'தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு': அன்புமணி புகார்

"தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக உள்ளூர் நோயாளிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் மாறாக பல கோடி ரூபாய் மதிப்பு வரை வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்கப்படுகிறது," என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை தூக்கிலிடவேண்டும். கைதானவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். எஸ்.பி.கே. நிறுவனத்தில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் ,"என்றார்.

"எஸ்.பி.கே. நிறுவனத்திற்கும் முதலமைச்சரின் உறவினருக்கும், திமுக முன்னாள் அமைச்சருக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தால் உண்மை வெளிவராது. எனவே சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் முட்டை ஊழல் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்," என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

"தமிழகத்தில் இதயம், நுரையீரல் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று வருகிறது. திட்டமிட்டே உள்ளூர் நோயாளிகளை புறக்கணித்துவிட்டு, வெளிநாட்டு நோயாளிகளுக்கு விதிகளுக்கு முரணாக உறுப்பு மாற்றப்படுகிறது. இந்த முறைகேடுகள் தொடர்பாக, மருத்துவர் என்ற வகையில் தான் தனிப்பட்டமுறையில் நீதிமன்றத்தை நாடுவேன்," என்று அன்புமணி தெரிவித்தார்.

"இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்வதில் முறைகேடு நடப்பதாக சமீபத்தில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு நோயாளி ஒரு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தால் முதலில் அந்த மருத்துவமனையில் உடல் உறுப்பு தேவைப்படும் நோயாளிக்கு இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்பை வழங்க வேண்டும்" என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் பிபிசி தமிழிடம் கூறினார்.

"மருத்துவமனையில் உடல் உறுப்பு தேவைப்படும் நோயாளி இல்லாவிட்டால், அதே மாநிலத்தில் இருக்கும் நோயாளிக்கு வழங்க வேண்டும், மாநிலத்துக்குள் இல்லாவிட்டால் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு வழங்க வேண்டும்," என்று ரவீந்திரநாத் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்தியாவைச் சேர்ந்த நோயாளி இல்லாவிட்டால், அடுத்ததாக வெளிநாடுவாழ் இந்திய நோயாளிக்கும், அவர்களில் யாருக்கும் தேவை இல்லாதபோதுதான் வெளிநாட்டு நோயாளிகளுக்கும் உறுப்புகளை வழங்க வேண்டும் என்பது விதி. இந்த விதி மீறப்பட்டிருந்தால் நிச்சயம் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

"பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு அல்லாமல், முன்னுரிமையை மீறி வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அப்படி விதிமீறல் நடந்திருந்தால் அந்த மருத்துவமனையைச் சேர்ந்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்," என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் அமலோற்பவநாதன்.

அன்புமணியின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, அரசுத் தரப்புக் கருத்துக்களைப் பெற முயன்றபோது இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்