39-வது முறையாக நிரம்பிய மேட்டூர்; அணை தாண்டிப் பாயும் காவிரி

காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் அமைந்துள்ள ஸ்டான்லி அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அணை இப்போதுதான் முழுவதும் நிரம்பியுள்ளது.

1934ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை கடந்த 85 ஆண்டுகளில் இந்த ஆண்டோடு சேர்ந்து 39 முறை முழுமையாக நிறைந்துள்ளது.

இன்று நண்பகல் அளவில் அணை முழுவதுமாக நிரம்பியது. அப்போது நீர்வரத்து வினாடிக்கு சுமார் 72, 500 அடியாக இருந்தது. இப்போது அணையின் ஒட்டுமொத்த நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகும். மாலை ஆறு மணியளவில் அணைக்கு நீர்வரத்து 75 ஆயிரம் அடியாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே விவசாயத்திற்காக கடந்த 19ஆம் தேதி முதல் வினாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுவரும் நிலையில், இன்று காலையில் அது முப்பதாயிரம் கன அடியாகவும் பிறகு நாற்பதாயிரம் கன அடியாகவும் உயர்த்தப்பட்டது. தற்சமயம் அணையிலிருந்து விநாடிக்கு 50,000 கன நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

இதில் 17,500 கன அடி நீர் அணையின் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டுவருகிறது.

காவிரி பாயும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் கரைகளிலும் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன. காவிரி செல்லும் வழியில் உள்ள சுமார் 690 ஏரிகளும் குளங்களும் நிரம்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்வரத்தைப் பொறுத்து, திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படுமென பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

காவிரி ஆற்றை ஒட்டியுள்ள இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் கால்நடைகளும் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். ஆற்றின் கரையோரமாக நின்று செல்ஃபி எடுப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு நெருக்கடி நிலையையும் சமாளிக்க சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

1934ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது மேட்டூர் அணை, இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதியன்று 120 அடியை எட்டியது.

தமிழகத்தின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையைப் போல இரு மடங்கு கொள்ளளவைக் கொண்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :