கந்தன்சாவடி கட்டட விபத்து: பாதுகாப்பு அச்சத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

சென்னை கந்தன்சாவடியில் நடந்த கட்டட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் கட்டட வேலையில் ஈடுபடுவது குறித்து வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அச்சம் உருவாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

படம் சித்தரிக்க மட்டுமே

கடந்த சனிக்கிழமை (ஜூலை 21), கந்தன்சாவடியில் பத்து மாடி தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் ஊர் திரும்ப தமிழக அரசும், பீகார் அரசும் உதவ வேண்டும் என கோருகிறார்கள்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளர்கள் பிபிசி தமிழிடம் பேசியபோது கட்டடங்கள் அமையும் இடங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இருப்பதில்லை என்கிறார்கள்.

'துயரங்களை பீகார் அரசுக்கு தெரிவியுங்கள்'

''தமிழகம் முழுவதும் சிறு கிராமங்களில் கூட கட்டடங்கள் எழுப்ப பீகாரில் இருந்து வந்த நாங்கள் வேலைசெய்கிறோம். சென்னை நகரத்தில் உள்ள பல உயர்ந்த அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், உணவு விடுதிகள் எங்கள் உழைப்பில் உருவானவை. ஆனால் விபத்து நேர்ந்ததும் கட்டட உரிமையாளர்கள் எங்களை மறந்துவிடுகிறார்கள்,'' என ராஜன் சௌத்ரி(31) துயரத்துடன் கூறுகிறார்.

விபத்து நடந்தபோது, சாரத்தில் கீழ் பகுதியில் இருந்த ராஜன் சௌத்ரி இறந்துபோய்விடுவோம் என்ற பயத்தில் முதல் பத்து நிமிடங்கள் அசையாமல் இருந்ததாக கூறுகிறார்.

படக்குறிப்பு,

ராஜன் சௌத்ரி

தனது குடும்பத்தினர் உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து வந்துவிடுமாறு அடிக்கடி தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள் என்று கூறும் அவர், 'என் ஐந்து வயது மகள் சோனம் வீடியோ காலில் கூப்பிட்டு, அப்பா வந்திடுப்பா, நீ வந்தால்தான் சாப்பிடுவேன் என்று அழுகிறாள். என் இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் வயதான பெற்றோர் என எல்லோருக்கும் நான் ஒருவன் ஈட்டும் வருமானம்தான். ஒவ்வொரு ரூபாயும் எங்களுக்கு முக்கியம்,'' என்கிறார் ராஜன் சௌத்ரி.

''இந்தியா முழுவதும் வளர்ச்சி அடைந்துவருகிறது என ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஆட்சியில் இருக்கும்போது சொல்கிறார்கள். எங்களைப் போன்றவர்கள் ஏன் சொந்த நாட்டில், கூலிக்காக வேறு மாநிலத்திற்குச் செல்லவேண்டும் என்று புரியவில்லை? எங்கள் ஊர் எப்போது வளர்ச்சி அடையும் என்று தெரியவில்லை. எங்கள் துயரங்களை பீகார் அரசுக்கு தெரிவியுங்கள்,'' என குழந்தை தொழிலாளராக சென்னையில் கட்டட வேலைக்கு வந்த ராஜேஷ் கூறுகிறார். இவர் பீகார் மாநிலம் சத்தர்காட் பகுதியில் இருந்துவந்து சென்னை கந்தன்சாவடியில் வேலை செய்து வந்தார்.

'மரணத்தில் பிடியில் இருந்து தப்பித்தேன்'

கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைசெய்து சேர்த்த பணத்தைக்கொண்டு தனது தங்கை திருமணத்தை நடத்தவும், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் முடிந்தது மகிழ்ச்சிதான் என்றாலும், அச்ச உணர்வோடு இனி கட்டட வேலை செய்யமுடியாது என்ற முடிவுக்குவந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

கந்தன் சாவடி விபத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் பேசுகிறார் ராஜேஷ்.

''சாரத்தில் நின்றுகொண்டு பாரத்தை ஏற்றுவதற்கு முன்பாக என் மனதில் ஒரு படபடப்பு வந்தது. இதற்கு முன்பும் கட்டிடவேலை செய்திருந்தாலும், இந்த முறை ஒருவித பயம் இருந்தது. சூபர்வைசரிடம் சொன்னோம். பிரச்சனை இருக்காது வேலையை செய்யுங்கள் என்று கூறினார். அடுத்து இருபது நிமிடங்களில் விபத்து. எங்கும் புகை. தூசி நிரம்பிய இடத்தில் நான் உயிரோடு இருக்கிறேனா என யோசித்துக்கொண்டு எழுந்தேன். என்னைச் சுற்றிலும் என் நண்பர்கள் கிடந்தார்கள். எங்களைப் போலவே பீகாரில் இருந்துவந்த மற்றொரு குழுவைச் சேர்ந்த பப்லூ இறந்துவிட்டார் என்று தெரிந்தபோது, உறைந்துபோனேன். நான் மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்துவந்துள்ளேன்,'' என்கிறார்.

படக்குறிப்பு,

ராஜேஷ்

தமிழகத்தில் பல இடங்களில் பீகார் தொழிலாளர்கள் வேலை செய்வதால், ஒன்பதாம் வகுப்பை முடித்துக்கொண்டு குடும்ப வறுமையை போக்குவதற்காக தனது உறவினருடன் வந்தவர் ராஜேஷ். ''எங்களுக்கு உணவு, இருப்பிடம் எல்லாம் தரக்குறைவாகவே கிடைக்கும் என்று நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டுக்குப் போய் வரமுடியும். ஊர், உறவு என எல்லாவற்றையும் பிரிந்துவந்த நாங்கள் கடுமையான உழைப்பாளிகள். சில நாட்கள் 12 மணிநேரம் கூட வேலைசெய்யவேண்டும். கட்டிடம் முடித்து, புதுவீடகவோ, அலுவலகமாக மாறியதும், நாங்கள் அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவோம். நாங்கள் எதிர்பார்ப்பது பாதுகாப்பு, மருத்துவ வசதி மட்டுமே,'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

'தொழிலாளர் விடுதிக்கு யாரும் வரவில்லை'

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் எழுப்பிய கேள்விகளுடன் தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபிலிடம் பேசினோம்.

''கந்தன்சாவடி விபத்தில் சிக்கிய தொழிலளர்களுக்கு உடனடி மருத்துவ வசதி கொடுக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு மாற்றாமல், தொடர்ந்து சிகிச்சை அளிக்குமாறு முதல்வர் கூறினார். இறந்தவர்களுக்கு உதவித்தொகை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டட விபத்திற்கு காரணமாக இருந்த இருவர் கைதாகியுள்ளார்கள்,'' என்றார்.

கந்தன்சாவடி விபத்து பற்றியதாக மட்டும் பார்க்காமல் பொதுவாக கட்டட வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் பற்றி கேட்டபோது, ''கட்டடங்கள் கட்டும்போது, தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களின் மருத்துவ அறிக்கை, பாதுகாப்பு வசதிகள் பற்றிய தகவல்களைக் கொண்டுதான் லைசென்ஸ் பெறவேண்டும். சிலர் லைசென்ஸ் பெறாமல் வேலையை தொடங்கிவிடுகிறர்கள். விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். வெளிமாநில தொழிலாளர்களுக்காக காஞ்சிபுரத்தில் இரண்டு விடுதிகளை ரூ.14 கோடி மற்றும் ரூ.16 கோடியில் அமைத்துள்ளோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை யாரும் அங்கு வந்து தங்கவில்லை,'' என்றார்.

பட மூலாதாரம், assembly.tn.gov.in

படக்குறிப்பு,

நிலோபர் கபில்

கந்தன்சாவடி விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப தேவையான வசதிகளை கட்டட உரிமையாளர்தான் அளிக்கவேண்டும் என்று கூறிய அமைச்சர் நிலோபர் அவர்களின் குறைகளை கேட்டறிய அதிகாரிகளை அனுப்பப்போவதாக தெரிவித்தார்.

'தொழிலாளர்களைத் தேடி அதிகாரிகள் செல்லவேண்டும்'

அமைச்சர் நிலோபரின் பதில்கள் தனக்குள் மேலும் சில கேள்விகளை எழுப்புகின்றன என்கிறார் கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் முறைசாராத் தொழிலாளர்களுக்காக போராடும் செயல்பாட்டாளர் கீதா.

''தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இரண்டு விடுதிகளை அமைதுள்ளர்கள். அதை பற்றிய விவரம், விளம்பரம் செய்யவில்லை. முழுமையாக மாநிலம் முழுவதும் எத்தனை தொழிலாளர்கள் இருகிறார்கள், எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தவேண்டும். அவர்களுக்காக அடிப்படை மருத்துவ வசதிகளை கட்டட உரிமையாளர்கள் வழங்குகிறார்களா என்பதை உறுதி செய்யவேண்டும். வழக்கு பதிவு செய்தால், அது நடந்து முடிவதற்குள், தொழிலாளர்கள் அடுத்தடுத்து தங்களது வேலைக்காகச் சென்றுவிடுவார்கள். அவர்கள் தினக் கூலிக்காக தங்களது உறவுகளை விட்டு இங்குவருகிறார்கள். அவர்களுக்காக அடிப்படை வசதிகளை செய்வதில் ஏன் நாம் அக்கறை செலுத்தக்கூடாது,'' என்கிறார் அவர்.

''இடம்பெயரும் தொழிலாளர்கள் பலரும் சாலையோரங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பொது இடங்களில் வசிக்கிறார்கள். இவர்களின் உழைப்பைப் பெறும் நாம் அவர்களுகான் அடிப்படை உரிமைகளை தரவேண்டும். வாரியம் அமைத்துவிட்டு, தொழிலாளர்கள் வந்து பதிவுசெய்துகொள்ளவேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை. இடம் பெயரும் தொழிலாளர்களின் இடத்திற்கு அரசு அதிகாரிகள் சென்றால் மட்டுமே தொழிலாளர்களுக்கு உதவி கிடைக்கும்,'' என்று கூறுகிறார் கீதா .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :