15 ஆண்டுகளாக ஒட்டுமொத்த கிராமத்தை நிர்வகிக்கும் பெண்கள்

15 ஆண்டுகளாக ஒட்டுமொத்த கிராமத்தையும் நிர்வகிக்கும் பெண்கள்

பச்சைபசேல் என்றும், சுத்தமாகவும் இருக்கும் சாலைகள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த முகங்கள் கொண்ட குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்திலுள்ள படல்பரா கிராமத்துக்குள் நீங்கள் செல்லும்போது உங்களையும் மகிழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த கிராமத்தினர் தங்களது தலைமை குறித்து பெருமைப்படுவது உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.

இங்கு சுரண்டகளும் இல்லை; புகார்களும் மிகவும் அரிதாகவே உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக எவ்வித தேர்தலும் இல்லாமல் ஒரே குழுவை சேர்ந்த பெண்களை மட்டுமே தங்களது பஞ்சாயத்து உறுப்பினர்களாக இந்த கிராமத்தினர் தேர்தெடுப்பதே இதற்கு காரணமாக உள்ளது.

பெண் கல்வியாக இருக்கட்டும் அல்லது சாதிரீதியான பிரச்சனையாகட்டும், 1,472 பேரை மக்கள்தொகையாக கொண்டுள்ள இந்த கிராமம் குஜராத்திலுள்ள மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

ஆச்சர்யமளிக்கும் வகையில், இந்த கிராமத்தில் ஆண்-பெண் விகிதாச்சாரம் 50:50 என்ற வீதத்தில் சரிசமமாக உள்ளது. மேலும், இந்த கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் 55 சிறுவர்களும், 55 சிறுமிகளும் படிக்கின்றனர்.

பெண்களின் தலைமை இந்த கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றியுள்ளது.

இந்த கிராமம் எந்த வகையில் தனித்துவமானது?

தலித் சமுதாயத்தை சேர்ந்த வாலு வாலா இந்த கிராமத்தை போன்று வேறு எங்கும் காணமுடியாது என்று கூறுகிறார். "எந்த விதமான பாகுபாட்டையும் நான் இங்கு சந்தித்ததில்லை. அனைத்து பொது நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் கோவில்களில் தலித்துகளுக்கு சரிசமமான இடமளிக்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

இந்த கிராமத்தை நிர்வகிக்கும் பெண்கள் தங்களது கொள்கைகளில் தலித்துகளுக்கும், பெண்களுக்கும் முதன்மையான இடத்தை கொடுப்பதே இந்த கிராமம் தனித்துவமாக செயல்படுவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

"நடைபாதைகள் அமைப்பதோ, மரம் நடுவதோ அல்லது தண்ணீர் இணைப்பு கொடுப்பதோ என்ற எதுவாக இருந்தாலும் அதன் பலன் முதலில் தலித்துகளை சென்றடைவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்" என்று கிராம பஞ்சாயத்தின் துணைத்தலைவரான கவி கசோட் கூறுகிறார்.

இந்த கிராம பஞ்சாயத்தின் மிகவும் மூத்த உறுப்பினரான ராமா பாம்பனியாவின் வாழ்க்கை அவரது வீடு, தோட்டம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தை நோக்கியே செல்கிறது.

தங்களது கிராமம் குறித்து பிபிசியிடம் பேசிய ராமா பாம்பனியா, "இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. தண்ணீர், துப்புரவு, சாக்கடை அல்லது மின்சாரம் என்று எதிலுமே இங்கு பிரச்சனையில்லை. அனைத்து பிரச்சனைகளும், பஞ்சாயத்தின் பெண் உறுப்பினர்களால் சிறப்பாகவும், குறித்த நேரத்திலும் சரிசெய்யப்படுகிறது" என்று அவர் கூறினார்.

அனைத்து மட்டங்களிலும் பங்கேற்பு ஜனநாயகத்தை ராமா நம்புகிறார். "ஒரு பிரச்சனை உயர்மட்ட அதிகாரிகளிடம் செல்வதற்கு முன்பு, அவற்றை நாங்களே முடித்துக்கொள்வதற்கு முயற்சி செய்கிறோம்."

ராமா தனது மகள் ஜெயஸ்ரீ பாம்பனியாவுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.

எங்கள் கிராமத்திலுள்ள பெண்கள் முதுகலை பட்டப்படிப்பை படிப்பை முடிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். தற்போது வணிகவியலில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் ஜெயஸ்ரீ மேற்கொண்டு படிக்க விரும்புகிறார். "பாலின சமத்துவம் என்பது உண்மையாகவே படல்பரா கிராமத்தில் செயல்படுத்தப்படுகிறது" என்கிறார் பிபிசியிடம் பேசிய ஜெயஸ்ரீ.

கடுமையான விதிமுறைகள்:

கிராம பஞ்சாயத்தின் தலைவரையும், அதன் மற்ற உறுப்பினர்களையும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்காத கிராமம் சம்ரஸ் கிராமம் என்றழைக்கப்படுகிறது. பஞ்சாயத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கிராமவாசிகளால் ஏகமனதாக நியமிக்கப்படுகின்றனர். கடந்த 15 வருடங்களாக சாம்ரஸ் முறையில் இந்த கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

"மக்களிடையே நிலவும் ஒற்றுமைக்கு இந்த கிராமம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த கிராமத்தில் வாழும் அனைத்து சமுதாய மக்களின் பிரதிநிதியும் கிராம பஞ்சாயத்தின் உறுப்பினராக உள்ளனர்" என்று கூறுகிறார் இந்த கிராமத்தை சேர்ந்த பிக்கு பாராட்.

மேலும், அனைத்து ஒழுக்க விதிமுறைகளும் கிராமத்தினரால் கடைபிடிக்கப்படுவதை கிராம பஞ்சாயத்து உறுதிசெய்கிறது.

"சாலையில் எவராவது குப்பை வீசினால் ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்று பாம்பனியா கூறுகிறார்.

"பெண் தலைவர்களின் சிறந்த நிர்வாக மேலாண்மையால் படல்பரா கிராமத்தினரின் வாழ்க்கை தரம் மேம்பட்டிருக்கிறது" என்று பிபிசியிடம் பேசிய மருத்துவரான ஹெடல் பாராட் கூறுகிறார்.

கிராமத்தின் பெண்கள் தலைவர்கள் சமூக மற்றும் குடிமை பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிறார் அவர். "அவர்கள் விரைவாக செயல்பட்டு, பிரச்சனையை சுமுகமாக தீர்க்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

படல்பரா கிராமத்தின் பெண் தலைவர்கள் கொண்டுவந்த சமூக மாற்றத்தை முதலாக கொண்டு மற்ற கிராமங்கள் செயல்படுமென்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

"புதிய தலைமுறையை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தங்களது தாயாரை முடிவெடுப்பவர்களாக பார்த்து வளருவதே ஒரு மிகப் பெரிய சாதனை. பெண்கள் தலைமையை ஏற்கும்போது சமூக வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளை சரிசெய்வது முதன்மையான இடத்தை பெறுகிறது" என்று சமூகவியல் நிபுணரான கௌரங் ஜானி கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :