நாப்கின்கள் மீதான வரி விலக்கு: காலதாமதமான நல்ல முடிவா? பா.ஜ.கவின் அரசியல் தந்திரமா?

சானிட்டரி நாப்கின்கள் மட்டும்தான் பெண்களின் சுகாதார பிரச்சனையா? படத்தின் காப்புரிமை Getty Images

பெண்கள் உபயோகப்படுத்தும் சானிடரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

முன்னதாக, நாப்கின்களுக்கு வரி விதிக்கப்பட்டதற்கு தீவிர எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பல போராட்டங்களும் நடத்தப்பட்டன. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நாப்கின்கள் மீதான வரி, முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், நாப்கின்கள் மட்டும் பெண்களின் சுகாதார பிரச்சனையல்ல என்று சிலர் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த வரி விலக்கு பா.ஜ.கவின் அரசியல் தந்திரம் என்று கூறுகின்றது ஒரு தரப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

வரி விலக்கு வரவேற்கத்தக்கது என ஒரு தரப்பினர் சொன்னாலும், இது பா.ஜ.கவின் அரசியல் தந்திரம் என்று கூறுகிறது மற்றொரு தரப்பு

"வரி விலக்கு மகிழ்ச்சியளிக்கிறது"

"எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். விலை அதிகமான நாப்கின்கள் வாங்க முடியாத பெண்களுக்காக மகிழ்ச்சி கொள்கிறேன்."

இது பிபிசியிடம் பேசிய சர்மீனா இஸ்ரார் கூறியது.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பிஎச் டி பயின்று வரும் 27 வயதான சர்மீனா, நாப்கின்களுக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுகுறித்து சர்மீனா பேசுகையில், "நான் பிறந்தது உத்தர பிரதேச மாநிலத்தில் பிலிபீத் என்ற சிறிய கிராமத்தில்தான். என் ஊரில் இருக்கும் பெண்கள், மாதவிடாயின் போது செய்தித்தாள் துண்டுகள், மணல் ஆகியவற்றை பயன்படுத்தியதை நான் பார்த்திருக்கிறேன்" என்றார்.

படத்தின் காப்புரிமை ZARMINA ISRAR KHAN / FACEBOOK
Image caption சர்மீனா இஸ்ரார்

"எனக்கு அவர்களின் வலி புரியும். நான் ஒரு பெண், சமூகவியல் படித்து வருகிறேன். இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதும் எனக்கு தெரியும். ஏழை மக்கள் கஷ்டப்படுவதை பார்த்ததினால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்."

இது தொடர்பாக ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் பல விவாதங்கள் நடந்தன. ஆனால் யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார் அவர்.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பொட்டு, குங்குமம், மஸ்காரா மற்றும் கான்டம் போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்படாத போது, சானிடரி நாப்கின்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது ஏன் என்பதே என் கேள்வி.

என் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், 31 உறுப்பினர்கள் இருக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லையா என்று கேள்வி எழுப்பியது. நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் முன்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திடம் கலந்தாலோசிக்கப்பட்டதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நாப்கின்கள் மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்து மத்திய அரசு எடுத்த முடிவு, காலதாமதமானது என்றாலும், இது நல்ல முடிவாக உள்ளதாக சர்மீனா கூறுகிறார்.

"பெண்களின் அடிப்படை தேவையான நாப்கின்கள்"

சானிடரி நாப்கின்கள் மீது 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்ததற்கு எதிராக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் பிபிசியிடம் பேசுகையில், "வரி நீக்கப்பட்டது என்ற மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்" என்று தெரிவித்தார்.

நாப்கின்கள் மீது வரி விதிக்கப்பட்டது பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், தற்போது வரி விலக்கப்பட்டுள்ளதால் கிராமங்களில் இனி இது சிரமமில்லாமல் கிடைக்கும் என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY

"இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படும் முன்பு பெண்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசியலிலும், கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் அதிகளவில் பெண்கள் இல்லாததால் இது போன்ற பிரச்சனைகள் எழுவதாகவும்" சுஷ்மிதா தெரிவித்தார்.

சானிடரி நாப்கின்கள் மட்டும்தான் பெண்களின் சுகாதார பிரச்சனையா?

ஆனால், மாதவிடாய் பிரச்சனையை தவிர பெண்களுக்கு பல்வேறு சுகாதார பிரச்சனைகள் இருக்கிறது என்கிறார் சமூக செயற்பாட்டாளர் கீதா நாராயண். பெண்களின் பல பிரச்சனையில் இதுவும் ஒன்று என்கிறார் அவர்.

"சுகாதாரத்தை பொதுவாக வைக்க வேண்டும். நம் சுகாதார உரிமை என்பது சானிடரி நாப்கின்கள் மட்டும் கிடையாது. எனக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டால், உடனடி மருத்துவ வசதி அப்பகுதியில் இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

சில நாப்கின்களால் கேன்சர் வரக்கூடும் என்று கூறப்படும் விஷயங்களுக்கெல்லாம் நம்மிடம் பதில் இல்லை என்று குறிப்பிட்ட கீதா, சானிடரி நாப்கின்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விலக்கை ஒரு பெரிய விஷயமாக பார்க்க முடியாது என்றார்.

"வரி விலக்கின் பின்னால் உள்ள அரசியல்"

படத்தின் காப்புரிமை Getty Images

2019ஆம் ஆண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், கிராமங்களில் இருக்கும் பெண்கள் இன்றும் மாதவிடாயின்போது துணியைதான் பயன்படுத்துகிறார்கள் என்றார்.

நாப்கின்கள் மீதான வரிவிலக்கு அடித்தட்டு மக்களின் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்றும் நாச்சியாள் கூறினார்.

"தேர்தல் முடியும் வரை பெண்கள், விளிம்பு நிலை மக்கள், மற்றும் நடுத்தர மக்களை அமைதிப்படுத்த இதுபோன்ற அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கும். இவையெல்லாம் பா.ஜ.கவின் அரசியல் தந்திரங்கள் என்றும் ஏமாற்று வேலை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

(பிபிசி இந்தி சேவையின் சிந்துவாசினி திரிபாதி சேகரித்த தகவல்களும் இந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :