ஸ்டெர்லைட் அருகே நிலத்தடி நீரில் அதிக மாசுபாடு: மத்திய அமைச்சர் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஈயம், காட்மியம், க்ரோமியம், மான்கனீஸ், இரும்பு மற்றும் அர்சினிக் ஆகியவை இருப்பதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனால் ஏற்பட்டதாக கூறப்படும் மாசு குறித்து கேள்வி எழுப்பினார் சசிகலா புஷ்பா எம்.பி..

கேள்வியும் பதிலும்

ஸ்டெர்லைட் ஆலையினால் நிலத்தடி நீர் மாசடைந்து இருக்கிறதா? இதுதொடர்பாக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து இருக்கிறதா? என்று சசிகலா புஷ்பா கேட்டிருந்தார்.

அவர் எழுப்பி இருந்த கேள்வியில், ஸ்டெர்லைட் ஆலையினால் சூழல் மாசுபட்டு இருந்தால் அது தொடர்பான தகவல்களை தர முடியுமா என்றும் கேட்டு இருந்தார்.

படத்தின் காப்புரிமை Vedanta

அதற்கு பதிலளித்த நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு,மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால்,

"தூத்துக்குடியில் சிப்காட் அமைந்துள்ள பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஓர் ஆய்வினை மேற்கொண்டது. அந்த சிப்காட்டில் ஸ்டெர்லைட் ஆலையும் அமைந்துள்ளது. அந்த ஆய்வில், நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்பதும், ஈயம், காட்மியம், க்ரோமியம், மான்கனீஸ், இரும்பு மற்றும் அர்சினிக் ஆகியவை குடிநீருக்கான இந்திய தர நிர்ணயம் அமைப்பான பி.ஐ.எஸ்-ஆல் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது," என்று கூறியுள்ளார்.

ஈயம், ஃப்ளோரைட், காட்மியம்...

ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் ஆய்வு செய்யப்பட்ட நீர் மாதிரிகளை மாநில மாசுகட்டுபாடு வாரியம் ஆய்வு செய்ததில் இரும்பு, ஈயம், ஃப்ளோரைட், காட்மியம், நிக்கல் ஆகியவை பி.ஐ.எஸ் -ஆல் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருக்கிறது என்பது மத்திய மாசுகட்டுபாட்டு வாரியத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து தெரிகிறது.

மத்திய மாநில மாசுகட்டுபாடு வாரியம்தான் ஆலை மாசுகளை, தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு சட்டம் 1974- இன் படி கட்டுப்படுத்தி வருகின்றன. நிபந்தனைகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்ற காரணத்தினால் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை இவ்வாண்டு மே 25 ஆம் தேதி மூடிவிட்டது என்று பதிலளித்துள்ளார் அமைச்சர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்