சேலம் மற்றும் தருமபுரியில் நில அதிர்வு

சேலம் மற்றும் தருமபுரியில் சில இடங்களில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் 3.3 அளவு நில அதிர்வு பதிவாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டத்தை பொது மக்கள் உணர்ந்தனர்.

காலை 7.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு சில பகுதிகளில் 3 வினாடியும் பல பகுதிகளில் 5 வினாடிக்கு மேலும் நீடித்தது.

நில அதிர்வு ஏற்பட்ட போது கட்டடங்கள் லேசாக அசைந்ததாகவும், சத்தம் கேட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

சேலம் நகர் பகுதியான கருங்கல்பட்டி, ஆனத்தா பாலம், முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி, பேர்லண்ட்ஸ், உள்ளிட்ட பகுதிகளிலும், இதே போல, ஓமலூர் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி, டேனீஸ்பேட்டை, தீவெட்டிபட்டி, உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் நில அதிர்வை பொது மக்கள் உணர்ந்தனர்.

நில அதிர்வு காரணமாக பீதியடைந்த பொது மக்கள் உடனடியாக வீதியில் திரண்டனர். திடீரென நிகழ்ந்த நில அதிர்வால் நகர்புற மற்றும் கிராம பகுதி மக்களிடையே சிறிது நேரம் அச்சம் நிலவியது. வீடுகளில் பாத்திரங்கள் உருண்டோடியதுடன், பல இடங்களில் வலுவிழந்த கட்டிடங்களில் விரிசலும் ஏற்பட்டது.

இதே போல, காவிரி நீர்பிடிப்பு பகுதிக்கு அருகில் உள்ள ஏரியூர், பழையூர், சின்னாம்பள்ளி ஆகிய பகுதிகளிலும் சில வினாடிகள் வரை நில அதிர்வை உணர்ந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நில அதிர்வை பதிவு செய்யும் கருவி பழுதடைந்த காரணத்தினால், அதன் அளவு என்பது உடனடியாக அறித்துகொள்ள முடியவில்லை.

சென்னை ஆய்வு மையத்திலிருந்து பெற்ற தகவல்களை வைத்து, சேலம் மற்றும் தருமபுரியில் 3.3 அளவுக்கு நில அதிர்வு பதிவானதாக சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்