மூன்று பெண்களின் வாழ்வை மாற்றிய ட்ரெக்கிங் அனுபவங்கள்

பொதுவாக ஒருவரின் வாழ்வின் துயரமான சம்பவங்களோ அல்லது கடினமான தருணங்களோதான் அவர்களது வாழ்வை பெரும்பாலும் மாற்றியமைக்கும். ஆனால் தாங்கள் பொழுபோக்காக நினைத்த ஒன்று தங்கள் வாழ்வையே புரட்டி போட்டிருப்பதாக கூறுகின்றனர் இந்த பெண்கள்.

Image caption நண்பர்கள் குழுவுடன் வானதி (வலமிருந்து நான்காவது)

''உடலுக்கும் மனதிற்குமான விளையாட்டு - ட்ரெக்கிங்''

''கணக்கு சரியாக வரவில்லையென்றால் டியூஷன் செல்வது போலவோ அல்லது உடற்பயிற்சிகள் செய்ய வகுப்புகளுக்கு செல்வது போலவோ ட்ரெக்கிங்கிற்கு என்று தனி பயிற்சி வகுப்புகள் கிடையாது. நீங்கள் மலையேறும் ஒவ்வொரு அனுபவமும்தான் உங்களுக்கான பயிற்சி வகுப்பு. ஆனால், உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்''என்று தனது ட்ரெக்கிங் அனுபவங்களை பிபிசி தமிழிடம் நினைவுகூர்ந்தார் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்துவரும் வானதி.

''கால்களுக்கு பயிற்சி தர, வேலைநாட்களில் இரண்டிலிருந்து ஐந்து கிலோமீட்டரும், வார இறுதி நாட்களில் பத்து முதல் பதினைந்து கிலோமீட்டருக்கு ஓடுவேன். மேலும் தினமும் சைக்ளிங் செய்வேன். ட்ரெக்கிங் (மலைஏற்றம்) என்பது உடலுக்கும் மனதிற்குமான விளையாட்டு என்றுதான் சொல்லுவேன்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''இயந்திரமயமான உலகில் இயற்கையை தேடிப்போவதே இன்பம்''

''பணம் சேர்க்க வேண்டும் என்ற வேகத்திலேயே வாழ்க்கையை வாழத் தெரியாமல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும் இன்றைய இளைஞர்கள் கைபேசியில் மணிக்கணக்கில் உரையாடுவது, திரையரங்குகளில் கூடுவது, சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவது, பிற கேளிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர வேறெதிலும் கவனம் செலுத்துவதில்லை'' என்று அவர் கூறினார்.

மேலும், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பதின்பருவ பெண்களுக்கு மாதவிடாய் சீராக இருப்பதில்லை; இதில் நானும் விதிவிலக்கல்ல. இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்குமென்றால் அது இயற்கையால்தான் சாத்தியமாகும். ட்ரெக்கிங் செல்லத் துவங்கியது முதல் எனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன; மாதவிடாய் கோளாறுகள் நீங்கி, எனது உடல் பாகங்கள் வலுப்பெற்றதை உணர முடிந்தது. இந்த இயந்திரமயமான உலகில் இயற்கையை தேடிப்போகும் பயணங்கள் தரும் இன்பத்தையும் மன அமைதியையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது'' என்று கூறும் வானதி இதுவரை மூன்று முறை இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றுள்ளார்.

Image caption உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக சைக்ளிங் செய்யும் வானதி

''பயிற்சியும் பக்குவமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ட்ரெக்கிங் செய்யலாம்''

''மனிதர்கள் மட்டும்தான் ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்கிறார்கள். ஆனால், இயற்கை அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறது. ஆண்கள் ட்ரெக்கிங் செய்வதற்கும் பெண்கள் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பெண்களுக்கு பெரும் சிக்கலான காலம் எதுவென்றால் மாதவிடாய் நாட்கள்தான். ஆனால் நான் அதை ஒரு சாதாரண நாளாகத்தான் நினைக்கிறேன்''

ஏனென்றால், அந்நாளை துயரமான நாளாக மனதில் பதியவைத்தால்தான் சிரமமாக இருக்கும். பெண்கள் ஆண்களைவிட ஆற்றல் குறைந்தவர்கள் என்று தொடர்ச்சியாக கூறிவருவதால்தான் சில பெண்கள் அதை உண்மை என்று ஏற்றுக்கொண்டுவிட்டனர். பயிற்சியும் பக்குவமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ட்ரெக்கிங் செய்யலாம். ஆண்களும் பெண்களும் கலந்த குழுக்களாக நாங்கள் ட்ரெக்கிங் செல்லும்போது ஆண்களுக்கு இணையாகவே நானும் எல்ல இடங்களுக்கும் செல்வேன் '' என்று அழகாக கூறுகிறார் இந்த ட்ரெக்கிங் நாயகி.

