கந்தன்சாவடி கட்டட விபத்து : பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனமின்மை காரணமா?

சென்னைகந்தன்சாவடி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்துவிழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 32 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு தொடங்கிய மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகக் கூறிய அதிகாரிகள், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தற்போது கூற இயலாது என்றும், காரணங்களை ஆய்வு செய்துவருவதாகவும் தெரிவித்தனர்.

விபத்தில் பலியான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர், பப்லூவின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து, மீட்புப்பணிகளை மேற்கொண்ட தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஆணையர் ராஜேந்திர ரத்னு பிபிசி தமிழிடம், ''இந்த கட்டடவிபத்து பற்றி தகவல் தெரியவந்ததும், உடனடியாக மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. விபத்து நடந்த தெரு சுமார் 30 அடி அகலமாக இருந்ததால் எங்களால் கிரேன் போன்ற இயந்திரங்களை உடனடியாக கொண்டு செல்ல முடிந்தது. இரும்பு கம்பிகளை அறுத்து எடுத்து, இடிபாடுகளில் இருந்தவர்களை மீட்டோம். உயிர்ச்சேதங்களை முடிந்த அளவு கட்டுப்படுத்துவது என்பதை இலக்காக வைத்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன,'' என்று தெரிவித்தார்.

மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததால் அருகில் உள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளின் மேல்தளத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், ''பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் சேதங்களை கணக்கெடுத்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் பூர்வாங்க அறிக்கையைக் கொண்டு இந்த விபத்து நடந்ததற்கான காரணங்களை அறியமுடியும்.''என்று தெரிவித்தார்.

கந்தன்சாவடியில் ஏற்பட்ட விபத்து குறித்து ஊடகங்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "கட்டுமானப் பணிகளின்போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம் என்று கூறினார். மருத்துவமனை கட்டுமானம் குறித்து ஆய்வறிக்கை வந்தவுடன், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

கந்தன்சாவடி விபத்திற்கான முழுப்பொறுப்பையும் கட்டிடத்தை அமைத்துவந்த ஒப்பந்ததாரரும், உரிமையாளரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் சென்னையை சேர்ந்த தொழில்முறை பொறியாளர் எல்.நடராஜன்.

''மீட்பு பணிகள் தொடர்பான படங்களையும், காட்சிகளையும் பார்த்தபோது, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பிற்காக தலைக்கவசம் கூட அளிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் மீது தவறில்லை என்றே தோன்றுகிறது. இதுபோன்ற பெரிய கட்டட பணிகள் மேற்கொள்ளும்போது, பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டுவதற்கும் மருத்துவமனை போன்ற ஒரு கட்டடத்தை கட்டுவதற்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டடப்பணிக்கும் பாதுகாப்பு அம்சங்கள் வேறுபடும்,'' என்றார் பொறியாளர் நடராஜன்.

சாரம் இடிந்துவிழுந்துள்ளதால் மருத்துவமனை கட்டுமானத்தை தொடங்கியபோது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டனவா என்றும் கேட்கப்படவேண்டும் என்கிறார் நடராஜன்.

''இதுபோன்ற பணிகள் நடைபெறும்போது, கட்டட பணிகளுக்கான மேற்பார்வையாளர் கட்டாயமாக அந்த இடத்தில் இருந்திருக்கவேண்டும். சாரம் பலமாக உள்ளதா, பாரத்தை ஏற்றும் அளவுக்கு பாதுகாப்பு உள்ளதா என்று மேற்பார்வையாளர் சோதனை செய்தபிறகுதான் பணிகள் தொடங்கவேண்டும். இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொழிலாளர்களாக உள்ளனர் என்பதால் கட்டட பொறியியலாளர்கள் உடன் இருந்தார்களா என்றும் பார்க்கவேண்டும்,'' என்று மேலும் தெரி்வித்தார் நடராஜன்.

கடந்த 2014 ஆண்டில் சென்னை மௌலிவாகம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவந்த 11மாடி கட்டிடம் இடிந்துவிழுந்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் 61 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தன்சாவடி விபத்தை அடுத்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பொறியியலாளர் முருகேசன் மற்றும் மேற்பார்வையாளர் சிலம்பராசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தரமணி பகுதியின் துணை ஆணையர் மகேஸ்வரி பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

''பாதுகாப்பில்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்டதற்காக இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தில் 279,304 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இவர்கள் இருந்தார்கள் என்பதால் இவர்களிடம் விசாரணை செய்துவருகிறோம்,'' என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்