கோயில் போல கட்டப்பட்ட கீழக்கரை பள்ளிவாசல்கள்: நல்லிணக்கத்தின் சாட்சி

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தென் தமிழகத் தீவான ராமேஸ்வரத்தில் ஒன்றுபோலவே அமைந்துள்ள கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இந்து-முஸ்லிம் மக்களுக்கு இடையில் நிலவிய நல்லிணக்கத்துக்கு சாட்சியாக உள்ளன.

இந்து மத கடவுள் அவதாரமான ராமரின் புனிதத்தலமாக கருதப்படும் ராமேஸ்வரத்தில் இருந்து வெறும் அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழக்கரையில் உள்ள பள்ளிவாசல்கள், கோயில்களில் காணப்படும் தூண்களின் அமைப்பை ஒத்துள்ளன.

மதங்களை இணைத்த திராவிட கட்டிடக்கலை

மிகவும் பிரபலமான கீழக்கரை நடுத்தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலை 17ம் நூற்றாண்டில் கிழவன் சேதுபதி காலத்தில், அமைச்சராக இருந்த வள்ளல் சீதக்காதி திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைத்துள்ளார்.

மதவேறுபாடுகளை புறந்தள்ளி, அமைச்சர் சீதக்காதி, கோயிலில் உள்ள திராவிட கலைபாணியை, பள்ளிவாசல்கள் மற்றும் ராமநாதபுர அரண்மனை போன்ற இடங்களிலும் அமைத்ததாக தொல்லியல் துறையின் ஆய்வுகள் கூறுகின்றன.

இஸ்லாமிய அமைச்சர் சீதக்காதிக்கும், இந்து மன்னர் சேதுபதிக்கும் இருந்த நட்பானது இரண்டு மதங்களைச் சேர்ந்த மக்களையும் இணைத்துள்ளது என்கிறார் சமூக அறிவியல் ஆய்வாளர் பெர்னார்ட் டி சாமி.

Image caption பெர்னார்ட் டி சாமி, சமூக அறிவியல் ஆய்வாளர்

காவல்குடியினரான இஸ்லாமியர்கள்

''வள்ளல் சீதக்காதி ராமநாதபுர மன்னர் கிழவன் சேதுபதியின் அரண்மனையை கட்டுவதற்கு பொருளாதார ரீதியாக உதவினார் என தமிழக தொல்லியல் துறையின் அறிக்கை கூறுகிறது. அதேபோல பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு பல ஏக்கர் நிலங்களை மன்னர் சேதுபதி கொடையாக வழங்கியுள்ளார் என்பதும் பதிவாகியுள்ளது. சமய நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ராமநாதபுரத்தில் புராதன கட்டிடங்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளன,'' என்கிறார் பெர்னார்ட்.

மேலும், சேதுபதியின் உத்தரகோசமங்கை செப்பேடு ஒன்றில் இஸ்லாமியர்கள் ''காவல்குடியினர்'' என எழுதப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பெர்னார்ட், ''வடஇந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு நடந்தது. ஆனால் தென்னிந்தியாவை பொருத்தவரை, கடல்வழியாக வந்த பெரும்வணிகர்களான இஸ்லாமியர்கள், உள்ளூர் அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் ஆதரவை பெற்றனர்.

வெளிநாடுகளுடன் வணிகத்தை இஸ்லாமியர்கள் திறம்பட செய்துவந்ததால், கடல்மார்க்கமாக சேதுபதியின் நாட்டுக்கு எந்த இடையூறும் இல்லாதவாறு இஸ்லாமியர்கள் காத்தனர். தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள், வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாக இல்லாமல், தமிழர்களாகவே அறியப்பட்டனர். மதரீதியான வித்தியாசங்களை பாராமல், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் தென்பகுதியில் சமயநல்லிணக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதற்கு சான்றுதான் கீழக்கரை,'' என்றார்.

வேற்றுமையில் ஒற்றுமை

சீதக்காதி எழுப்பியுள்ள ஜும்மா பள்ளிவாசலின் சிறப்பு குறித்து பேசிய அப்பள்ளியின் ஒன்பதாவது காஜியான காதர் பக்ஷ் ஹுசைன் ஸ்த்திக்கி, ''கோயில்களில் சிலைகள் இருக்கும். இது பள்ளிவாசல் என்பதால், ஒவ்வொரு தூணிலும் பூ அலங்காரம் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களுக்கும் பொதுவானது திராவிட கட்டிடக்கலை. ஐந்து வாசல்களை கொண்டதாகவும் சுமார் மூநூறு பேர் தொழுகை செய்யும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது.

சீதக்காதி காலத்தில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டதோ, அதே வடிவத்தை இன்றும் பாதுகாத்துவருகிறோம். பள்ளிவாசலில் புனரமைக்கும் பணியின் போது, கோயில் வேலைசெய்யும் கட்டிடக்கலை நிபுணர்களை அழைத்துச் சரிசெய்கிறோம். வரலாற்று ஆதாரத்துடன் விளங்குவதால், இந்த பள்ளியின் வடிவமைப்பு தொடர்பாக எந்த சந்தேகம் யாருக்கும் எழுந்ததில்லை.'' என்றார்.

Image caption காதர் பக்ஷ் ஹுசைன் ஸ்த்திக்கி

சேதுபதி செப்பேடுகள் சொல்லும் வரலாறு

சீதக்காதி, சேதுபதியைத் தொடர்ந்து, இந்துக்களும், இஸ்லாமியர்களும் மதவேற்றுமைகள் இல்லாமல் தமிழ் இனத்தவராக இன்றும் வாழ்ந்துவருகின்றனர் என்கிறார் காஜி.

''சமீபத்தில் ராமநாதபுரத்தில், அரசு விளையாட்டு மைதானத்தை அமைத்துக்கொடுத்த கீழக்கரை இஸ்லாமியர் ஒருவர் அந்த மைதானத்திற்கு 'சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம்' என்று பெயரிட்டுள்ளார். 17ம் நூற்றாண்டு, அதற்கு முன்னரும் நிலவிய சமய ஒற்றுமை இன்றும் நீடிக்கிறது. இந்தியாவின் பிறபகுதிகளைக் காட்டிலும், தென்பகுதியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடம் மதநல்லிணக்கம் தொடர்ந்து நிலவுகிறது,'' என்றார் அவர்.

சேதுபதி மன்னர்களின் சமயப்பொறையை எடுத்துரைக்கும் செப்பேடுகளை தொகுத்துள்ள புலவர் செ.ராசுவின் 'சேதுபதி செப்பேடுகள்' என்ற புத்தகத்தில், சைவக்கோயிலான ராமநாதசாமி கோயில் தொடர்பான வழக்கு ஒன்றில் அலிப்புலி ராவுத்தர் என்ற இஸ்லாமியர் ஒருவர் நீதிவழங்கும் குழுவில் இருந்தது பற்றி விளக்குகிறது.

ராமேஸ்வரத்தின் நட்புப்பாலம்

சேதுபதியின் ஆட்சிக்காலத்திற்கும் பிறகும் மக்களிடம் காணப்படும் ஒற்றுமைக்குப் பல சான்றுகளை சேதுபதி பரம்பரையை சேர்ந்த ராணி லட்சுமி குமரன் சேதுபதி பிபிசி தமிழிடம் கூறினார்.

திருவிழாக்களின் போது, இஸ்லாமிய தர்காவில் சேதுபதி வம்சத்தைச் சேர்ந்தவர்கள், கொடியேற்றத்திற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும், இஸ்லாமியர்களின் இல்லத்திருமணங்களில் சேதுபதி அரச குடும்பத்தினருக்கு முதல்மரியாதை அளிக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

''கிழவன் சேதுபதி மற்றும் வள்ளல் சீதக்காதி இடையிலான நட்பு அவர்களோடு முடியவில்லை. இரண்டு மதங்களை சேர்ந்தவர்கள் என்ற எந்த வித்தியாசமும் எங்களுக்கு இடையில் இல்லை. குடும்ப உறவுகளாகவே நாங்கள் பழகிவருகிறோம் என்பதால், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நட்பு தொடர்கிறது,'' என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :