கேள்வி கேட்டாலே சீர்குலையும் நிலையிலா இருக்கிறது சமூக நல்லிணக்கம்?

இந்திய தத்துவ ஞான விவாதங்கள் மிக ஆழமானவை. மாறுபட்ட கொள்கைகளில் வேரூன்றியவை. நமது இலக்கியப் பாரம்பரியத்தில் சமயம், கடவுள் நம்பிக்கை ஆகியவை மட்டுமல்ல சாங்கியம், சாருவாகம் ஆகிய தத்துவக் கருத்துகளுக்கும் இடம் உண்டு.

சாங்கியம் சாருவாகம் ஆகியவை கடவுளை நம்பாத, பொருள்முதல்வாத வகையை சேர்ந்த, புராதன இந்திய தத்துவஞானப் பிரிவுகள்.

படத்தின் காப்புரிமை MAHESH.KATHI/SWAMIPARIPOORNANANDAOFFICIAL/FACEBOOK
Image caption கத்தி மகேஷ் மற்றும் சுவாமி பரிபூரணானந்தா

நாத்திக சமாஜத்தின் நிறுவனரா கோரா எனப்படும் கோபராஜு ராமச்சந்திர ராவும் இத்தகைய ஒரு தத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.

மகாத்மா காந்தியுடன் விவாதங்கள் நடத்தியவர் இவர். இது போன்ற பின்னணியில் காப்பியக் கதாபாத்திரமான ராமனை விமரிசித்தாலும் அது நமக்கு புதிதாக தெரிவதில்லை.

பகுத்தறிவு வாதிகள், இடது சாரிகள், தலித்தியவாதிகள், பெண்ணுரிமைவாதிகள் என பல தரப்பட்டவர்களின் விமர்சனங்கள் பூத்துக்குலுங்குவது தெலுங்கு பண்பாட்டுத் தளம்.

இந்தப் பிரச்சினைகள் குறித்து பேசுவதில் தற்போது காணப்படுவதைப் போன்ற ஒரு சகிப்பின்மை முன்பு இருந்ததில்லை.

ஹைதராபாத்தை சேர்ந்த கத்தி மகேஷ் என்பவர் ராமரை பற்றி விமரிசித்ததால் ஒரு தரப்பினர் மனம் புண்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் தெலங்கானா டிஜிபி மகேந்தர் ரெட்டி உத்தரவின் பேரில் அவர் ஹைதராபாத்தை விட்டு ஆறு மாதங்களுக்கு வெளியேற்றப்பட்டார்.

மகேஷ் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் என்பதால் குறி வைக்கப்படுவதாக இன்னொரு தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.

ராமர் குறித்த மகேஷின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுதும் யாத்திரை செல்லவிருப்பதாக பரிபூர்ணானந்தா என்பவர் அறிவித்தார். இதையடுத்து அவரும் வெளியேற்றப்பட்டார். இந்தக் கருத்துகள் கடுமையாக இருந்திருக்கலாம். சிலர் தாங்கள் புண்பட்டதாக கூறியிருக்கலாம்.

ஊடகங்களை கவர கூட அவர் வரம்பு மீறி பேசியிருக்கலாம் என கூறப்பட்டது. கத்தி மகேஷ் மற்றும் பரிபூர்ணானந்தா ஆகியோரின் தனிப்பட்ட ஆளுமை குறித்த விமர்சனமாக பார்ப்பதைவிட அதை விரிவான பின்புலத்தில், கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியுள்ளது.

அப்படிச் செய்வதுதான் ஜனநாயக உணர்வு, சட்டத்தின் ஆட்சி, நவீனத்துவம்.

இந்த மாற்றங்களை புரிந்துகொள்ள தேசம் முயன்றுகொண்டுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் இது தொடர்பாக இன்னொன்றும் நடந்துள்ளது. மதவிமர்சனம் தொடர்பான மேற்கு வங்க அரசின் உத்தரவு, மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய பேச்சுகள் அனைத்தையும் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்தும் என அந்த மாநில அரசு கூறியுள்ளது. இது ஒரு புதிய போக்கு.

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி ஊரை விட்டு வெளியேற்றும் உத்தரவு மூலம் உறுதியான சில சமிக்ஞைகளை தெரியப்படுத்த தெலங்கானா அரசு விரும்புவது போல் தெரிகிறது. இல்லாவிட்டால் இது போன்ற சிறிய சம்பவங்களுக்கு கூட டிஜிபி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்கமாட்டார்.

ஆனால் தெலங்கானா அரசின் இந்த உத்தரவு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானதாக கருதப்படுகிறது. இச்செயல் இரு கேள்விகளையும் எழுப்புகிறது. போலீஸின் அதிகார வரம்பு எது வரை என்பதே அந்தக் கேள்வி. அரசுகளுக்கும் அரசமைப்பு சட்டத்திற்கும் உள்ள தொடர்புகள் என்ன என்பது மற்றொரு கேள்வி.

மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்ற பெயரில் கேள்வி கேட்பதை தடுப்பது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை தடுக்காதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த போக்கு வளர்வது அடிப்படை மனித உரிமைகளை நசுக்குவது போல் இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

மத உணர்வை புண்படுத்துகிறார் என யாரையும் ஊரை விட்டு துரத்தி விட முடியுமா? சமத்துவமின்மை நிறைந்த இந்த சமூகத்தில் யாருக்காக இந்த அதிகார வர்க்கம் செயல்படுகிறது.

புராணப் பாத்திரங்களை விவாதப் பொருளாக்கினால் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த காலத்தில் அது எத்தகைய விளைவுகளை உருவாக்கும்? மத ஆதிக்கவாதிகளின் ஆட்சியில் எதிர்மறையான கருத்துகள் அடக்கி ஒடுக்கப்படுகிறதா? இவ்வாறெல்லாம் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

அறிவியல் பார்வையை வளர்ப்பது குடிமகனின் அடிப்படை கடமைகளில் ஒன்று என அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 51ஏ சொல்கிறது.

சுதந்திரமான கருத்து பரிமாற்றத்துக்கு வழியில்லாவிட்டால் அறிவியல் பார்வையை வளர்க்க வாய்ப்பே இல்லை.

நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளை கேள்வி கேட்பது அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கடமைகளை நிறைவேற்றும் செயல்.

கருத்துவேறுபாடுகள் இருந்தால்தான் கேள்விகளே பிறக்கின்றன. கத்தி மகேஷின் கருத்தாலோ பரிபூரணானந்தாவின் யாத்திரையாலோ சமூக ஒழுங்கு குலைந்துவிடும் அளவுக்கு நம் சமூகம் பலவீனமாக இருக்கிறதா?

இந்து மத சாதி கட்டமைப்பு குறித்தும் அதன் மத தொடர்புகள் குறித்தும் ஆழமான கேள்விகளை எழுப்புகிறார் டாக்டர் பி்ஆர் அம்பேத்கர்.

சமூக நடைமுறைகளை விமரிசிப்பவர்களை ஒடுக்கும் காவல்துறையின் செயல், அரசமைப்பு சட்டத்தின் நோக்கத்துடனும் அதை உருவாக்கியவர்களின் எண்ணத்துடனும் ஒத்துப்போகிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

அம்பேத்கருக்கு பிரம்மாண்டமான சிலையை அமைக்க தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. பாராட்டக்கூடிய விஷயம் இது. ஆனால் அம்பேத்கரின் உணர்வுகளையும் அரசமைப்பு சட்டத்தையும் காக்க அந்த அரசு செய்தது என்ன?

அரசு நிர்வாகத்திற்கு தனி நபர்களின், குழுக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களுக்கேற்ப செயல்பட்டாலே போதுமானது.

இதற்கு உதாரணமாக ஷம்பாஜி பிடேவை சொல்லலாம். இவரை தனது ஆசான் போன்றவர் என கூறியவர் பிரதமர் நரேந்திர மோடி. துக்காராம் யாத்திரைக்கு அன்மையில் சென்றிருந்த பிடே மனுஸ்மிருதியைப் புகழ்ந்தார். மனுஸ்மிருதி என்பது தவறு எத்தகையது என்பதை வைத்து தண்டனையை தீர்மானி்ப்பதை விட அதை யார் செய்தது என்று பார்த்து தண்டனையை முடிவு செய்யும் கருத்தியல் ஆகும்.

இது பெண்களை பற்றியும் 'கீழ் சாதிகள்' என்று அது குறிப்பிடும் சாதிகள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைக்கிறது. இதற்காக மனுஸ்மிருதி புத்தகப் பிரதிகளுக்கு 1927ம் ஆண்டே தீ வைத்தார் அம்பேத்கர். சட்டத்தின் முன் அனைவரும் சமம். பிறப்பால் ஒருவரை பாகுபடுத்தக்கூடாது என கூறும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில் ஒருவர் அம்பேத்கர்.

சமத்துவ சமூகம் உருவாக ஆயுட் காலம் முழுக்க பாடுபட்டவர் இவர். இந்திய அரசமைப்பு சட்டம் என்பது நவீனத்துவம் கொண்ட ஒரு சாசனம். பிறப்பை வைத்து ஒருவரை இந்த சாசனம் பாகுபடுத்தி பார்ப்பதில்லை.

ஆனால் இதற்கு நேர் மாறானது மனுஸ்மிருதி. மனுஸ்மிருதியை உயர்த்திப் பிடிப்பது என்பது தலித்துகள், பெண்கள், மற்ற நலிந்த பிரிவினரை இழிவு படுத்துவது போலாகும். ஆனால் இங்கு பொதுவாக என்ன நடக்கிறது?

அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் சுதந்திரமாக உலவிக்கொண்டுள்ளனர். மனுஸ்மிருதியை எரிப்பவர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இது வெறும் கற்பனை அல்ல. பல முறை கண்ணார கண்டவைதான் இது போன்ற நிகழ்வுகள்.

ஆளும் வர்க்கத்திற்கு எப்போதும் ஆதரவு கிடைக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முன் எப்போதும் கேள்விகளே வைக்கப்படுகின்றன என்கிறார் தலித் பகுஜன் எழுத்தாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜுலுகர ஸ்ரீநிவாஸ்.

படத்தின் காப்புரிமை iStock

நமது நிர்வாக நடைமுறை உண்மையில் மதச்சார்பற்றதா?

இந்தியா என்பது மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என அரசமைப்பு சட்டம் பாதை வகுத்து கொடுத்திருந்த போதிலும் அரசு அதிகாரிகளும் நிர்வாகமும் மதம் சார்ந்தே இயங்கும் போக்கு உள்ளது. அரசமைப்பு சட்டத்தை காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள் துறவியரின் கால்களில் விழும் போக்கு உள்ளது.

நாட்டின் முதல் குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், காசி கங்கை கரையில் துறவி ஒருவரின் கால்களை கழுவியதை கண்டித்தார் ராம் மனோகர் லோஹியா.

அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு இறையார்வம் இல்லாதவராக இருந்தபோதும், இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்தார்.

வாஸ்து என்ற பெயரில் அமைச்சக கட்டடங்களை இடிக்க அமைச்சர்கள் உத்தரவிடுகின்றனர். மத நம்பிக்கை என்ற பெயரில் பணம் தண்ணீராய் செலவிடப்படுகிறது. அரசு நிகழ்வுகள் மத ரீதியான சடங்குகளுடன் தொடங்குவது சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. இவற்றை யாரும் கேள்வி கேட்பதில்லை.

இன்றைய அரசும் ஆளும் கட்சியும் இந்த நடைமுறைகளை அடுத்த கட்டத்துக்கே எடுத்துசென்றுவிட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதம் இல்லாதவர் என்ற ஒரு பிரிவே இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று.

ஆனால் இன்றைய இளைஞர்கள் மதம், சாதி என்ற போர்வைகளை விலக்கிப்கொண்டு வெளியே வரத்தொடங்கிவிட்டனர். சாதியை வைத்து அடையாளப்படுத்திக்கொள்ளும் போக்கு நீங்கினால் அரசே நமது பிள்ளைகளின் கல்விச்சான்றிதழில் சாதியை குறிப்பிடுவதை நிறுத்திக்கொள்ளும். மற்ற அரசு சான்றிதழ்களிலும் சாதி கேட்கப்படாத நிலை உருவாகும்.

இப்போதே ராமகிருஷ்ண ராவ் என்பவர் பள்ளி விண்ணப்பங்களில் சாதி அற்றவர் என்ற பிரிவை சேர்க்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எதைப்பற்றியும் கேள்வி கேட்டு ஆராய்ந்து அறிவதை குடிமகனின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக கருதுகிறது அரசமைப்பு சட்டம்.

தூண்டும் விதமான பேச்சுகூட ஆராய்ந்தறிவதன் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. ஆனால் சமூக ஊடகங்கள் இத்தகைய பேச்சுகளை அவற்றின் பின்புலத்தையும், சொல்லப்பட்ட நேரத்தையும் துண்டித்துவிட்டு வைரலாக்கிவிடுகின்றன. இது போன்ற நிலைகளில் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு, உளறுவதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவு ஜீவிகள் கருதுகின்றனர்.

சில துறவிகள் ஏதோ ஒருவரின் கருத்தை கேட்டு ராமரை தெருவுக்கு இழுப்பது அர்த்தமற்ற செயல். கடவுள் அருவமானவர். ராமரது அவதாரம் என்பது மனித உணர்வுகளால் நிறைந்தது. மதம் பற்றி அறிந்த அனைவருக்கும் இது தெரியும் என்கிறார் பேராசிரியர் ஹாரத்தி வாகீசன்.

மத நூல்கள் சொல்ல வருவதை முழுமையும் அறியாதவர்கள்கள்தான் அதனை தங்கள் அரசியல் ஆதாயங்களுகளுக்காக பயன்படுத்துவதாக கருதுகிறார் வாகீசன். கடவுள் ராமரின் பெயரை அரசியலில் பயன்படுத்துவது அவரையே தாழ்த்துவது போன்றது என்கிறார் வாகீசன்.

மதங்களில் இரு வகை புரட்சி

மதங்கள் தொடர்பில் இருவகைப் புரட்சி இருப்பதாக கூறுகிறார் அம்பேத்கர்.

புறநிலை புரட்சி என்பது உண்மையில் மதப் புரட்சி அல்ல என்கிறார் அம்பேத்கர். மதம் தமது எல்லைக்குள் வராத பல துறைகளின் மீது ஆதிக்கம் செலுத்திவந்தது. அறிவியல் இந்த ஆதிக்கத்தின் மீது போர் தொடுத்தது. இதுவே மதத்தின் மீதான புறநிலைப் புரட்சி.

ஆனால், மதத்துக்குள் நிகழவேண்டிய அகநிலைப் புரட்சிதான் உண்மையான புரட்சி என்றும், இவற்றை பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி போன்ற அரசியல் புரட்சிகளுடன் ஒப்பிட முடியும் என்றும் கூறுகிறார் அம்பேத்கர்.

கேள்விகள் கேட்காமல் எந்த ஒரு மதமும் இருந்தது இல்லை. அப்படி நடக்காமல் இருந்திருந்தால், இப்போதுள்ள மிகப்பெரும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டு அதன் பலனை நாம் அனுபவித்துக்கொண்டிருக்க மாட்டோம்.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE/AFP/GETTY IMAGES

அகநிலைப் புரட்சி என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. உடன் கட்டை ஏறுதலையும் குழந்தை திருமணத்தையும் எவரும் இன்று நியாயப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்து மதத்தின் பயணம் என்பது மிக நீண்டது. பலியிடும் சடங்குகள், குற்றத்தின் தன்மையை கருத்தில் கொள்ளாத சாதி அடிப்படையிலான தண்டனைகள் என பயணித்து தற்போதைய தண்டனை சட்ட முறைக்கு வந்துசேர்ந்துள்ளது.

பாராட்டத்தக்க இந்த பயணத்திற்கு இடையேயும் சில குழுக்கள் பழமையான மத அடிப்படையிலான சடங்குகளை ஆதரிக்கிறது. ஒரு காலத்தில் மதம் என்பது கல்வி, மருத்துவம், சமூக உறவுகள் என எல்லா தளங்களிலும் வியாபித்து இருந்தது. ஆனால் அதன் பிடி தற்போது குறுகிய எல்லைக்குள் சுருங்கிவிட்டது.

அதுவும் கோயில்களிலும் தனி நபர்களின் வாழ்க்கையின் சில கட்டங்களிலும்தான் என்பதாக மதச்சடங்குகளின் ஆதிக்கம் குறைந்துவிட்டது.

கேள்வி எழுப்புவதன் மூலம் அமைக்கப்பட்ட அடித்தளமும் புரட்சிகர நடவடிக்கைகளுமே இந்த மாற்றத்திற்கு காரணம்..

பெரும்பான்மையினரான இறை நம்பிக்கையாளர்கள், சிறுபான்மையினரான கடவுள் மறுப்பாளர்கள்

கத்தி மகேஷின் கருத்துகள் பெரும்பான்மையினரை புண்படுத்துவதாக உள்ளதாகவும் எனவே அவர் ஹைதராபாத்தை விட்டு ஆறு மாதங்கள் வெளியேற வேண்டும் எனவும் ஹைதராபாத் டிஜிபி உத்தரவிட்டார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களும் இல்லையா. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகள்தான் ஒட்டு மொத்த சமூகத்தின் உணர்வா?

கடவுள் மறுப்பாளர்களுக்கு உணர்வுகள் இல்லையா?

கத்தி மகேஷையும் பரிபூரணானந்தாவையும் வெளியேற்றியது தர்க்கபூர்வமானதாக தெரியலாம். ஆனால் இது சமூக நீதியை பிரதிபலிப்பதாக இல்லை. சுயமரியாதையை காக்க போராடும் நவீன கால பெண்களின் கேள்விகளை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்.

அரசமைப்பு சட்டம் என்பது எல்லாருக்குமானதா அல்லது கடவுள் நம்பிக்கையாளர்களுக்கானது மட்டுமா?

அல்லது நாத்திகவாதிகள் அரசமைப்பு சட்டத்தின் பார்வையிலிருந்து வெளியில் வைக்கப்பட்டுள்ளனரா?

ராமரை சிலர் தந்தை சொல் தட்டாத தனயனாக பார்க்கிறார்கள். சிலர் சகோதரத்துவத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். இன்னும் சிலர் பொதுமக்களின் உணர்வுகளை மதிப்பவராக ராமரை பார்க்கின்றனர்.

ஆனால் வேறு சிலரோ ராமரை வேறு கோணத்தில் பார்க்கின்றனர். சம்பூகன் என்ற தலித்தை கொன்றவராக இவர்கள் ராமரைப் பார்க்கின்றனர்.

மனைவி சீதையின் கற்பை உலகிற்கு நிரூபிக்க அவரை அக்னி பரீட்சை செய்ய வைத்தவராக ராமரை பெண்கள் பார்க்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சமூகம் என்ன நினைக்குமோ எனக்கருதி கர்ப்பிணி மனைவியை கைவிட்டவராகவும் ராமரை சில பெண்கள் கருதுகின்றனர். இவை அனைத்துமே இந்திய சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள்.

இவற்றை குற்றம் என்று கருதுவதில் முரண்பாடுகள் உள்ளன. இத்தகைய குற்றங்களை புரிந்தவரைத்தான் மக்கள் வழிபடும் நிலை உள்ளது.

உணர்வுகள் என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் இரண்டு விதமாக நடக்கின்றன. ஒருவரது செயல்பாடுகளால் புண்பட்டதாகக் கூறி கும்பலாக சென்று தாக்குவது, கலை இலக்கியங்களை தடுப்பது ஒரு வகை.

எல்லா மதங்களிலும் இந்த தீவிரவாதம் வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது. தஸ்லிமா நஸ்ரின் ஹைதராபாத் வந்திருந்த போது அவருக்கு என்ன நேரிட்டது என பார்த்தோம். இரண்டாவது வகையில், அரசே தனி நபர்களின் மீது நடவடிக்கையை எடுக்கிறது. பிற மத வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் அது வேறு விதமான விவாதப் பொருளாகிறது.

கடவுள் நம்பிக்கை உள்ளவரையும் கடவுள் மறுப்பாளரையும் வெளியேற்றுவதன் மூலம் எதை சொல்ல வருகிறது அரசு?

இது போன்ற விஷயங்களில் அரசு நிர்வாகம் பணிந்துபோவது நாட்டுக்கு கேடாகத்தான் முடியும்.

தெலுங்கானா மாநிலம் உருவாக வேண்டும் என்ற தனது வேண்டுதல் நிறைவேறியதால் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கடவுளுக்கு மூக்குத்தியை காணிக்கையாக செலுத்தினார்.

படத்தின் காப்புரிமை KALVAKUNTLACHANDRASHEKARRAO/FACEBOOK

அதுவும் அரசுப் பணத்தில்தான் அந்த காணிக்கையை செலுத்தினார். தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கணிசமானோர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். இந்நிலையில் அவர்களின் உணர்வுகளை அரசு மதித்ததா என்ற கேள்வியும் எழுகிறது.

சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம். ஒருவர் அதிகாரத்தில் இருக்கும் போது தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக அரசுப் பணத்தை எப்படி பயன்படுத்தலாம். அது மதசார்பற்ற அரசுதானா என்று கேட்கிறார் ஜிலுக்கல ஸ்ரீனிவாஸ்.

அரசமைப்பு சட்டத்தின் பெயரால் பதவியேற்றவர்கள் இன்று விநாயகரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு உதாரணம் என்றும் புராண காலத்திலேயே புஷ்பக விமானம் பயன்படுத்தியதாகவும் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். இவையெல்லாம் நவீன கால அறிவியலின் பலன்கள்.

நிஜத்தில் இல்லாத புராணப் பாத்திரங்கள் மூலம் ஒவ்வொருவரும் ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஒருவரது உணர்வுகளை புண்படுத்துவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை குலைக்க முற்பட்டால் வேடிக்கை பார்க்க மாட்டோம் என தெளிவாகவே கூறிவிட்டார் தெலங்கானா டிஜிபி்.

கத்தி மகேஷ் ஏதோ ஒன்றை சொல்ல அதற்கு பரிபூரணானந்தா பதில் தர இதனால் கெட்டுவிடும் அளவுக்கா சமூக நல்லிணக்கம் பலவீனமாக உள்ளது? மாறுபட்ட கருத்துகளையும் வரவேற்பதுதான் ஜனநாயகத்துக்கான பண்பு. மத கருத்துகள் பற்றி விவாதிக்கும் போது மூன்று தசாப்தங்களுக்கு முன் இருந்த சுதந்திர சூழல் இப்போது இல்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். நமது பயணத்தின் பாதை எப்படி அமைய வேண்டும் என்ற கேள்வியை இது நம் முன் வைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :