‘இந்தியாவின் டைட்டானிக்’ : ஒரு பெரும் கப்பல் விபத்துக்கு உள்ளான கதை

டைட்டானிக் குறித்து நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கப்பல், விபத்து என நாம் அனைவரும் டைட்டானிக் குறித்த தகவல்களை கடந்து வந்திருப்போம். ஆனால், எஸ். எஸ். ராம்தாஸ் கப்பல் குறித்து நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption படம் சித்தரிக்க மட்டுமே

மராத்தி திரைப்பட இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலெகர் எஸ். எஸ். ராம்தாஸ் கப்பல் குறித்தான தகவல்களை இங்கே பகிர்கிறார்.

கதைகளின் ஊடாக

எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. என் சிறுவயதில் எனது தந்தை எஸ்.எஸ் ராம்தாஸ் கப்பல் குறித்தும், அது எப்படி விபத்துக்கு உள்ளானது என்பது குறித்தும் என்னிடம் முதல் முறையாக கூறினார்.

என் தந்தை ஒரு மில் தொழிலாளி. எங்களது பொருளாதார நிலை ஒன்றும் சிறப்பாகவெல்லாம் இல்லை; மத்தியதரவர்க்கம் என்று கூட சொல்ல முடியாது. எங்களிடம் ஒரு வானொலி பெட்டி இருந்தது. ஆனால், தொலைக்காட்சி பெட்டி வாங்குவதற்கு எங்களது பொருளாதார நிலை இடம் தரவில்லை.

ஆனால், தொலைக்காட்சி பெட்டி இல்லாத குறையை என் தந்தை போக்கினார். என் தந்தை நல்ல கதை சொல்லி. அவர் கதை விவரிக்கும் விதம் அற்புதமாக இருக்கும். ஒவ்வொரு இரவும் ஒரு கதையை எனக்கு அவர் சொல்வார்.

அப்படியான கதை மூலமாகதான் எனக்கு ராம்தாஸ் கப்பல் அறிமுகமானது.

படத்தின் காப்புரிமை KISHOR BELEKAR

ஓர் இரவு எனக்கு அந்த கப்பல் குறித்தும், அது விபத்துக்கு உள்ளானது குறித்தும் விவரித்தார். அந்த இரவு அவர் வார்த்தைகளில் உருபெற்ற கப்பலும் அதன் விபத்தும் என் நினைவில் நன்றாக தங்கிவிட்டது.

நான் 2006 ஆம் ஆண்டு ராம்தாஸ் கப்பல் குறித்து திரைப்படம் எடுக்கலாம் என்று நினைத்ததற்கு நான் சிறு வயதில் கேட்ட கதைகளும் காரணம் என்று நினைக்கிறேன். 2006 ஆம் ஆண்டிலிருந்து ராம்தாஸ் கப்பல் குறித்த தகவல்களை திரட்டி வருகிறேன். அந்த கப்பல் விபத்தில் தப்பி பிழைத்த பலரை இந்த பத்து ஆண்டுகளில் சந்தித்து இருக்கிறேன், பல நாளிதழ்களை தகவலுக்காக திரட்டினேன், ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டேன். அறிவியலாளர் கஷ்கிவாலே, ராம்தாஸ் கப்பல் குறித்த தகவல்களை திரட்டுவதற்கு பெரிய அளவில் உதவினார்.

இந்த கப்பல் குறித்த தகவல்களை திரட்டுவதற்கான என் பயணம் மும்பை அலிபாகில் தொடங்கி தென் ஆப்பிரிக்காவில் முடிந்தது. ஆம், இந்த விபத்தில் உயிர்பிழைத்த பர்கு ஷெட் முகுடம் அலிபாகில் சந்தித்தேன், அவர் அளித்த தகவலை பின் தொடர்ந்து சென்றேன் இந்த பயணம் தென் ஆப்பிரிக்காவில் அப்துல் கையாஸ் இன்னுடனான உரையாடலில் முடிந்தது. அப்துலும் இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்தான்.

179 அடி நீளம், 29 அடி அகலம், 1000 பயணிகள்

ராம்தாஸ் கப்பலை கட்டியது ஸ்வான் மற்றும் ஹண்டர் கம்பெனி. இதே நிறுவனம்தான் ஆடம்பரமான குயின் எலிஸபெத் கப்பலை கட்டியது. ராம்தாஸ் கப்பலின் நீளம் 179 அடி, அகலம் 29 அடி. ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கும் வகையில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தக் கப்பல் 1936 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. அதன் பின் சில ஆண்டுகளில், இந்தக் கப்பலை இந்தியன் கூட்டுறவு ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி வாங்கியது.

படத்தின் காப்புரிமை KISHOR BELEKAR

இந்த கம்பெனி முழுக்க முழுக்க ஒரு சுதேசி நிறுவனம்.

ஆம், அந்த சமயத்தில் மிகத்தீவிரமாக இந்திய விடுதலை போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. பிரிட்டனை வணிகத்தில் வீழ்த்த விரும்பிய ஒத்த சிந்தனை உடைய பல சுதந்திர போராட்ட வீரர்கள் இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கி இருந்தனர். 'சுக்கர் போட் சேவா'என்ற பெயரில் சேவையை கொன்கன் கடற்பகுதியில் சேவையை தொடங்கியது. இது பிரிட்டனுக்கு அந்த காலக்கட்டத்தில் விடப்பட்ட நேரடி சவால்.

மக்கள் அனைவரும், இந்த நிறுவனத்தை 'தங்கள் நிறுவனம்'என்று கொண்டாடினர்.

இந்த நிறுவனமும் மக்களின் உணர்வுகளை மதித்து தங்களது கப்பல்களுக்கு கடவுள் மற்றும் புனிதர்களின் பெயரை சூட்டியது. `ஜெயந்தி', 'துக்காராம்', 'ராம்தாஸ்', 'புனிதர் அந்தோனி', 'புனிதர் ஃபிரான்சிஸ்' மற்றும் 'புனிதர் சேவியர்' என பெயர் சூட்டின.

உயிர் பிழைத்த96 பேர்

ராம்தாஸ் கப்பல் குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோதுதான், ராம்தாஸ் கப்பல் விபத்துக்கு உள்ளான அதே வழிதடத்தில் விபத்தில் சிக்கிய இரண்டு கப்பல்கள் குறித்த தகவல்கள் தெரிய வந்தன. சிலருக்கு மட்டும்தான் இந்த விபத்து குறித்த தகவல் தெரிந்து இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption படம் சித்தரிக்க மட்டுமே

ராம்தாஸ் கப்பல் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பு, சரியாக சொல்ல வேண்டுமென்றால், 11 நவம்பர் 1927 ஆம் ஆண்டு ஒரே நாளில், ஒரே நேரத்தில் எஸ். எஸ். ஜெயந்தி கப்பலும், எஸ். எஸ். துக்காராம் கப்பலும் ஒரே பகுதியில் கடலில் மூழ்கின. ஜெயந்தி கப்பலில் 96 பேர் இறந்தனர் என்றால், துக்காரம் கப்பலில் பயணித்த 146 பேரில், 96 பேர் உயிர் பிழைத்தனர்.

சரியாக இருபது ஆண்டுகளுக்கு பின், அதே வழித்தடத்தில் எஸ்.எஸ்.ராம்தாஸ் கப்பல் கடலில் மூழ்கியது. அப்போது அந்த கப்பலில் 778 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

மும்பையின் பிரபலமான பச்சா தாகா பகுதியிலிருந்து, அலிபக் கப்பல் துறைக்கு 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி துக்ககரமான அந்த பயணத்தை காலை 8 மணிக்கு மேற்கொண்டது. அன்று அமாவாசை என்பதால், பலர் விடுமுறையில் இருந்தனர். பலர் ரெவேஸ் பகுதியில் இருந்த தங்கள் வீட்டிற்கு செல்ல அந்த கப்பலில், பயணித்தனர். மீனவர்கள், சிறு வணிகர்கள், சில வெள்ளைக்கார அதிகாரிகளும் அவர்களது குடும்பத்துடம் அந்தக் கப்பலில் பயணம் செய்து இருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை KISHOR BELEKAR
Image caption பர்கு சேத் முகுடம்

பர்கு சேத் முகுடமுக்கு இப்போது 90 வயது. அந்த கப்பலில் பயணித்த போது வயது 10. அதுபோல, தென் ஆப்பிரிக்காவில் நான் சந்தித்த அப்துல் தனது 89 வயதில் இறந்துவிட்டார். அந்த கப்பலில் பயணித்தபோது அவருக்கு 12. அந்த கப்பலில் சில கர்ப்பிணிகளும் பயணித்து இருக்கிறார்கள்.

அந்த பயணம்

கப்பலில் அனைவரும் ஏறியதும், கப்பல் கண்பாணிபாளர் விசிலை ஊதி இருக்கிறார். அதன் பின் கப்பல் பெரும் சத்தத்துடன் தன் பயணத்தை தொடங்கி இருக்கிறது. படிகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தியப் பின்னும் சில பயணிகள் கடினப்பட்டு கப்பலில் ஏறி இருக்கிறார்கள் .

படத்தின் காப்புரிமை KISHOR BELEKAR
Image caption அப்துல் ஷுகூர் கைஸ்

"பாவம் அவர்களை மரணம் அழைத்து இருக்கிறது" என்று வர்ணிக்கிறார் பர்கு. அந்த சமயத்தில் மும்பையில் பெருமழை பெய்துக் கொண்டிருந்தது. மழையிலிருந்து மக்களை காக்க தார்பாய்கள் விரிக்கப்பட்டு இருக்கிறது.

பின் கப்பல் குழுங்கி இருக்கிறது. பொதுவாக ஆழ்கடலில் கப்பல் நுழையும் போது கப்பல் இவ்வாறாக குழுங்கும். அது அந்த கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் மக்கள் இதற்கு அஞ்ச்வில்லை. அனைவரும் அடிக்கடி பயணம் செய்பவர்கள் என்பதால், பயணிகள் பேசிக் கொண்டிவந்து இருக்கின்றனர். ஜெயந்தி கப்பல் மற்றும் துகாராம் கப்பல் விபத்து குறித்து மக்கள் பேசி கொண்டிருந்ததாக நிகாம் தனது குறிப்பில் எழுதி இருக்கிறார்.

கப்பல் மும்பையிலிருந்து 13 கி.மீ தொலைவில் இருந்த போது மழை வீரியத்துடன் பொழியத் தொடங்கி இருக்கிறது. அலைகளும் வேகமாக வீச தொடங்கி இருக்கின்றன. தண்ணீர் கப்பல் உள்ளே வர தொடங்கி இருக்கிறது. மக்கள் அச்சமடைய தொடங்கி இருக்கிறார்கள். தங்களுக்குள் பேசுவதை நிறுத்திவிட்டு, அமைதியாக நடப்பதை கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

கப்பல் ஒரு பக்கம் சாய, மக்கள் பீதி அடைந்து பாதுகாப்பு மிதவைச்சட்டையை எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், துரதிருஷ்டமாக சில மிதவைச்சட்டைகள் மட்டுமே கப்பலில் இருந்திருக்கிறது. இதனால் மக்களுக்குள் சண்டை வர தொடங்கி இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption படம் சித்தரிக்க மட்டுமே

கப்பல் கேப்டன் ஷேக் சுலைமானும், தலைமை அதிகாரி ஆதமும் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தி இருக்கிறார். ஆனல் மக்கள் பீதியடைந்து, நீச்சல் தெரிந்தவர்கள் கடலில் குதிக்க தொடங்கி இருக்கிறார்கள். சில மிதவைச்சட்டையுடன் குதித்து இருக்கிறார்கள்.

இதற்கு இடையே கப்பல் மேலும் சாய, தார்ப்பாய் கீழே விழுந்து இருக்கிறது. அதில் சிலர் சிக்க பெரு பெரும் அலை எழுந்து அனைவரையும் கீழே தள்ளிவிட்டு இருக்கிறது.

வரலாற்றில் மிகப்பெரிய விபத்து

இந்திய கப்பல் வரலாற்றில் இதுதான் மிகப்பெரிய விபத்து. இந்த கப்பல் காலை 9 மணிக்கு கடலில் கவிழ்ந்து இருக்கிறது. ஆனால், மாலை 5 மணி வரை மும்பையில் இருந்தவர்களுக்கு இந்த விபத்து குறித்து தெரியவில்லை.

மிதவைச்சட்டை உதவியுடன் பர்கு தப்பி மும்பை கடற்கரைக்கு வந்து, கப்பல் விபத்துக்கு உள்ளான விவரத்தை சொல்லி இருக்கிறார். பின் இந்த தகவல் காட்டு தீயாக பரவி இருக்கிறது.

ராம்தாஸ் விபத்துக்கு உள்ளானது ஜூலை மாதம் 1947 ஆம் ஆண்டு. அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இந்திய சுதந்திரத்தை கொண்டாட, மும்பையில் நூற்றுகணக்கான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தேடி கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்