குழுக்களோடு பயணிப்பதில் ஆர்வமுள்ள வானதி போன்ற பெண்களுக்கு மத்தியில், தனியாகவே ட்ரெக்கிங் செய்து அசத்திவருகிறார் இதற்காகவே தனது ஐடி வேலையை ராஜிநாமா செய்த சந்தியா.

''நான் திட்டமிட்டது வேறு, உண்மையில் நடந்தது வேறு''

''ட்ரெக்கிங்-ஐ பொறுத்தவரை திட்டமிடுதல் மிகவும் முக்கியம். ஆனால், அதை விட முக்கியம், நேரம் மற்றும் சூழலுக்கு ஏற்ப அதை மாற்றியமைப்பது. ஐடி என்றாலே மிகவும் அழுத்தம் தரக்கூடிய வேலைதான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே 2011-இல் எனது வேலையை விட்டுவிட்டு தனியாக இமயமலைக்கு ஒரு மாத பயணம் செய்ய கிளம்பிவிட்டேன்'' என்று சந்தியா குறிப்பிட்டார்.

சென்னையிலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து சிம்லா வழியாக சங்லா சென்று, சிட்குல், உத்தர்காசி, ரிஷிகேஷ், ரெக்காங் பியோ, ஸ்பிட்டி வேலி என்று வட இந்தியாவை வலம் வந்துள்ளார் இந்த பெண்மணி.

''இருநூற்று ஐம்பது கிலோமீட்டருக்கும் அதிகமாக நடந்தும், ஐம்பது கிலோமீட்டர் தூரம் சைக்ளிங் செய்தும் ஒரு மாதத்தை கழித்தேன். எங்கு சாப்பிட வேண்டும், எங்கு தங்க வேண்டும், எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று நான் திட்டமிட்டது வேறு, உண்மையில் அங்கு நடந்தது வேறு'' என்கிறார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ட்ரெக்கிங் செய்திருக்கும் சந்தியா.

Image caption இமைய மலையில் ஒரு மாதம் தனியாக ட்ரெக்கிங் செய்த சந்தியா

''தனியாக வரும் பெண்களுக்கு நல்ல மரியாதை''

தனியாக ட்ரெக்கிங் செய்வதில் உங்களுக்கு பயமில்லையா? என்று சந்தியாவிடம் கேட்டபோது, ''பெண் என்ற முறையில், நம்மை ஆபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ள சில அடிப்படை விடயங்கள் தெரிந்தால் போதுமானது. பொதுவாகவே இமயமலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்னிடம் அன்பாக பழகினார்கள். நான் பார்த்தவரையில் அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதை வழங்கப்பட்டது, குறிப்பாக தனியாக வரும் பெண்களை நன்கு வரவேற்றனர். எனக்கு ஏற்கனவே ஹிந்தி தெரியும் என்பதால் உரையாடுவதில் எந்த பிரச்சனை இல்லை. சுவரஸ்யமான விடயம் என்னவென்றால், நான் கேட்ட உடனேயே அங்குள்ள மக்கள் அவர்களது உள்ளூர் மொழியில் சின்ன சின்ன வார்த்தைகள் கற்றுக்கொடுத்தார்கள். அதில் ஒன்றிரண்டு வார்த்தைகளை நான் பேசுவது கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்''என்று கூறினார்.

'வழக்கமான வட்டத்திலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும்'

''எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்களுடன் குழுவாகவும் நான் ட்ரெக்கிங் சென்றிருக்கிறேன். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்களை எதிர்பார்க்கமுடியாது. எல்லாருக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. எல்லாருடைய உடல் தகுதி நிலையும் ஒரே மாதிரி இருக்காது. உதாரணமாக என்னால் நாளொன்றுக்கு இருபதிலிருந்து இருப்பது இரண்டு கிலோமீட்டர் ட்ரெக்கிங் செய்ய முடியும்'' என்று அவர் நினைவுகூர்ந்தார்.

Image caption 'தனியாக செல்லும்போதுதான் நம்மைப்பற்றி நமக்கே பல விடயங்கள் தெரியவரும்'

ஆனால் வர்த்தக நோக்கில் ட்ரெக்கிங் செய்யும் குழு நாளொன்றுக்கு பத்து கிலோமீட்டர் வரைதான் பயணிப்பார்கள். இதனால் இவர்களுடன் சென்றால் நான் நிறைய இடங்களை பார்க்கமுடியாமல் போக நேரிடும். பெண்கள் தங்களுக்கு பழகிப்போன வட்டத்திலிருந்து முதலில் வெளியே வர வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை நமக்காக காத்திருக்கிறது என்பதை உணர வேண்டும். தனியாக செல்லும்போதுதான் நம்மைப்பற்றி நமக்கே பல விடயங்கள் தெரியவரும்'' என்று தனியே ட்ரெக்கிங் செல்வதற்கும் குழுவுடன் செல்வதற்கும் உள்ள வேறுபாடுகளை பட்டியலிடுகிறார் சந்தியா.

''புது மனிதர்களின் நட்பு ட்ரெக்கிங் தந்த பரிசு''

''பைனாகுலரில் பறவைகளின் அசைவுகளை பார்வையிடுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பல்வேறு இடங்களுக்கு ட்ரெக்கிங் செல்லும்போது அங்கே பல விதமான பறவைகளைப் பார்ப்பேன்; இவை என்னுடனேயே என் வீட்டிற்கு வரக்கூடாதா என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன். பொதுவாக இயற்கையான பகுதிகளுக்குச் சென்றால், பெரும்பாலானோர் புகைப்படம் எடுப்பார்கள். எனக்கு அதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும், இரவில் நட்சத்திரங்களை நோட்டமிடுவதை நான் விரும்புவேன். மலை உச்சியில் ஏறி, ஏதாவது பாறையிலோ அல்லது அமைதியான இடத்திலோ தியானம் செய்வது என் பழக்கம்''

Image caption ''மலை உச்சியில் ஏறி, ஏதாவது பாறையிலோ அல்லது அமைதியான இடத்திலோ தியானம் செய்வது என் பழக்கம்''

ஒரு இடத்திற்கு ட்ரெக்கிங் சென்றால், அதன் வரலாற்றை தெரிந்து கொள் முயற்சிப்பேன்; அதோடு அந்த ஊரின் பழக்க வழக்கங்கள், வீடுகள் கட்டப்பட்டிருக்கும் முறை, அவர்களின் உணவு வகை, உடைகள் போன்றவற்றை கூர்ந்து கவனித்து, கேட்டு தெரிந்துகொள்வேன். நிறைய புது மனிதர்களிடம் பழகுவது, நண்பர்கள் சேர்ப்பது போன்றவையெல்லாம் ட்ரெக்கிங் மூலம் எனக்கு கிடைத்த பரிசுகள்''

தனியாகவும் குழுவுடனும் ட்ரெக்கிங் சென்றவர்களின் அனுபவங்களைப் பார்க்கையில் நாமும் இதுபோல் எப்போது எங்கு செல்லப்போகிறோம் என்று சிந்திக்க வைக்கின்றது. இனி அடுத்து வருபவரின் கதையை கேட்டால், நமக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கை அமையாதா என்றுதான் தோன்றவைக்கும்.

''ட்ரெக்கிங்கில் ஆர்வம் இல்லாத கணவர் கிடைத்துவிடுவாரோ?''

''எனக்கு முதல் ட்ரெக்கிங் அனுபவத்தை கொடுத்தது ஏலகிரிதான். என்னுடைய குழுவில் உள்ள அனைவரும் ட்ரெக்கிங்கில் அதிக அனுபவம் பெற்றவர்களாக இருந்தனர். அன்று தான் முதன் முதலில் நான் விஜய்யை சந்தித்தேன். நிறைய இடங்களுக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தாலும் எனக்கு தெரியாவற்றை சொல்லிக்கொடுத்து என்னை அவர் வழிநடத்தினார். பின்னர், ஒரு புறம் நிறைய இடங்களுக்கு ட்ரெக்கிங் சென்று சென்று, எனக்கு அதில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. மறுபுறம், எனது வீட்டில் எனக்கு மும்முரமாக வரன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

நான் திருமணத்திற்கு பயந்த ஒரே காரணம், என் கணவருக்கு ட்ரெக்கிங்கில் ஆர்வம் இல்லாவிட்டால் என்னையும் இனி ட்ரெக்கிங் செல்ல அனுமதிக்கமாட்டார் என்பதுதான். அப்போதுதான் என்னை போலவே ட்ரெக்கிங்கில் மிகுந்த ஆர்வம் உள்ள ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தேன். ஆனால் விஜய்தான் அந்த நபராக இருப்பார் என்பது அப்போது எனக்கு தெரியாது'' என்கிறார் ஜோடியாக ட்ரெக்கிங் செய்துவரும் ருத்ரா விஜய்.

Image caption ஜோடியாக ட்ரெக்கிங் செல்லும் ருத்ரா விஜய் தம்பதியினர்

''அப்போது காதலர்களாக, இப்போது கணவன் மனைவியாக..''

நானும் விஜய்யும் காதலிக்கும் போதே நிறைய இடங்களுக்கு ட்ரெக்கிங் சென்றுகிறோம். அவர் என்னுடன் வராமலேயே வேறு குழுவினருடனும் ட்ரெக்கிங் சென்றிருக்கிறேன். என்னுடைய மன வலிமை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக என்னை தனியாகவும் சில இடங்களுக்கு ட்ரெக்கிங் அனுப்பியிருக்கிறார் விஜய். திருமணத்திற்கு பின்பு என் வாழ்வில் பெரிய மாற்றம் எதுவுமே இல்லை. அப்போது இருவரும் காதலர்களாக பயணம் செய்தோம், இப்போது கணவன் மனைவியாக ட்ரெக்கிங் செல்கிறோம்.

குரங்கணி சம்பவத்திற்கு பிறகு, ட்ரெக்கிங் செல்பவர்களுள் பெரும்பாலானோரின் குடும்பத்தினர், ''இனிமேல் நீ ட்ரெக்கிங் செல்லக்கூடாது'' என்று கூறிவந்த நிலையில், எனது பெற்றோர் '' இது ஒரு துயரமான சம்பவம்'' என்று அவர்களுக்காக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு எங்கு சென்றாலும் எச்சரிக்கையுடனும் சூழ்நிலையை கையாளவும் கற்றுக்கொள் என்று கூறியது எனக்கு பெருமையாக இருந்தது. என்னோடு ஒப்பிடுகையில் விஜய் கடினமான மலைகளிலும் ட்ரெக்கிங் செய்திருக்கிறார். ஆனால் ஒருபோதும் அவர் என்னை தாழ்த்தியதில்லை, மாறாக ''உன்னால் இது முடியும்'' என்று அடிக்கடி நம்பிக்கையூட்டுவார்.

Image caption மேகாலயாவில் உள்ள டபுள் டெக்கர் பிரிட்ஜின் மேலே நண்பர்களுடன் ருத்ரா மற்றும் விஜய்

ஒரு முறை மேகாலயாவிற்கு ட்ரெக்கிங் சென்றிருந்தோம். அங்கு ஒரு நாள் இரண்டு மரங்களின் வேர்கள் பாலம் போல் அமைந்துள்ள 'டபுள் டெக்கர் பிரிட்ஜ்' எனப்படும் பாலத்தின் மேலே நடந்துகொண்டிருந்தோம். அதன் கீழே உள்ள குளம் ஒன்றில் நான் தவறி விழுந்து இரு பாறைகளுக்கு நடுவே தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்த பகுதியில் சிக்கிக்கொண்டேன். அப்போது, நீச்சல் தெரிந்திருந்ததால் விஜய் துளியும் தாமதிக்காமல் என்னை காப்பாற்றிவிட்டார். வேறு யாராவதாக இருந்தால் அடுத்த முறை இந்த மாதிரி இடத்திற்கு போகாதே என்று சொல்ல வாய்ப்புண்டு. ஆனால், ''இது போன்ற அனுவங்களை நீ பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்; அடுத்த முறை ட்ரெக்கிங் வருவதற்குள் நீச்சல் கற்றுக்கொள்'' என்று கூறிய விஜய்தான் என் வாழ்வின் எனர்ஜி டானிக் என்கிறார் ருத்ரா.

Image caption ''நம்மை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை ட்ரெக்கிங் கற்றுக்கொடுக்கும்''

''ஆர்வம் இருந்தால், நம் பலவீனம்கூட மறந்துபோகும்''

பெண்கள் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறிய கூட்டிற்குள் இருந்து வெளியே வந்து இவ்வுலகம் உண்மையில் எவ்வளவு பெரியது தெரிந்துகொள்ள ட்ரெக்கிங் நிச்சயம் உதவும். தனியாகவும் சரி குழுவுடன் ட்ரெக்கிங் சென்றாலும் சரி, ஒரு சுதந்திர உணர்வு கிடைக்கும். நம்மை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள முடியும். உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கமுடியும்; ஒன்றின் மீது நமக்கு ஆர்வம் அதிகரித்தால், நமது பலவீனம் என்று நினைக்கும் ஒன்றுகூட மறந்துபோகும் என்று ருத்ரா விஜய் கூறினார்.

எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளலாம். காலை விடிவது முதல் இரவு முடிவது வரை நீங்கள் செய்யும் செயல்களில் மாற்றத்தை காணலாம். மொத்தத்தில் உங்களது வாழ்க்கை முறையே மாறிவிடும் என்று அவர் நம்பிக்கையாக கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசிதமிழ்: