யூ-டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்த கணவர் கைது - பலியான மனைவி

யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் - மனைவி பலி

திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் இயற்கை மருத்துவம் என்ற பெயரில் யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்ததில் அவர் உயிரிழந்தார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி, கணவர் கார்த்திகேயன் அவரது நண்பருடன் பிரசவம் பார்த்ததில் மனைவி கிருத்திகா உயிரிழந்துள்ளார்.

அவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்துள்ளார்.

புதுப்பாளையம் அமர்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன் திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விவசாயம் மற்றும் ரசாயன கலப்பில்லாத உணவுப் பொருட்கள் பயன்படுத்துவது போன்றவைகளில் ஆர்வம் உள்ள இவர், தனது மனைவி கிருத்திகா கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவனைக்கு செல்வதை தவிர்த்து அவரது நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருத்திகா பிரசவ வலியால் துடித்த நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவியை வீட்டிற்கு வர வைத்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

வலியால் துடித்த கிருத்திகா

அப்போது கிருத்திகாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது வலியால் துடித்த கிருத்திகா வீட்டிலேயே இறந்துள்ளார். வீட்டில் பிரசவம் பார்த்தது குறித்து பிபிசி தமிழிடம் கார்த்திகேயன் நடுங்கிய குரலில் பேசத்தொடங்கினார். "மருந்து மாத்திர சாப்டாம, ஹாஸ்ப்பிட்டல் போகாம வீட்டுலியே குழந்த பிறக்கனும்னு நான் ரொம்ப ஆர்வமா இருந்தேன். அதுதான் என்னோட விருப்பமா இருந்துச்சு. அதுக்காக இயற்கை உணவு அதிகமா எடுத்துக்கிட்டோம்," என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது அழுது கொண்டே பதிலை முடித்துக்கொண்டார்.

சம்பவம் குறித்து கிருத்திகாவின் தந்தை ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தபோது, "எனக்கு மூன்று மகள்கள். கிருத்திகாதான் மூத்த மகள். மருமகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். என் பொண்ணு கர்ப்பமானதுல இருந்தே மகள், மருமகன் இரண்டு பேர் கிட்டயும் ஹாஸ்ப்பிட்டல் போக சொன்னேன். ஆனா அவங்க அதுக்கு ஒத்துக்கல. வீட்டிலேயே பிரசவம் பாக்கறதா சொன்னாங்க. மருமகனோட நண்பரும் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பாத்ததா சொன்னாங்க."

"போன ஞாயிற்றுக்கிழமை மருமகன் போன் செய்து பெண்குழந்தை பொறந்திருக்கு, கிருத்திகாவுக்குதான் மூச்சு பேச்சு இல்ல நீங்க வாங்கன்னு சொன்னாரு. நாங்க அப்பவே போனோம். போய் பாக்கும்போது என் பொண்ணு மயக்கமா இருந்தா. உடனே ஆம்புலன்ஸ வர சொல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோனோம். அங்க டாக்டர் பாத்துட்டு ஏற்கனவே இறந்துட்டதா சொன்னாங்க," என்றார் கிருத்திகாவின் தந்தை ராஜேந்திரன்.

மேலும், பிரசவம் பார்க்கும்போது கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் உடன் இருந்ததாகவும், யூ டியூபை பார்த்து பிரசவம் செய்ததாகவும் மருமகன் கூறியதாகவும் சொன்னார்.

இவர்கள் மட்டுமல்லாது பிரவீனின் மனைவி லாவண்யாவும் பிரசவத்தின்போது உடன் இருந்ததாகவும், பிரசவம் பார்த்த மூவர் மீதும் முறையற்ற வகையில் பிரசவம் பார்த்து உயிராபத்தை உண்டாக்கியதாக திருப்பூர் மாநகர சுகாதார அலுவலர் பூபதி சார்பில் காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருத்திகா இறந்தது குறித்து நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உதவி ஆய்வாளர் தனசேகர் பிபிசி தமிழிடம் காவல்துறை நடவடிக்கை குறித்து தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேந்திரன் என்பவர் புதுப்பாளையம் அமர்ஜோதி கார்டன் பகுதியில் தனது மகளுக்கு வீட்டில் பிரசவம் நடைபெற்றபோது இறந்ததாகவும், மகள் கிருத்திகாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பிரிவு 174ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

கிருத்திகாவின் உடல் கடந்த திங்கள்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றே உடல் மின்தகனம் செய்யப்பட்டது.

இது குறித்து மாவட்ட அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி பிபிசி தமிழிடம் தெரிவித்தபோது, கடந்த 23ஆம் தேதி கிருத்திகா இங்கு கொண்டுவரப்பட்டார். அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் இறந்திருந்தார். அன்றே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் போலீசிடம் கொடுத்துவிடுவோம். அதில் என்ன பிரச்சனை என்பது குறித்து காவல்துறையும், சுகாதாரத்துறையும்தான் விசாரணை செய்யும் என்றார்.

கிருத்திகா இறந்தது குறித்து திருப்பூர் சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் கேட்டபோது, வீட்டில் பிரசவம் பார்த்தது குறித்தும், அந்த பெண் இறந்தது பற்றியும் தகவல் வந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து உடலை வாங்கிச் சென்றுள்ளனர். விசாரணை செய்த பிறகுதான் என்ன நடந்தது என்று சொல்ல முடியும் என்றார்.

தகுதியான நபர்கள் இருக்க வேண்டும்

பெண்களின் பிரசவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மகப்பேறு மருத்துவர் பூங்கோதை செல்வராஜ் "வீட்டில் பிரசவம் பார்ப்பது தவறில்லை. ஆனால் அதற்குத் தகுதியான நபர்கள் இருக்க வேண்டும். மருத்துவர் இல்லாத நிலையில் மகப்பேறு துறையில் பணியாற்றிய பிரசவகால பிரச்சனைகள் பற்றி தெரிந்த அனுபவம் உள்ள ஒருவர்தான் பிரசவம் பார்க்க வேண்டும். பிரசவ நேரத்தில் உதிரப்போக்கு என்பது முக்கியப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது."

பட மூலாதாரம், YOUTUBE

"பிரசவ நேரத்தில் 500 மில்லி முதல் 1 லிட்டர் வரை உதிரப்போக்கு இருக்கும். அப்போது அந்த பிரச்சனையை கையாளக்கூடிய மருத்துவர்கள் மட்டுமே பெண்னை சீரான நிலைக்கு கொண்டுவர முடியும். உதிரப்போக்கு நிற்காத நிலையில் ஒரு சில நேரங்களில் கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும்."

"கிருத்திகா நிச்சயம் உதிரப்போக்கு காரணமாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் என எந்தத் துறையானாலும் முறையான பயிற்சிகள் செய்யாமல் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு செயலும் விபரீதத்தை ஏற்படுத்தும்.

முறையான பயிற்சிகள் இன்றி யூ டியூப் மூலம் வீடியோக்களை பார்த்து அதன் மூலம் பிரசவம் போன்ற மிக அதிக ஆபத்து மிகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வது உயிரிழப்பு போன்ற கேடுகளையே விளைவிக்கும்," என்றாார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியிடப்படாததால், கிருத்திகா இறப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. கிருத்திகா பிரசவித்த பெண் குழந்தைக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர் மற்றும் செவிலியர் மேற்பார்வை இல்லாமல் பிரசவம் பார்க்கப்பட்டது துயரமான சம்பவம் என்றும் இது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும் இன்று, வியாழக்கிழமை, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கணவர் கைது!

திருப்பூர் சுகாதாரத்துறை கொடுத்த புகாரின் பேரில் கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன், அவரது நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகிய 3 பேரின் மீதும் திருப்பூர் நல்லூர் ஊரக காவல்துறையினர், அஜாக்கிரதையாக செயல்படுதல் 304(A)பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கார்த்திகேயனை கைது செய்து அவரிடம் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய பிரவீன், லாவண்யா தம்பதியினரையும் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :