பரங்கிமலை ரயில் விபத்து: "படியில் தொங்கியபடி பயணம் செய்ததால் நேர்ந்த விபரீதம்"

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கோர விபத்து ஒன்றில் குறைந்தது நான்கு பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருமால்பூர் வரை செல்லும் மின்சார ரயில் இன்று காலை சுமார் எட்டரை மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்தை நெருங்கியபோது, ரயில் பெட்டிகளில் தொங்கியபடி வந்தவர்கள் தடுப்புச் சுவர் உரசியதால் கீழே விழுந்தனர். கீழே விழுந்ததிலும் ரயில் சக்கரங்களில் சிக்கியும் 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மேலும் 7 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் ரயில் நிலையங்களுக்கு உள்ளூர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த மூன்று தடங்களிலும் செல்லும் ரயில்கள், கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை ஒரே இருப்புப்பாதை வழிகளைப் பயன்படுத்திவருகின்றன.

இந்த நிலையில், கோடம்பாக்கம் - சைதாப்பேட்டை இடையே ரயில்களுக்கான மின்சார கேபிள் அறுந்து விழுந்ததால், அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

இதனால், பல மின்சார ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன. பல ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதையடுத்து கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. வந்த ஒவ்வொரு ரயிலிலும் பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர்.

வழக்கமாக மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை என்பதால், ரயிலில் தொங்கியபடி பிரயாணம் செய்தவர்கள் ரயில்வே பிளாட்பாரத்தை ஒட்டியபடி அமைந்துள்ள தடுப்புச்சுவரை எதிர்பார்க்கவில்லையெனக் கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு, "பயணிகள் தொங்கியபடி பயணம் செய்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லா ரயில் நிலையங்களிலும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பயணிகள் உள்ளே நின்றபடி பயணம் செய்ய வேண்டுமென வலியுறுத்திவருகின்றனர். அதை மீறியும் இம்மாதிரி சம்பவங்கள் நடக்கின்றன" என்று குறிப்பிட்டார்.

தற்போது உயிரிழந்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்