திருப்பூர் பாப்பாள் விவகாரம்: நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்

திருப்பூர் தலித் பெண் பாப்பாள் விவகாரம் - நான்கு பேர் கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தலித் பெண் சமைக்கக்கூடாது என்று முற்றுகையிட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாதி இந்துக்கள் 88 பேரும் தலைமறைவாகியிருந்த நிலையில், முதற்கட்டமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலர் பாப்பாள் ஒரு தலித் பெண் என்பதால் சமைக்கக்கூடாது என அந்த ஊரில் சாதி இந்துக்கள் சிலர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இந்த பிரச்சனை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் வரை கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டு சமையலர் பாப்பாள் மீண்டும் அவரது பணியை செய்து வருகிறார். பள்ளியில் 75 பேர் கொண்ட மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் கடந்த சனிக்கிழமை, 32 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

இதனால் பணியை செய்தும் மன நிம்மதிக்கு பதில் மன உளைச்சலே இருப்பதாக கூறினார் பாப்பாள்.

ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இளைஞர் எழுச்சி இயக்கத்தலைவர் எழிலன், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாப்பாளின் வீட்டுக்குச் சென்றனர். அவர்களுக்கு பாப்பாள் உணவு சமைத்து பரிமாறியிருந்தார்.

அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த பாப்பாள் மீதான தீண்டாமை கொடுமை விவகாரத்தை அடுத்து சமையலர் பாப்பாளிடம் சாதிய அடக்கு முறையை செய்த 13 பேர் மற்றும் அடையாளம் தெரியக்கூடிய வகையில் உள்ள 75 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இதில் சேயூர் காவல்துறையினர் திருமலைக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி, மூர்த்தி, பழனிச்சாமி, மூர்த்தி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :