சரமாரி வார்த்தைப் போர்: நரேந்திர மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

படத்தின் காப்புரிமை EPA

இந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், 325 வாக்குகளும் கிடைத்தது. மொத்தம் 451 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்களித்தனர்.

படத்தின் காப்புரிமை LSTV
Image caption மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி பல கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய நிலையில், பகல் 1 மணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றினார்.

இறுதியில், தனது அரசுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோதி இரவு சுமார் 10.15 மணிக்கு தனது பதிலுரையை தொடங்கினார்.

'ராகுலின் கண்ணை பார்த்து பேசவேண்டிய அவசியம் இல்லை'

காங்கிரஸின் செயல்பாடுகளை நகைச்சுவையுடன் விமர்சித்த நரேந்திர மோதி, தனது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.

தனது கண்ணை நேருக்கு நேராக பார்த்து பிரதமரால் பேசமுடியாது என்ற ராகுலின் விமர்சனத்திற்கு, ''ஆமாம்! நான் பின் தங்கிய, ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன், உங்களைப்போன்ற வசதியான குடும்பத்தை சேர்ந்தவரின் கண்ணோடு கண் பார்த்து பேசமுடியுமா?'' என்று வினவினார்.

காங்கிரஸை நம்பிய சரண்சிங், சந்திரசேகர் போன்ற முன்னாள் பிரதமர்களையும், ஜெய் பிரகாஷ் நாரயணன், வல்லபாய் படேல், பிரணாப் முகர்ஜி என நம்பியவர்களை அந்த கட்சி கைவிட்டதாக பிரதமர் மோதி விமர்சித்தார். எனவே, தனக்கு ராகுல் காந்தியின் கண்ணைப் பார்த்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நரேந்திர மோதி கூறினார்.

படத்தின் காப்புரிமை LSTV

''நாங்கள் ஆட்சியில் இருப்போம், நாங்கள் இல்லையென்றால் நாட்டில் நிலைத்தன்மையை நீடிக்க விடமாட்டோம் என்று கருதும் காங்கிரஸ், இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் சதிச் செயல்களை செய்கிறது'' என்று சாடினார் பிரதமர் மோதி.

தலித், பின்தங்கியவர்கள், ஏழைகள், விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க முயலாமல், குறுக்குவழியில் வெற்றி பெற விரும்புகிறது காங்கிரஸ் என்று கூறிய அவர், அம்பேத்காரின் கொள்கைகளை எள்ளி நகையாடிய அந்த கட்சி இன்று அவரின் பெயரில் வாக்கு கேட்கிறது என்று குற்றம் சாட்டினார்.

''ஒரு குடும்பத்தின் கனவு, ஆசைக்கு எதிராக யாரை வேண்டுமானாலும்,ஏன் நாட்டின் நலனையும் பந்தயமாக வைக்கிறார்கள்'' என்று பிரதமர் மோதி காங்கிரஸை சாடினார்.

பொருளாதார முன்னேற்றம், வங்கி சீர்திருத்தம், மின்சார வசதியை பரவலாக்கியது, சர்வதேச அளவில் இந்தியாவை பெருமைப்படுத்துவது என பல்வேறு விஷயங்களை தந்து அரசின் சாதனைகளாக அவர் கோடிட்டு காட்டினார்.

அரசியல் லாபங்களுக்காக தெலங்கானா உருவக்கப்பட்டது

18 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாயின் ஆட்சியில் உத்தராகண்ட், ஜார்கண்ட் என மூன்று மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அமைதியாக நடைபெற்ற மாநில பிரிப்பு நடவடிக்கை, ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும்போது சிக்கலாக உருவெடுத்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

நாட்டின் நலனுக்காக அல்ல, அரசியல் லாபங்களுக்காக தெலங்கானா உருவக்கப்பட்டது என்று கூறிய பிரதமர், மாநிலத்தை பிரிக்கும்போது, இரண்டில் ஒன்றாவது தங்களுக்கு கிடைக்கும் என்ற காங்கிரஸின் ஆசை, நிராசையாகிவிட்டது என்று கூறினார்.

''சிறப்பு சலுகை ஒரு மாநிலத்திற்கு கொடுத்தால் அதன் தாக்கம் பிற மாநிலங்களுக்கும் ஏற்படும். இருந்தபோதிலும், சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் மாநிலங்களுக்கு நிகராக ஆந்திராவுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை கொடுத்திருக்கிறோம். அதை ஏற்றுக்கொண்ட மாநில அரசு மத்திய நிதியமைச்சருக்கு நன்றி சொன்னது'' என்று அவர் நினைவுகூர்ந்தார்.

நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தயாராக இருந்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி பிரிந்தபோது, ஒய்.எஸ்.ஆரின் வியூகத்தில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்தேன். நிலைமையை ஆந்திர மாநிலமும் அறியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

''நாங்கள் நாட்டின் பாதுகாவலர்கள், ஏழைகளின், விவசாயிகளின், இளைஞர்களின் நன்மையில் பங்களிப்பவர்கள், உங்களைப் போல் வியாபாரிகள் அல்ல'' என்று பிரதமர் மோதி மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக, ஆவேசத்துடன் பாஜக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கி, நீண்ட உரையாற்றி, சில பரபரப்புக்களையும் ஏற்படுத்தினார் ராகுல் காந்தி.

அப்போது ராகுல் காந்தியும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக மோதிக் கொண்டனர். ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த சில கருத்துக்களுக்கு நிர்மலா சீதாராமன் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

''ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறியது பாஜக. ஆனால், அது நடக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார்'' என்று ராகுல் காந்தி தனது உரையில் குற்றம்சாட்டினார்.

''என் கண்ணை பார்த்து பிரதமர் மோதி பேச வேண்டும். ஆனால், அவர் அதனை தவிர்க்கிறார். மேலும், பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும்'' என்று ராகுல்காந்தி தனது உரையில் தெரிவித்தார்.

2 மணி அளவில் தனது உரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, பிரதமர் மோதியின் இருக்கைக்கு சென்று அவருடன் கைகுலுக்கினார். அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இது போதாது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். உடனே பிரதமர் மோதியை ராகுல்காந்தி ஆரத்தழுவினார். மோதியும் ராகுல்காந்தியை செல்லமாக தட்டினார். பின்னர், இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

படத்தின் காப்புரிமை LSTV

முன்னதாக, கடந்த 18-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பாஜக அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :