வக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
வக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா?

பட மூலாதாரம், Getty Images

அது 2018ஆம் ஆண்டு. சென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது பள்ளி மாணவியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆப்ரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என 16க்கும் மேற்பட்டோர் ஆறு மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்குதல், பாலியல் கல்வியை உறுதிசெய்தல், பெற்றோரின் அணுகுமுறை போன்ற பல விடயங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்படுகிறது.

உதாரணமாக, "தமிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றில் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் நான்கு வயது சிறுமி அங்கு பணிபுரியும் 64 வயது காவலாளியால் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார். பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வடிய அழுதுகொண்டே பெற்றோரிடம் நடந்ததை சொல்ல, நாங்கள் இந்த விவகாரத்தில் நேரடியாக களமிறங்கி குற்றவாளியை போலீசில் ஒப்படைத்துவிட்டு, சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தோம்" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரும், முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரியுமான நிர்மலா.

மேலும், மாநிலத்தின் மற்றொரு பகுதியில், 14 வயது மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளியை மக்கள் ஹீரோ போல பார்த்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவியை ஊரே சேர்ந்து அடிக்கும் மோசமான சம்பவமும் அரங்கேறியதாக கூறும் நிர்மலா, மற்றொரு சம்பவத்தில் இளைஞர் ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தொடர்ந்து இருட்டு அறையிலேயே இருந்து வருவதாவும் கூறுகிறார்.

இதுபோன்ற சம்பவங்கள் நகரங்கள், ஊரகப்பகுதிகள் என்று வேறுபாடின்றி நடந்து வரும் நிலையில், அதுகுறித்த தனது கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார் நிர்மலா.

பட மூலாதாரம், jaminwell

பெற்றோரின் அணுகுமுறை

பெற்றோர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதுடன் தங்களது கடமை முடிந்துவிட்டதைபோன்று இல்லாமல், அவர்களிடம் அன்பாக பழகினாலே குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் வெகுவாக குறையுமென்று நிர்மலா கூறுகிறார்.

குறிப்பாக, குழந்தைகளிடம் அக்கறை என்ற பெயரில் அவர்களிடம் கண்டிப்பாக நடந்துகொள்ளாமல், அன்பாக, நண்பரை போன்று பழகினால்தான் குழந்தைகள் தங்களது மனதிலுள்ள விடயங்களை பகிர்ந்துகொள்வார்கள்.

தனக்கு நேரும் பிரச்சனையை பெற்றோரிடம் கூறினால் அதற்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

பள்ளி மற்றும் பாலியல் கல்வியின் பங்கு

வீட்டில் பெற்றோர் இருவரும் பணிக்கு செல்லும் சூழ்நிலை நிலவும் இக்காலத்தில், குழந்தைகள் பிறந்த ஒரு சில வருடங்களிலேயே அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சேர்க்கப்படுவதால் அவர்கள் குறிப்பிடத்தக்க நேரத்தை பள்ளியிலேயே செலவிடுகின்றனர்.

இந்நிலையில், குழந்தைகள் தங்களது உடல்சார்ந்த மாற்றங்களை புரிந்துகொள்வதற்கும், சீண்டல்களை புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவதற்கும் தயார்படுத்த வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது என்று அவரிடம் கேட்டதற்கு, "குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தை மட்டுமல்லாமல் பாலியல் கல்வியை புகட்டும் கடமை பெற்றோர்களோடு சேர்ந்து ஆசிரியர்களுக்கும் உண்டு. ஆனால், பாடத்திலுள்ள இனப்பெருக்க மண்டலத்தை பற்றி விளக்குவதற்குக்கூட தயங்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்படி பாலியல் கல்வியை கற்பிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது" என்று அவர் கூறுகிறார்.

"60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வக்கிர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு பாலியல் கல்வியை புகட்ட வேண்டியது குழந்தைகளுக்கு மட்டுந்தானா அல்லது வக்கிர குணம் நிறைந்த இவர்களுக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது."

எல்லாவற்றிற்கும் வெளிநாடுகளை எடுத்துக்காட்டாக சொல்லுபவர்கள், பாலியல் கல்வியை கற்பிப்பதில் முன்னோடியாக செயல்படும் மற்ற நாடுகளை பின்பற்ற வேண்டும் என்று நிர்மலா தெரிவித்தார்.

வக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா?

கைபேசியும், இணையதள இணைப்பும் இருந்தால் போதும், வயது வித்தியாசமின்றி அனைவராலும் அனைத்துவிதமான தகவல்களையும் பெற முடியும்.

பட மூலாதாரம், PA

குறிப்பாக, தொழில்நுட்பத்துக்கான அணுகல் வெகு எளிதாக மாறியுள்ள இக்காலத்தில், அதை ஆக்கத்திற்காக மட்டுமின்றி ஆபாச படங்கள் காண்பது போன்ற எதிர்மறையான விடயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார் நிர்மலா.

"தொழில்நுட்பத்தைவிட சினிமாவே அனைத்து வயது பிரிவினருக்கும் மோசமான விடயங்களை அறிமுகம் செய்யும் இடமாக உள்ளதாக நினைக்கிறேன். ஏனெனில், தொழில்நுட்பம் என்பது அனைவருக்கும் எல்லா நேரத்திலும் அணுகக்கூடியதாக இல்லை. குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வக்கிர குண வெளிப்பாட்டுக்கு சினிமாவே காரணம்."

சில மாதங்களுக்கு முன்னர், பள்ளி மாணவன் ஒருவனின் தந்தையிடமிருந்து தங்களது அலுவலகத்துக்கு ஒரு நீண்ட கடிதம் வந்திருந்ததாகவும், அதில் தனது மகன் அவனது ஆசிரியரை ஆபாசமாக காணொளி எடுத்து பார்த்து வருவதாகவும், அவனது செயல்பாடுகளை கண்டு தனக்கு அச்சமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்ததாக நிர்மலா தெரிவித்தார்.

இனம் புரியாமல் மனம் தடுமாறும் காலமான மேல்நிலைப் பள்ளிப் பருவத்தில் இருக்கும் அந்த மாணவனுக்கு தேவை மனநிலை ஆலோசனையே தவிர, தண்டனை அல்ல; அது தீர்வாகவும் அமையாது. மேலும், எதற்கெடுத்தாலும் பயப்படும் வழக்கத்தை பெற்றோர்கள் விடுத்து, அதற்கான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும், நற்குணங்களை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை என்றும் அவர் கூறுகிறார்.

"சீரழிந்து வரும் நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே இளையோரிடையே வளர்ந்து வரும் ஆபாசப் படம் பார்க்கும் பழக்கத்தை நான் காண்கிறேன். எதிர்காலத்தில் இது மிகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு முன்னர், அதை கட்டுக்குள் கொண்டுவருவது அவசியமானது" என அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :