ராமநாதபுரம்: நிலத்தில் திடீர் விரிசல், மரத்தடியில் தஞ்சம் புகுந்த மக்கள்

தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி அருகே திடீரென ஏற்பட்ட நில வெடிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து மரத்தடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி பகுதியில் உள்ளது வளையனேந்தல் என்னும் சிற்றூர். இங்கு சுமார் 80 வீடுகள் உள்ளன.

இன்று காலை முதல் இவ்வூரில் நிலத்தில் பல இடங்களில் பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதிக்கு அருகே, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி குழாய்கள் பதிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளன. பூமிக்கு அடியில் இயற்கை எரிவாயு இருக்கிறதா என்று சோதனை நடத்துவதற்காக தற்போது 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை கிணறுகள் அமைத்து ஆய்வு நடத்தி வருகிறது ஓ.என்.ஜி.சி.

இன்று காலையில் ஏற்பட்ட வெடிப்பு அப்பகுதியைச் சுற்றிலும் பரவியதோடு வீடுகளுக்குள்ளும் பரவியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் வீடுகளை காலி செய்து திருப்புல்லானி - கீழக்கரை சாலையில் அமைந்துள்ள புளிய மரத்தடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து கீழக்கரை வட்டாச்சியர் ராஜேஸ்வரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு வருவாய் கண்காணிப்பாளர் (சுரங்கம்) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தரை விரிசல் குறித்து ஆய்வு ஆய்வு செய்து விட்டு சென்றனர்.

ஆய்வின் முடியில் தரையில் ஏற்ப்பட்ட விரிசல் மழை இல்லாததால் ஏற்பட்ட நிலத்தடி நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டது என குறிப்பிடப்பட்டது. மேலும் வீட்டை காலி செய்துவிட்டு மரத்தடியில் தஞ்சம் புகுந்துள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த முனியான்டி பிபிசி தமிழிடம் பேசும்போது, "ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆய்வுகளை நிறுத்த வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தால் தான் இந்த தரை விரிசல் ஏற்பட்டுள்ளது. மண்ணுக்கு அடியில் அமைக்கப்பட்ட குழாய்களை பரிசோதனை செய்ய வேண்டும்," என தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய கீழக்கரை வட்டாச்சியர் ராஜேஸ்வரி, "கடந்த 1983-84 கால கட்டங்களில் ஓ.என்.ஜி.சி சார்பில் பூமிக்கு அடியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக குழாய் பதிக்கட்டுள்ளளது. அருகில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் புதிய இயற்கை எரிவாயு எடுப்பதற்க்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆனால் அவை அனைத்தும் மிக தூரத்தில் உள்ளதால் தரை விரிசலுக்கும் ஓ.என்.ஜி.சி நிர்வாகத்திற்க்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. ஆழ்துளை பணிகள் தற்போது எதுவும் நடைபெறவில்லை மேலும் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதி மண்ணை சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர்," என தெரிவித்தார்.

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு வருவாய் கண்காணிப்பாளர் (சுரங்கம்) டாக்டர் சுகந்தா ரஹிம் பிபிசி தமிழிடம் பேசும்போது, "திருப்புலாணி அருகே வளையனேந்தல் என்ற பகுதியில் திடீரென நிலத்தில் விரிசல் ஏற்பட்டதாக மக்கள் தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியினை ஆய்வு செய்த போது அங்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மழையில்லாத காரணத்தால் மண்ணுக்கு அடியில் நீர் முற்றிலும் இல்லாத சுழ்நிலையில் 0.5 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை களி மண்ணில் விரிசல் விட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் கூறுவது போல் நில அதிர்வு மற்றும் நில நடுக்கம் போன்றவை எதுவும் நிகழவில்லை. இந்த ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :