சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை

படத்தின் காப்புரிமை spukkato

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சட்டமானால், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்வோருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும். தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை என உள்ளது. மேலும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை 20 ஆண்டு சிறை என்பதாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு தற்போதுள்ள 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 10 ஆண்டுகளாக அதிகரிக்கவும் மசோதா வகை செய்வதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (தமிழ்) - நாடுமுழுவதும் 21 அணுவுலைகள் அமைக்கும் பணி தீவிரம்

நாடு முழுவதும் 21 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருவதாக மத்திய பிரதமர் அலுவலகத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்ததாக தி இந்து (தமிழ்) செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் அணுவுலைத் திட்டங்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, 15,700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் நாடு முழுவதும் 21 அணு உலைகளை மத்திய அரசு அமைத்து வருகிறது. இதில் 9 அணு உலைத் திட்டங்கள் 2024-25-ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ள 12 அணு உலைத் திட்டங்கள் 2031ல் முடிவடையும் என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்ததாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "நியூட்ரினோ மையத்தால் அணைகளுக்கு பாதிப்பில்லை"

படத்தின் காப்புரிமை BBC/GETTY IMAGES

தேனி மாவட்டத்தின் பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையத்தால் வைகை, முல்லைப்பெரியாறு போன்ற அணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மலையை குடைந்து பல நூறு மீட்டர்கள் ஆழத்தில் அமைக்கப்படவுள்ள இந்த ஆராய்ச்சி நிலையத்தால் அருகிலுள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமையவுள்ள முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து ஏதாவது ஏற்படுமா என்பது குறித்து அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியதற்கு, நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ள இடத்தை சுற்றியுள்ள முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்ததாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - "சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வதில் பாகுபாடு ஏன்?"

படத்தின் காப்புரிமை Getty Images

ஆண்களை போன்று பெண்களும் சபரி மலைக்கு சென்று வழிபாடு மேற்கொள்வது அவர்களது அரசமைப்புச் சட்ட உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சென்று வழிபடுவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டுமென்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, கோவிலுக்குள் நுழைவது குறித்து பொதுவான சட்டம் எதுவும் இல்லாதபோது, குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு மட்டும் இயற்கையான உடலியல் செயல்பாடான மாதவிலக்கை காரணம் காட்டி பாகுபாடு காட்டுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நீதிபதிகள் தெரிவித்ததாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: