கிடா சண்டை திருவிழா: அழிந்து வரும் பாரம்பரியத்தை காக்க முயற்சி

அழிந்து வரும் கிடா சண்டையை பாதுகாக்கும் வகையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கிடா சண்டை திருவிழாவில் 150 க்கும் மேற்பட்ட கிடாக்கள் பங்கேற்றுள்ளன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக, கிராமங்களில் ‘கிடா முட்டு‘ எனப்படும் கிடா சண்டை பிரபலம்.

பல மாவட்டங்களில் இந்த விளையாட்டு அழிந்துவிட்ட நிலையில் மதுரை, தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட கோயில் விழாக்களில் மட்டுமே இந்த விளையாட்டு நடந்து வந்தது.

இந்த நிலையில், அரசு அனுமதி பெற்று திண்டுக்கல்லில் கிடா சண்டை போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு அடுத்ததாக, மக்கள் விரும்பி பார்க்க கூடியது கிடா சண்டை.

தற்போது தமிழகத்தில் கிடா சண்டை என்பது அழிந்து விட்டது போல நாட்டு கிடா இனங்களும் அழிந்து வருகின்றன.

இதனை பாதுகாக்கும் வகையில், வீர விளையாட்டான கிடா சண்டையின் முக்கியதுவத்தை இளைஞர்கள் மத்தியில் உணர்த்தும் வகையில், திண்டுக்கல்லில் ஒரு நாள் கிடா சண்டை நடைபெற்றுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, கோவை உட்பட மாநில முழுவதிலும் இருந்து 150 க்கும் மேற்பட்ட கிடாக்கள் பங்கேற்றன.

சண்டையில் பங்கேற்கும் நாட்டு கிடாக்களின் வயது 1 முதல் 10 ஆகும். நாட்டு கிடாக்கள் 2 பல்லு, 4 பல்லு, 6 பல்லு, கிடாபல், இளம் கிடாபல் என 5 வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.

சம வயதுள்ள கிடாக்கள் 60 முறை போட்டி களத்தில் முட்டி கொள்ள வேண்டும். இதில் எந்த கிடா அதிக முறை முட்டி தள்ளுகிறதோ அந்த கிடா வெற்றி பெற்றதாக அறிவிக்கபடும்.

இப்போட்டியில் இரண்டு கிடாக்களும் சம அளவில் முட்டி கொண்டால் இரண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பித்தளை அண்டா மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.

இப்போட்டியை காண திண்டுக்கல், பழனி, மதுரை, அலங்காநல்லூர், தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்து ஆயிரகணக்கானோர் வருகை தந்தனர். கிடா சண்டையை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

தமிழகத்தில் காணாமல் போன பல விளையாட்டுகளின் பட்டியலில் கிடா சண்டை இடம்பெற்றிருந்தாலும், பல கிராமங்கள் இன்னும் இந்த விளையாட்டை முன்னிலைப்படுத்தி வருவது சிறப்புக்குரியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :