‘சேக்ரட் கேம்ஸ்’ - வைரலாக பரவிய நிர்வாண காணொளியும், மாறவேண்டிய எண்ணமும்

ஒரு பெண் தன் ரவிக்கையின் பொத்தான்களை அவிழ்க்கிறார். அவளது மார்பகங்கள் வெளியே வருகின்றன. பின் தனது திறந்த மார்பகங்களுடன் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்கிறார். இந்த 40 விநாடி காணொளி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவுகிறது. அந்த பெண் 'ஆபாசப் பட நடிகை' என்று அழைக்கப்படுகிறார்.

படத்தின் காப்புரிமை NETFLIX

அந்த காட்சியின் மற்றொரு பத்து விநாடி காணொளி யு - டியூபில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது. அதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பார்த்து இருக்கிறார்கள்.

பின் அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு, பின் அந்த காட்சியில் நடித்த நடிகைக்கே மீண்டும் வந்து இருக்கிறது. அதனை யாரோ ஒருவர் அந்த பெண்ணுக்கு அனுப்பி இருக்கிறார். "உங்களது காட்சி இப்படி பரவலாக வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு இருப்பதை உங்களுக்கு தெரியபடுத்தவே உங்களுக்கு அனுப்பினேன்" என்று அவர் கூறி இருக்கிறார்.

சேக்ரட் கேம்ஸ்

அது ஆபாச வீடியோ எல்லாம் ஒன்றும் இல்லை. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான 'சேக்ரட் கேம்ஸ்' தொடரில் வரும் ஒரு காட்சி அது. அதுவும் அந்த கதையில் வரும் முக்கியமான திருப்புமுனை காட்சி அது.

நவாஸுதின் சித்திக்கும், ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டேவும் இதில் நடித்து இருக்கிறார்கள். நவாஸுதின் கலவியில் மிருகத்தனமாக நடந்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

ஆனால் மெல்ல நிலைமை மாறுகிறது. நவாஸுதின் சித்திக் ராஜ்ஸ்ரீ இடையே காதல் மலர்கிறது. இந்த நெருக்கம் வேறுமாதிரியான மெய்மறந்த இன்பமாக இருக்கிறது. அந்த கதையில் ஒரு நெகிழ்வும், உயிரோட்டமும் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை RAJSHRI DESHPANDE

ஆனால், அந்த காட்சியிலிருந்து கதையை எடுத்துவிட்டு வெறும் ஆபாச வீடியோவாகதான் அந்த காட்சி பகிரப்பட்டு இருக்கிறது. எந்த உயிரோட்டமும் இல்லாத வெறும் விரசமாக மட்டும்தான் அந்த காட்சியை பகிர்கிறார்கள்.

இந்த ஒரு காட்சி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு பகிரப்படுவது, அதுவும் அவருக்கே அனுப்பப்படுவது ராஜ்ஸ்ரீக்கு வருத்தம் அளித்து இருக்கிறது.

ராஜ்ஸ்ரீ , "எனக்கு அவமானமாகவெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால்,மோசமாக உணர்கிறேன். நான் ஏன் அவமானமாக உணர வேண்டும்?" என்கிறார்.

அவருக்கு கதாபாத்திரம் மீது முழுமையான நம்பிக்கை இருந்து இருக்கிறது. அந்த காட்சி அந்த கதைக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அவர் உணர்ந்து இருக்கிறார்.

தான் எதுவும் தவறாக செய்யவில்லை என்று அவர் ஆழமாக நம்புகிறார். அந்த காட்சி பெண்களை பண்டமாக சித்தரிக்கவில்லை என்கிறார்.

கேமிரா அந்த பெண்ணின் அங்கத்தை மேயவில்லை. இரட்டை அர்த்த விரச வார்த்தைகள் அந்த பாடலில் இடம் பெறவில்லை. பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வண்ணம் அந்த பெண் தவறாக காட்டப்படவில்லை. ஆண் பெண் இருவருக்கு இடையிலான காதல்தான் அந்த காட்சியில் இடம் பெற்று இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Netflix

"என்னுடைய நோக்கம் சரி. நான் எதுவும் தவறு செய்யவில்லை"என்கிறார் ராஜ்ஸ்ரீ.

ஆனால் ராஜ்ஸ்ரீ கவலையாக இருக்கிறார். அந்த காட்சி ஆபாசமாக அணுகப்படுவதால் அவர் கவலைக் கொள்ளவில்லை, இதை ஓரளவுக்கு உணர்ந்தே இருந்தார். தவறான நோக்கத்துடன் மட்டும் வெட்டி ஒட்டப்பட்ட அந்தக் காட்சி வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிரப்படுவது அவருக்கு கவலை அளிக்கிறது.

இந்த நாட்களில் பல விஷயங்கள் வைரலாகிறது. ஒரு பெண் கண் அடிப்பது கூட இந்நாட்களில் வைரல் ஆகி விடுகின்றது.

ஆனால், இந்த விஷயம் வேறுவிதமானது. உயிரோட்டமான ஒரு காட்சியில் கதையின் சாரத்தை எல்லாம் எடுத்துவிட்டு பாலுணர்ச்சிக்காக மட்டும் சிறு சிறு க்ளிப்புகளாக இந்த காட்சி பகிரப்படுகிறது.

எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல்

"உங்களுக்கு இதே மாதிரி காட்சி வந்தால் நீங்கள் யோசிக்க வேண்டும். தொழில்நுட்பம் ஒரு ஆயுதம், இதனை கொண்டு ஒருவரை அழிக்கவும் செய்யலாம் அல்லது காக்கவும் செய்யலாம்" என்கிறார் ராஜ்ஸ்ரீ.

திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் சில காலமாக பெண்களின் வெற்றுடல்களை காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை NETFLIX

சில சமயம் அந்த மாதிரியான காட்சிகள் கதைக்கு அவசியமாக தேவைப்படுகின்றன. சில சமயம் வலிந்து திணிக்கப்படுகின்றன. ஆனால், எப்போதும் அது பரவலாக பார்க்கப்படுகிறது.

கதையுடன் எந்த தொடர்பும் இல்லாமல், ஒரு முழு காட்சியின் சில க்ளிப்புகள் மட்டும் வெட்டப்பட்டு ஒரு ஆபாச வீடியோவாக இணையத்தில் பகிரப்படுகிறது, பார்க்கப்படுகிறது.

இதில் என்ன முரண் என்றால், இந்த காட்சியை பார்ப்பவர்கள் குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படுவது இல்லை.

ஆனால், இந்தக் காட்சியை பார்ப்பவர்கள், பார்ப்பதன் மூலம் சந்தோஷமடைபவர்கள், எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பகிர்பவர்கள், அந்த காட்சியில் வரும் பெண்ணை ஆபாச நடிகை என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.

ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே இதற்காக அமைதியாக இருக்கப் போவதில்லை. வெளிப்படையாக இது குறித்த உரையாடலை நடத்துகிறார்.

"மாற்றம் குறித்த நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால், இது குறித்து பேசுவது மிக முக்கியம். இது குறித்த உரையாடலினால் ஐந்து பேர் தங்கள் எண்ண ஓட்டத்தை மாற்றிக் கொண்டால் கூட அது பெரும் வெற்றிதான்" என்கிறார் அவர்.

அவர் வெளிப்படையாக உரையாடலை நடத்த தொடங்கிவிட்டார். அதனால் நான் எழுதியும் விட்டேன். நீங்கள் படிக்கவும் செய்துவிட்டீர்கள். பெண்கள் குறித்த காட்சிகளை வெட்டி ஒட்டி ஆபாசமாக சித்தரிப்பவர்கள், அதில் குதூகலம் அடைபவர்கள் இதனால் கொஞ்சமேனும் யோசிக்க செய்யலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்