும் பெண்களுக்கு 12 வார மகப்பேறு விடுமுறை கொடுக்கப்பட்டது.

ஆனால், மூன்று மாத விடுமுறைக்கு பிறகு பணிக்கு திரும்புவதில் ஏற்படும் சிரமங்களால் பொதுவாக அவர்கள் விடுமுறையை நீட்டிக்கும் வழக்கமே இருந்த்து.

பெண்களின் இந்த பிரச்சனையைப் புரிந்துக் கொண்ட மத்திய அரசு, 2017ஆம் ஆண்டு மகப்பேறுக்கான விடுமுறையை 26 வார காலமாக உயர்த்தி சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது.

ஆனால், எந்த சட்டத்திற்காக இந்தியப் பெண்கள் மிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்களோ, அது அவர்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்கிறதா அல்லது எதிர்மறையான பலனைத் தருகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய வசதிகள் குறித்து பணிபுரியும் டீம்லீஜ் என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

பட மூலாதாரம், AFP

அந்த ஆய்வில், புதிய மகப்பேறு சட்ட்த்திற்கு பிறகு பணிபுரியும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? அவை ஆக்கப்பூர்வமாகஉள்ளதா? இல்லை எதிர்மறையாக உள்ளதா என்று கேட்கப்பட்டது.

ஆய்வில் வெளியான உண்மை

இந்தியாவில் செயல்படும் 300 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவுகளோ அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

2018-19இல் 1.6 சதவிகிதம் முதல் 2.6 சதவிகித பெண்களின் வேலை பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது.

அதாவது, 2018-19இல் 11 லட்சம் முதல் 18 லட்சம் பெண்கள் வேலை இழப்பார்கள்.

இந்தியாவில் மகப்பேறு சட்டத்தில் மாற்றம் ஏற்பட்ட பிறகு எடுக்கப்பட்ட முதல் ஆய்வின் முடிவு இது.

இந்த அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட டீம்லீஜ் அமைப்பின் ரிதுபர்னா சக்ரவர்த்தி இவ்வாறு கூறுகிறார்: "ஓராண்டாக இந்த ஆய்வை மேற்கொண்டோம். இதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவது சுலபமானதாக இல்லை. ஆனால், பெண்களுக்கு வேலை வழங்குவதற்கு முன்பே அவர்களின் திருமணம், குழந்தை பெறுவது போன்ற விஷயங்களில் அவர்களின் எதிர்கால திட்டங்கள் பற்றி கேட்கப்படுவதாக பெண்கள் தெரிவித்தனர்".

தனியார் கல்லூரியில் பேராசிரியர் பதவிக்கான நேர்காணலில் ஒரு பெண்ணிடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா? உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? குழந்தை பெற்றுக் கொள்வது பற்றிய உங்கள் திட்டம் என்ன?

"வேலைக்கான நேர்காணலில் பெண்களிடம் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. கருவுற்ற பெண்களை வேலையில் வைத்துக் கொள்ள முடியாது என்றோ அல்லது திருமணமான உடனே பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கொடுக்கமுடியாது என்றோ நிறுவனங்கள் எழுத்துபூர்வமாக எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை. ஆனால் வாய்மொழியாக அறிவுறுத்தப்படுகிறது, நடைமுறைப்படுத்தப்படுகிறது " என்கிறார் ரிதுபர்னா சக்ரவர்த்தி.

எல்லா வேலைகளிலும் மகப்பேறு விடுமுறை என்பது பெண்களுக்கு தடைக்கற்களாக இருக்கிறதா?

சிறு மற்றும் குறு நிறுவனங்கள், கல்வி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. இவற்றைத் தவிர பிற துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த அளவு அழுத்தம் இருப்பதில்லை.

பணிபுரியும் பெண்களின் நிலை

2017ஆம் ஆண்டில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, பெண்கள் அதிகமாக பணிபுரியும் 131 நாடுகளின் பட்டியலில் இந்தியா120வது இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் பாதியளவுக்கு பெண்கள் இருந்தாலும், 27 சதவிகித பெண்களே வேலைக்கு செல்கின்றனர்.

இந்த நிலைமையில் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படும்?

டெல்லியில் அசோகா பல்கலைக்கழகத்தில் பெண்கள் தலைமைத்துவ துறை இயக்குநர் ஹர்பிரீத் கெளர் கூறுகிறார், "அரசு, மகப்பேறு நலன் சட்டத்தை திருத்தி ஆக்கப்பூர்வமான பணியை முன்னெடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதற்கு நல்ல பலன்கள் ஏற்படலாம். ஆனால்,பணி வழங்கும் நிறுவன்ங்களின் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதையும் மறுக்கமுடியாது".

"குழந்தை பாதுகாப்பு மையம் அமைப்பது, ஆறு மாத மகப்பேறு விடுப்புக்கான சம்பளம் தருவது, ஆகிய இரண்டு பொறுப்புகளும் நிறுவனத்தின் சுமையை அதிகரிக்கிறது. இது எதாவது ஒரு விதத்தில் நிறுவனத்தின் லாபத்தை பாதிக்கும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தீர்வு என்ன?

இதற்கும் பதிலளிக்கிறார் ஹர்பிரீத் கெளர், "உலகில் பல நாடுகள், மகப்பேறு விடுமுறை என்று தாய்க்கு மட்டுமே விடுமுறை வழங்குவதற்கு பதிலாக, தந்தைக்கும் விடுமுறை வழங்கும் வகையில் 'பெற்றோர் விடுமுறை' வழங்குகின்றன. அதாவது குழந்தை பெற்றுக் கொள்வது, குழந்தையின் பராமரிப்பு ஆகியவற்றில் தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதன் அடிப்படையில் பெற்றோர் விடுமுறை வழங்கப்படுகிறது" என்று சொல்கிறார்.

"அதாவது குழந்தை பிறக்கும்போது, அதன் பராமரிப்புக்காக தாய், தந்தை இருவரும் விடுப்பு எடுக்கலாம். இந்தியாவிலும் இதுபோன்ற வசதி ஏற்படுத்தப்பட்டால், பெண்கள் பணிக்கு செல்வதில் ஏற்படும் பாதிப்பும், பெண்களின் பிற பிரச்சனைகளும் ஓரளவுக்கு குறையும் வாய்ப்பு ஏற்படும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

அவரின் கருத்துப்படி, "ஸ்டார்ட் அப் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் கருவுற்ற பெண்கள் மகப்பேற்றினால் வேலை இழக்கும் வாய்ப்புகள் குறைவுதான். ஏனென்றால், அவர்களுக்கு அரசும் பண உதவி செய்கிறது".

மன்ப்ரீத்தின் கருத்தை ரிதுபர்னா சக்ரவர்த்தியும் ஒப்புக்கொள்கிறார். அவருடைய கருத்துப்படி,"அரசு உதவித்தொகை எதுவும் கொடுக்காவிட்டால், குறைந்தபட்சம் நிறுவனங்களுக்கு வரியில் ஓரளவு சலுகைகளாவது வழங்கலாம். அது நிலைமையை சற்று மேம்படுத்தலாம்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :