கடைகளில் அமரும் உரிமையை பெற போராடும் தமிழக பெண் ஊழியர்கள்

  • பிரமிளா கிருஷ்ணன் & பிரவீன் அண்ணாமலை
  • பிபிசி தமிழ்

துணிக்கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் வேலைசெய்யும் பெண்கள் பல மணிநேரம் நின்றுகொண்டே வேலைசெய்வதை எதிர்த்து பெண்ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, பணிப்பெண்கள் உட்கார அனுமதிக்கவேண்டும், ஓய்வு எடுக்க வசதிகள் செய்துதரப்படவேண்டும் என கேரள அரசாங்கம் கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசு ஊழியர்களை நடத்தும் முறைகளில் சட்டத்திருத்தும் கொண்டுவந்து பிறப்பித்த இந்த உத்தரவு, வேலையின்போது உட்காருவதற்கான உரிமையை கேட்டுப் பெறவேண்டும் என்ற எண்ணத்தை தமிழகத்தில் உள்ள பெண்களிடம் ஊக்குவித்துள்ளது.

கேரள அரசாங்கத்தின் நடைமுறை தமிழகத்திலும் பின்பற்றப்படவேண்டும் என எதிர்பார்க்கும் பலஆயிரம் பணிப்பெண்களில் ஒருவர் சென்னை தி.நகரில் வேலைசெய்யும் 35 வயதான முத்தமிழ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

''கேரளாவில் பெண்கள் போராட்டம் நடத்தி கடைகளில் உட்காருவதற்கு உரிமை பெற்றுவிட்டார்கள் என்பதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நம் ஊர்களிலும் இந்த நடைமுறையை கொண்டுவருவார்களா?,'' வெள்ளந்தியாக கேட்கிறார் முத்தமிழ்.

காலை ஏழு மணிக்கு வாஷர்மேன்பேட்டையில் இருந்து ரயிலில் கிளம்பி, தி.நகரில் உள்ள கடைக்கு எட்டு மணிக்குள் அவர் வந்துவிடவேண்டும். பத்து நிமிடத்திற்கு மேல் தாமதத்தால், அரை நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்பதால் முடிந்தவரை குறித்த நேரத்திற்குச் சென்றுவிடுவதாக கூறுகிறார் முத்தமிழ்.

''இரண்டு குழந்தைகளுக்கும் காலை,மதியம் உணவு சமைத்துவிட்டு, உடல்நிலை சரியில்லாத என் அம்மாவுக்கு மருந்துகள் கொடுத்துவிட்டு ஓட்டமாக கடைக்கு வருவேன். மாலை ஆறு மணிவரை நிற்கவேண்டும். சாப்பிடும் நேரம் தவிர பத்துநிமிடங்கள் கூட ஓய்வு இருக்காது. வாடிக்கையளர்கள் வராவிட்டாலும், நாங்கள் நிற்கவேண்டும் என எங்கள் மேற்பார்வையாளர் சொல்லுவார், இல்லாவிட்டால் உட்காருவதை பழக்கமாக வைத்துக்கொள்வோம் என்று சொல்லுவார். பண்டிகை காலங்களில் நாங்கள் படும் அவஸ்தையை விவரிக்க வார்த்தைகளே இல்லை,'' என்று தனது ஒரு நாள் வேலையில் படும் துயரங்களைப் பேசினார் முத்தமிழ்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிப்பெண்ணாக வேலைசெய்கிறார் முத்தமிழ். தற்போது வேலைசெய்வது மூன்றாவது கடையில். ''முன்பு வேலைசெய்த கடைகளில் கழிவறைக்குச் சென்றுவரக் கூட ஐந்து நிமிடம்தான் கொடுப்பார்கள். அதுவும் பக்கத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்திற்குத்தான் போகவேண்டும் என்பதால் பல நாட்கள் தவிர்த்துவிடுவேன். இப்போது கடுமையான கால்வலியும், உயர் ரத்த அழுத்தமும் வந்துவிட்டது. அடுத்த ஆண்டு என் குழந்தைகளின் கல்விச்செலவுக்கு பணம் சேர்த்துவிட்டு, இந்த வேலையை விட்டுவிடுவேன்,'' என தனது சிரமங்களை விவரித்தார்.

படக்குறிப்பு,

கீதா ராமகிருஷ்ணன் (வலது) (கோப்புப் படம்)

முத்தமிழைப் போல துணிக்கடைகள் மற்றும் இதர கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் பலருக்கு சிறுநீரக கோளாறு, கால்களில் வீக்கம் மற்றும் வெரிகோஸ் வேய்ன், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார் மருத்துவர் ஆர்.மணிவேலன்.

கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியின் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் நோய்களை பட்டியலிடுவது, குணப்படுத்துவது என தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பணியாற்றுகிறார் மணிவேலன்.

''பல மணி நேரம் நின்றுகொண்டே இருந்தால் கால்கள் வீங்கும், நரம்புகள் இறுகிவிடும். தண்ணீர் குடிக்காமல், சிறுநீர்,மலம்,கழிக்காமல் இருந்தால் எல்லா நோய்களுக்கும் அது மூலகாரணமாக அமையும். மாதவிடாய் காலங்களில் மேலும் அவதிப்படும் பெண்கள், அதிக எரிச்சல் அடைவார்கள். எட்டு மணி நேரம் தொடர்ந்து நின்றுகொண்டே இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் உடலில் கீழ் பகுதி முழுவதுமாக சோர்ந்து, சிறுநீரக பிரச்சனை வரை அனைத்து உபாதைகளையும் அனுபவிப்பார்கள்,'' என்கிறார் மணிவேலன்.

கேரளாவில் கொண்டுவந்துள்ள நடைமுறை தமிழகத்திலும் செயல்படுத்த அரசாங்கம் அக்கறைகாட்ட வேண்டும் என முறைசாரத்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வேலைசெய்துவரும் தன்னார்வலரான கீதா கூறுகிறார்.

''ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவர் வழக்குபோட்டு நீதி கேட்கவேண்டும் என்பதில்லை. கேரளாவில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் தமிழகத்திலும் வரவேண்டும். இங்குள்ள தொழிலாளர்களின் நிலையும் இதுதான் என்பதால், அவர்களின் நலன் கருதி உடனடியாக அரசே அனைத்து கடைகளிலும் தொழிலாளர்கள் உட்காரவும், ஓய்வு எடுக்கவும், கழிவறை வசதி ஏற்படுத்திக்கொடுக்கவும் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும்,'' என்கிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக உட்காருவதற்கான உரிமை கோரி தொடர் போராட்டம் நடத்தியது குறித்து கேரளாவில் உள்ள அசஸ்காதித்த மேகலா தொழிலாளி சங்கம் அமைப்பைச் சேர்ந்த பி.விஜி (49) பிபிசி தமிழிடம் பேசினார்.

''பணிப்பெண்களாக வேலைசெய்பவர்கள் குறைந்தது எட்டு முதல் பத்து மணிநேரம் நின்றுகொண்டே வேலைசெய்கிறார்கள். ஓணம், தீபாவளி போன்ற திருவிழாக்காலங்களில் நின்றுகொண்டே ஒரு நாள் முழுவதும் வேலைசெய்யவேண்டிய கட்டாயம் இருக்கும். மாதவிடாய் காலங்களில்கூட பெண்கள் நின்றுகொண்டே வேலை செய்யவேண்டியிருக்கும். தற்போது அரசாங்கம் கொண்டுவந்துள்ள ஆணையால் எண்ணற்ற பணிப்பெண்கள் பயன்பெறுவார்கள்,'' என்று தெரிவித்தார்.

படக்குறிப்பு,

விஜி

வீதிகள் போராட்டம் நடத்துவது, கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை என பல கட்டங்களாகத் தொடர்ந்து குரல் எழுப்பிவந்த விஜி பல இடர்பாடுகளையும் சந்தித்தார். ''தொழிலாளர்களுக்கு மனம் மற்றும் உடல் பாதிப்பு ஏற்பட்டு வேலையில் இருந்து நின்றவர்கள்தான் இருந்தார்கள். ஆனால் அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம் காரணமாக தற்போது உட்கார அனுமதிக்காத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கமுடியும். ஒரு லட்சம் வரை அபராதம் செலுத்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நடைமுறை வந்துள்ளது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி,'' என்கிறார் விஜி.

கேரளாவில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உட்காருவதற்காக தொழிலாளர்கள் குரல்கொடுக்கவேண்டும், எழுந்துநின்று தங்களது உரிமைகளைக் கேட்கவேண்டும் என்கிறார் விஜி.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :