சிறுமி மீதான பாலியல் தாக்குதல்: அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு பணியில் பெண்கள்

சென்னையில் குழந்தை ஒன்று பாதுகாவலர்களாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவத்தையடுத்து, அந்த அடுக்குமாடி வளாகத்தில் குடியிருக்கும் பெண்களே பாதுகாவல் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை JAMINWELL

சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை. இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அது.

வாசலில் இரு காவல்துறை வாகனங்கள் இருப்பதால், சாலையில் செல்லும் வாகனங்கள் அங்கே சற்றுத் தயங்கி, கேள்விக்குறியுடன் கடந்து செல்கின்றன.

சுமார் 450 குடியிருப்புகளைக் கொண்ட அந்த அடுக்குமாடி வளாகத்தின் மிகப் பெரிய வாசலில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

எரிவாயு சிலிண்டரை ஏற்றிவரும் மூன்று சக்கர வாகனம் வாசலிலேயே நிறுத்தப்பட்டு, அதிலிருப்பவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அங்கே அழைக்கப்பட்டு, அவர்கள் வந்து எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளரை அழைத்துச் செல்கிறார்.

படத்தின் காப்புரிமை FRANCIS DEMANGE/GAMMA-RAPHO VIA GETTY IMAGES

அதேபோலத்தான் அந்த வளாகத்திற்குள் வீட்டு வேலை பார்க்க வரும் பெண் பணியாளர்கள், கொரியர் பணியாளர்கள், உணவு டெலிவரி செய்ய வருபவர்கள் என அனைவரும் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.

"எங்களிடம் எந்தத் தகவலையும் இப்போது கேட்காதீர்கள். இப்போது புதிதாக ஒரு செக்யூரிட்டி சர்வீஸிலிருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு யாரை உள்ளே அனுமதிப்பது அல்லது கூடாது என்பது தெரியாது. அதனால் நாங்கள் நிற்கிறோம்" என்கிறார் பெயரைத் தெரிவிக்க விரும்பாத ஒரு பெண்மணி.

"உங்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால், நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்களோ, வீட்டைப் பாதுகாக்க முயல்வீர்களோ அப்படி நாங்கள் நடந்துகொள்கிறோம்" என்றார் அவர்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, மற்றொருவர் அவரைக் கண்டித்து அழைத்துச் செல்கிறார்.

அந்த வளாகத்தில் வசித்துவந்த காது கேளாத, 11 வயது குழந்தை ஒன்று அங்கு இருந்த பாதுகாவலர்கள், பணியாளர்கள், மின்தூக்கி இயக்குவோர் உள்ளிட்டோரால் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் இந்த வாரத் துவக்கத்தில் வெளியில் வந்தது.

உடனடியாக பணியிலிருந்த பாதுகாவலர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, பெண்களே வாசலைக் காக்கும் வேலையைத் துவங்கினர். இப்போது நான்காவது நாளாக இந்த பாதுகாவல் பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை SPUKKATO

அங்கு வசிக்கும் ஆண்கள், அவ்வப்போது உதவிக்கு வந்தாலும் பெரும்பாலும் பெண்களே அனைவரையும் விசாரித்து உள்ளே அனுப்புகின்றனர்.

"காவலர்களான நாங்கள் கூட உள்ளே போவதில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் மட்டும் உள்ளே சென்று விசாரணை நடத்திவருகிறார்கள்" என்கிறார் வாயிலில் உள்ள துணை - ஆய்வாளர் ஒருவர்.

இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு ஆறுதல் தெரிவிக்கவந்த அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதனும் வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வந்தபோதும் பாதுகாவல் பணியில் இருந்த பெண்கள், அவரிடம் நிலைமையை விளக்கி இப்போது உள்ளே வர வேண்டாம் என்று கூறினர்.

சுமார் 15 பெண்கள், இரவு பகலாக இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒவ்வொரு 'ப்ளாக்'கும் 15 மாடிகளைக் கொண்டது.

சுமார் 450 வீடுகள் இங்கே இருக்கின்றன. எல்லா இடங்களிலிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக வாசலில் உள்ள பலகை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 17 பேர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Image caption கோப்புப்படம்

23 வயது இளைஞரிலிருந்து 66 வயது வரையிலான முதியவர் வரை இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி), 506 (மிரட்டுதல்), போக்சோ சட்டத்தின் பிரிவு 5, 10, 12, தண்டனைச் சட்டத்தின் 328 (போதை ஏற்படுத்தி சேதம் விளைவித்தல்), 341 (அடைத்துவைத்தல்), 376 ஏபி (12 வயதுக்குட்பட்ட குழந்தையை பலாத்காரம் செய்தல்), 376 டிபி (குழந்தையை குழுவாக பலாத்காரம் செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் குழந்தைகள் நலன், பாதுகாப்பு ஆகியவை சரியாக கவனிக்கப்படாத ஒரு விஷயமாகவே உள்ளது என்கிறார் சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக இயங்கிவரும் ‘தோழமை‘ அமைப்பின் தேவநேயன்.

"இம்மாதிரி ஒரு சம்பவம் நடந்த பிறகு, உடனடியாக காவல்துறை மாநில குழந்தைகள் நலக் குழுமத்திற்கு தகவல் தந்திருக்க வேண்டும். குற்றம் நடந்த இடத்திலிருந்து குழந்தை அகற்றப்பட்டு, அதற்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்று நாட்களாக குழந்தைகள் நலக் குழுமத்திற்கு தகவலே தெரிவிக்கப்பட்வில்லை" என்கிறார் தேவநேயன்.

இந்த நிலையில், ‘பாடம்‘ அமைப்பைச் சேர்ந்த நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இதனைச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, இன்று குழந்தைகள் நலக் குழும அதிகாரிகள் குழந்தையைச் சந்தித்ததாகத் தெரிகிறது.

"இதை அவர்கள் உடனே செய்திருக்க வேண்டும். நான் நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகுதான் அதிகாரிகள் குழந்தையைச் சந்தித்திருக்கிறார்கள்" என்கிறார் நாராயணன்.

குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் தண்டனை அளிக்கப்படும் விகிதமும் மிகக் குறைவாக இருப்பதை தேவநேயன் சுட்டிக்காட்டுகிறார்.

2014ஆம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 1065 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வெறும் 73 வழக்குகளில் மட்டுமே தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது.

அதேபோல 2015ஆம் ஆண்டில் 1544 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 133 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2016ல் 1583 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வெறும் 214 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :