நாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது"

ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள் வெளி உலகத்திற்கு தெரிகின்றன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

மதுரை ஆரப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறாக கூறியதாக விவரிக்கும் அந்நாளிதழ், "ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமித்ஷாவின் கருத்து பொதுவாக சொல்லப்பட்டது. அ.தி.மு.க. தான் என்று அவர் குறிப்பிட்டு கூறவில்லை. ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள் வெளி உலகத்திற்கு தெரிகின்றன.

ராகுல்காந்தி வளர்ந்து வரக்கூடிய ஒரு இளம் தலைவர். அவருடைய தந்தை ராஜீவ்காந்தி போல, எளிமையாக பழகுவார். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி, மோடியை கட்டிப்பிடித்தது அரசியல் நாகரிகமானது.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக அ.தி. மு.க. வாக்களித்தது. இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்" என்று அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "நூறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறைப்பு"

படத்தின் காப்புரிமை Getty Images

ஏறத்தாழ நூற்றுக்கும் மேலான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ள செய்தி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடுத்தர வர்கத்தின் வாக்குகளை கவரும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறது அந்நாளிதழ், இதனால் அரசாங்கத்திற்கு 15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்றும் விவரிக்கிறது.

தி இந்து தமிழ்: "கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை மறைக்க முற்படுகின்றனர்"

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை மறைக்க முற்படுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

"ஈரோட்டை அடுத்த கொடுமணல் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பிரம்மி எழுத்துகள், அமெரிக்காவில் உள்ள பழம்பெரும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்து பிறப்புக்கு முன்பு 350-லிருந்து 375 ஆண்டுக்கு காலத்து எழுத்துகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா மொழிகளைவிட தொன்மையான மொழி தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். நம்முடைய பூமி பழமையானது என்று நம்முடைய பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். தமிழரின் நாகரீகம் பழமையான நாகரீகமாகும். பழமையான நாகரீகம் என்று கீழடியை கூறுகின்றனர். கீழடி நாகரீகம் என்பது பழமையானது என்று கூறும்போது, அதனை மறைக்க முற்படுகின்றனர்.

பண்டைய காலத்தில் போர் தொடுத்து வந்து நம்முடைய வரலாற்று சின்னங்களை அழித்தார்கள். இப்போது நம்முடைய அறியாமையால் அழித்து வருகிறோம். நமது வசிப்பிடம் அருகே உள்ள பழமையான கல்வெட்டுகள், பொருட்களை பார்த்தால், அது குறித்து அரசு அலுவலர்கள் அல்லது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய வரலாற்றை அழியாமல் பாதுகாக்க முடியும். நம்முடைய தொன்மையான வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும்." என்று அவர் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: "கட்டடத்தின் சாரம் சரிந்து விபத்து"

சென்னை கந்தன்சாவடியில் சனிக்கிழமை கட்டட சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் இறந்தார். 23 பேர் காயமடைந்தனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை 8 தளங்களுடன் கூடிய கட்டடத்தை சில மாதங்களுக்கு முன்பிருந்து கட்டி வருகிறது. இப்பணியில் பிஹார், ஒடிஸா மாநிலங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 தளங்கள் கட்டப்பட்ட நிலையில், அந்தக் கட்டடத்தின் அருகிலேயே ஜெனரேட்டர் வைப்பதற்கு 9 அடி உயரத்தில் அண்மையில் இரும்பு மேடை அமைக்கப்பட்டது. இந்த மேடை இரும்பு தூணில் இருந்தது. இந்த மேடையின் மேல்பகுதியில் கூரை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

பலவீனமாக இருந்த அந்த மேடையின் இரும்புத் தூண்கள் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் திடீரென சரிந்து, அருகே இருந்த 4 மாடி கட்டடத்தின் இரும்பு சாரத்தின் மீது விழுந்தது.இதில் ஜெனரேட்டரும் இரும்பு சாரத்தின் மீது விழுந்ததால், சாரம் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இதனால், தரைத்தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இரும்பு சாரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர்" என்று விவரிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்