திருப்பூர்: பணிக்கு வந்த பாப்பாள், பள்ளிக்கு வராத மாணவர்கள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலித் பெண் சமையலர் தீண்டாமைக்கு உள்ளான பள்ளியில் சனிக்கிழமையன்று பள்ளியில் படிக்கும் 75 மாணவர்களில், 32 பேர் மட்டுமே வந்துள்ளனர். 43 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

தலித் dalit

ஜூலை மாதம் 16ஆம் தேதி அவிநாசி வட்டாரம் ஒச்சாம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த பாப்பாள் என்பவர் திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று வந்தார்.

அன்றைய நாள் முதலே அப்பள்ளியில் சமைக்க, அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர் அந்த ஊரின் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மக்கள்.

மன உளைச்சலுக்கு ஆளானேன்...

பள்ளி சத்துணவு சமையலர் பாப்பாள் தனது பணி தடுக்கப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

"எனக்கு சொந்த ஊரே இந்த திருமலைக் கவுண்டம்பாளையம்தான். இந்த ஊரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒச்சாம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் 12 வருஷமா சத்துணவு ஊழியரா வேலை பார்த்துட்டு வரேன். சமீபத்தில் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வந்த ஒரு சத்துணவு ஊழியர் ஓய்வு பெற்றார். இதனால் எனக்கு என் சொந்த ஊரிலேயே டிரான்ஸ்பர் கெடச்சுது.

நானும் சந்தோஷமா அந்த ஸ்கூலுக்கு வேலை பார்க்கப் போனேன். செவ்வாய்க்கிழமை அப்பாயின்மெண்ட் ஆர்டரை கொண்டுபோய் கொடுத்துட்டு சமையல் கூடத்துக்குள்ள நுழைஞ்சதுதான் தாமதம்.

ஊர்க்காரங்க சில பேர் கூடிவந்து, "சாதிப் பேரச் சொல்லி திட்டி, உனக்கு அரசாங்க வேலை ஒரு கேடான்னு கூசுர வார்த்தைகளால நோகடிச்சு என்னை அந்த சமையல் கூடத்துல இருந்தே வெளியே போக சொன்னாங்க. டீச்சருங்க கிட்டேப்போய் இவ இங்கே இருந்தா எங்க குழந்தைங்களை ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டோம்னு மிரட்டுனாங்க.

அதிகாரிங்களும் அவங்க சொல்றதை கேட்டுட்டு என்னோட டிரான்ஸ்பரை ரத்து பண்ணிட்டு, பழையபடி, ஒச்சாம்பாளையம் ஸ்கூலுக்கே இப்போ போக சொல்றாங்க. எனக்கு அரசு உத்தரவுப்படி என் ஊரிலேயே பணி பாதுகாப்பு வேண்டும்," என அவர் கோரிக்கை வைக்கின்றார்.

கல்வி பாதிக்கும் என்பதால் தடுத்தேன்...

பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் தெரிவித்தபோது, "6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள எங்கள் பள்ளியில் 75 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி சத்துணவு பிரிவில் சமையலராக பாப்பாள் பணிக்கு சேர்ந்தார்.

அன்றைய தினமே ஊரில் உள்ள குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த சுமார் 30 மாணவ மாணவியரின் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

என்ன காரணம் என்று கேட்டதற்கு, புதிதாக பணிக்கு சேர்ந்த சத்துணவு சமையலர் சமைக்கும் உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடக்கூடாது எனவும், அந்த பெண் இந்த பள்ளியை விட்டு போகும் வரை எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் தெரிவித்தனர்."

"நான் அதற்கு பாட நேரத்தில் மாணவர்களை அழைத்து செல்லவேண்டாம் உணவு இடைவேளையின்போது வேண்டுமானால் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு உங்கள் குழந்தைகளை அழைத்து செல்லுங்கள் என்றேன்.

மீண்டும் அந்த பிரச்சனை அடுத்தநாள் தொடர்ந்ததால் சமையலருக்கு பதிலாக சத்துணவு அமைப்பாளர் உணவை சமைத்தார்.

இதற்கிடையே வட்டார வளர்ச்சி அலுவலரால் சமையலர் பாப்பாள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிக்கு பணியிட மாறுதலுக்கு உத்தரவிடப்பட்டார்.

இந்த பிரச்சனைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தெரிவித்தேன். அவர் மாவட்ட ஆட்சியரிடம் நான் தெரிவித்த பிரச்சனை பற்றி பேசுவதாக கூறினார்," என அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்பதால் இடமாறுதல்....

சத்துணவு சமையலர் பணியிட மாற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி பிபிசி யிடம் தெரிவித்தபோது, "சத்துணவுப் பணியாளர் பாப்பாள் அவர்களின் சொந்த ஊர் திருமலைக்கவுண்டன் பாளையம். அவர் ஒச்சாம்பாளையம் பள்ளியில் பணியாற்றி வந்த நிலையில் அவருடைய விருப்பத்தின் அடிப்படையிலும் திருமலைக்கவுண்டன் பாளையம் பள்ளியில் பணியிடம் காலியாக இருந்ததாலும் இந்த பள்ளியில் பணியில் அமர்த்தப்பட்டார்.

கடந்த 16ஆம் தேதி அவர் பணியில் சேர்ந்த நாள் முதலே சில குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாற்று சான்றிதழை கேட்டு நின்றனர். மேலும் பள்ளியை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிட கூடாது என்பதற்காக பாப்பாள் அவர்களின் பணியை முன்பு பணியாற்றிய பள்ளிக்கு மாற்றினேன்," என்று தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் புகார்...

சத்துணவுப்பணியாளர் பாப்பாள் அவர்களுக்கு பணி மறுக்கப்பட்டது குறித்து சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் கூறும் போது, "பொதுவாக சத்துணவுப்பணியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்கள்தான் அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.

கணவனை இழந்தவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களும் இந்த பணியில் அதிகமாக உள்ள நிலையில் சாதிய அடிப்படையிலான துன்புறுத்தல்கள் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது."

"பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் யார் சமைத்தாலும் அந்த உணவை உண்பார்கள். குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் விதமாக பெற்றோர்கள் தீண்டாமை வன்கொடுமைகளில் ஈடுபடுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒன்று. அலைபேசியில் அழைத்தால் பத்து நிமிடத்தில் நாம் கேட்ட உணவு வீடு தேடி நம்மை வந்து சேர்கிறது.

இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்தான் வேண்டும், இவர் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என ஒரு குறிப்பிட்ட பிரிவை சார்ந்த மக்கள் இன்றளவும் கூறிவருவது கண்டிக்கத்தக்கது."

"குறிப்பிட்ட பிரிவினருக்கு திருமண மண்டபங்கள் மறுப்பு, இரட்டை குவளை முறை, முடி திருத்தும் இடத்தில் பாகுபாடு என 64 வகையான தீண்டாமை வன்கொடுமைகள் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற தீண்டாமை வன்கொடுமைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவில் சமூக நீதி கண்காணிப்பு குழு உள்ளது. இருந்தபோதிலும் அந்த குழு சரியான கண்காணிப்பை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதில்லை."

"கொங்கு மண்டலப்பகுதிகளில் நிலவும் தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்களிடம் புகார் கொடுத்துள்ளோம் சரியான நடவடிக்கைகள் இல்லை.

தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரம் திருமலைக்கவுண்டன்பாளையம் பகுதியில் சத்துணவுப்பணியாளர் பாப்பாள் அவர்களுக்கு எதிராக நடைபெற்ற தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் அவர்களிடம் புகார் மனு அளித்தோம். புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்," என்றார்.

இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை....

சத்துணவுப்பணியாளர் பணியிட மாற்றம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி பிபிசி தமிழிடம் பேசிய போது ,"சத்துணவுப்பிரிவின் உணவுத்தரம், கல்வி உள்ளிட்ட செயல்பாடுகள் மட்டுமே என்னால் கண்காணிக்கப்படுகிறது. சத்துணவுப்பணியாளர்களின் பணிநியமனம், பணியிடமாற்றம் போன்ற நடவடிக்கைகள் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்துக்கொள்கிறார். அதனால் இந்த பிரச்சனையில் என்னால் தலையிட முடியாது என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பிபிசி தமிழிடம் கூறியபோது சார் ஆட்சியர் அடங்கிய குழுவை விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அறிக்கையை பார்த்துவிட்டு அதன் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

ஆட்சியர் உள்பட மாவட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு....

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பாப்பாளுக்கு ஆதரவாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி , தலித் அமைப்புகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

ஆனால் பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால் அவிநாசியை அடுத்துள்ள சேவூர் பகுதியில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதில், பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலாமீதும், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சிமீதும் அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சமையலர் பாப்பாளை திருமலை கவுண்டம்பாளையம் பள்ளியிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் சமையாளர் பாப்பாளை அதே இடத்தில் பணி அமர்த்துவது, மற்றும் தலைமை ஆசிரியர் சசிகலா, ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சத்துணவு பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்த பழனிசாமி, சுப்பிரமணி, ராஜாமணி, மணியாள், ஏழுர் சக்திவேல், சின்னதம்பி, சண்முகம், டிராக்டர்காரர் என 8 பேர் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

84 பேர் மீதுவழக்கு பதிவு

இந்நிலையில் மேற்கண்ட எட்டுப் பேர் உள்பட சாதி இந்துக்கள் 84 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் சேவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வியாழன்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், வருகிற 30 ஆம் தேதி டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாதி இந்துக்கள் தரப்பில் விளக்கம் கேட்க முற்பட்டபோது அவர்கள் யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று பாப்பாள் மீண்டும் பணியில் சேர்ந்தார். அவர் தானே சமைத்ததாகவும் அதனை மாணவர்கள் உண்டாதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :