பிரதமர் மோதியை ஆரத்தழுவிய ராகுல்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ருசிகரம்

மத்திய பாஜக அரசின் மீது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின்போது யாரும் எதிர்பாராதவிதமாக பிரதமர் நரேந்திர மோதியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கட்டியணைத்தார்.

படத்தின் காப்புரிமை LSTV

பிரதமர் மோதியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் அரசியல் ரீதியாக ஒருவர் மீது ஒருவர் சமீப மாதங்களில் கடுமையான கருத்துக்களை பரிமாறி வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நடந்த இந்த நிகழ்வு முற்றிலும் எதிர்பாராத ஒன்றாகவும், வியப்பளிப்பதாகவும் கருதப்படுகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் காலை 11 மணிக்கு தொடங்கியது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய மக்களைவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடக்கும் என்றும், தான் மதிய உணவு இடைவேளைக்கு செல்லப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி பல கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய நிலையில், பகல் 1 மணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்த தீர்மானத்தின் மீது உரையாற்ற தொடங்கினார்.

அப்போது ராகுல் காந்தியும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக மோதிக் கொண்டனர். ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த சில கருத்துக்களுக்கு நிர்மலா சீதாராமன் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

''ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறியது பாஜக. ஆனால், அது நடக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார்'' என்று ராகுல் காந்தி தனது உரையில் குற்றம்சாட்டினார்.

''என் கண்ணை பார்த்து பிரதமர் மோதி பேச வேண்டும். ஆனால், அவர் அதனை தவிர்க்கிறார். மேலும், பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும்'' என்று ராகுல்காந்தி தனது உரையில் தெரிவித்தார்.

2 மணி அளவில் தனது உரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, பிரதமர் மோதியின் இருக்கைக்கு சென்று அவருடன் கைகுலுக்கினார். அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இது போதாது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். உடனே பிரதமர் மோதியை ராகுல்காந்தி ஆரத்தழுவினார். மோதியும் ராகுல்காந்தியை செல்லமாக தட்டினார். பின்னர், இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக, கடந்த 18-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பாஜக அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இது தொடர்பாக தமிழக கட்சிகளான திமுக, அதிமுகவைச் சந்தித்து ஆதரவு கேட்பதற்கு தெலுங்குதேசம் எம்.பி.க்கள் குழுவினர் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :