மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1,484 கோடி செலவு

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1484 கோடி செலவு

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் மோதி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்கு 1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் பிரதமர் மோதி 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த பயணங்களுக்கு மோதி பயன்படுத்தும் விமானத்தை பராமரிப்பதற்கு மொத்தம் 1,088 கோடியும், தனியார் விமான பயன்பாட்டுக்கு 387 கோடியும், வெளிநாட்டு பயணங்களின்போது பிரதமர் மோதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு 9.12 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக வெளியுறத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி - " தேவசம் போர்டு விதித்திருக்கும் நிபந்தனை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது"

பட மூலாதாரம், Getty Images

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், தேவசம் போர்டு விதித்திருக்கும் நிபந்தனை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"அனைத்து சாதி, மத மக்களும் சென்று வழிபட முடியும். 41 நாள் விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும் வழக்கத்தில் குறிப்பிட்ட வயதிலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களை தவிர்க்க முடியாது என்பதால் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை" என்று சபரிமலை கோயில் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்றால், இப்படி ஒரு நிபந்தனையை கடைபிடிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்றும், சட்டப்படி இப்படி ஒரு நிபந்தனை விதிக்க முடியாது என்றும் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (தமிழ்) - புதுசேரிக்கு மாநில அந்தஸ்து - தீர்மானம் நிறைவேற்றம்

பட மூலாதாரம், Getty Images

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, நேற்று சட்டப்பேரவையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்துக்கு காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர். சரக்கு மற்றும் சேவை வரியை பொருத்த வரையில் புதுச்சேரியை மாநிலங்களுக்கு இணையாக கருதி நிதியை பிரித்து கொடுத்து வருகிறது. இச்சூழலில் புதுச்சேரியை மாநிலமாக மாற்றுவது அவசியமானதாகிறது என்று நாராயணசாமி கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - சென்னை பயணத்தை ரத்து செய்த ஸ்விட்சர்லாந்து வீராங்கனை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் சென்னையில் நடைபெறும் இளையோருக்கான உலக ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று ஸ்விட்சர்லாந்து பெண்கள் அணியின் முக்கிய வீராங்கனை அறிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ள அமெரிக்க, ஆஸ்திரேலிய அணியினரும் பெண் வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மேலும் தங்கள் அணியினரை வெளியே செல்லவேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பான ஆடைகளை அணிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :