கை மல்யுத்தப் போட்டி: ஹிஜாப் அணிந்து பதக்கம் வென்ற இந்திய பெண்

  • நவீன் நேஹி
  • பிபிசி செய்தியாளர்

14 நாடுகள் பங்கேற்ற கை மல்யுத்தப் போட்டியில் ஹிஜாப் அணிந்து பதக்கம் வென்ற இந்தியப் பெண் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய அளவிலான விவாதங்களை எழுப்பியது.

பட மூலாதாரம், MAJIZIYA BHANU

கை மல்யுத்தப்போட்டியில் தனது தனித்திறமையை நிரூபிக்கும் முதல் இந்தியப் பெண்ணாக உருவெடுத்திருக்கிறார் மஜீஜியா பானு. இதில் ஆச்சர்யம் என்ன என்று நினைக்கிறீகளா? ஹிஜாப் அணியும் இந்தப் பெண், பல் மருத்தவ மாணவியும் கூட...

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 24 வயது மஜீஜியா கை மல்யுத்தத்தில் மட்டுமல்ல, பவர் லிஃப்டிங் மற்றும் பாடி பில்டிங் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வமாக ஈடுபடுகிறார்.

கோழிக்கோடு ஓர்க்காடேரி கிராமத்தில் வசிக்கும் மஜீஜியா, கடந்த ஆண்டு முதல், கை மல்யுத்தம், பாடி பில்டிங் போன்ற விளையாட்டுகளில் தொழில்ரீதியாக ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்ல, பல் மருத்துவ பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டு படித்துவரும் மஜீஜியா இதுவரை மூன்று பதக்கங்களையும் வென்றுள்ளார்.

பிரபலமானது எப்படி?

கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய பவர் லிஃப்டிங் பட்டப்போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற மஜீஜியா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதிலும் 14 நாடுகள் பங்கேற்ற போட்டியில் அவர் ஹிஜாப் அணிந்துக் கொண்டு பங்கேற்றது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது.

பட மூலாதாரம், MAJIZIYA BHANU

படக்குறிப்பு,

பவர் லிஃப்டிங் (பளு தூக்கும்) பயிற்சி செய்யும் மஜீஜியா

பிறகு, 2018 பிப்ரவரியில் மஜீஜியா கேராளவில் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியின் பெண்கள் பிரிவில் 'மிஸ்டர் கேரளா' பட்டத்தை வென்றார். அப்போதும் அவர் ஹிஜாப் அணிந்திருந்தார்.

இந்த ஆண்டு கொச்சி நகரில் நடைபெறும் பெண்களுக்கான பிசிகல் ஃபிட்னஸ் போட்டியில் அற்புதமான திறமையை வெளிப்படுத்தி, தங்க பதக்கம் வென்றார்.

துருக்கியில் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் 40வது கை மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பை வெல்லும் நோக்குடன் ஆர்வத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார் மஜீஜியா. அன்டாலியாவில், அக்டோபர் 12 முதல் அக்டோபர் 21 வரை நடைபெறும் இந்த சர்வதேச போட்டிக்கு உலக கை மல்யுத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

பட மூலாதாரம், MAJIZIYA BHANU

சிறு வயதில் இருந்தே உடல் பலத்தை வெளிக்காட்டும் விளையாட்டுகளில் மஜீஜியாவுக்கு பேரார்வம் இருந்திருக்கிறது. பிபிசியிடம் பேசிய மஜீஜியா, 'எனக்கு உடல் பலத்தை காட்டும் விளையாட்டுகளில் விருப்பம் அதிகம். தொடக்கத்தில் குத்துச்சண்டை விளையாடுவேன். அதில் என்னுடைய குத்துகள் மிகவும் நன்றாக இருக்கும்.

இதைப் பார்த்த என்னுடைய பயிற்சியாளர், எனது கைகள் வலுவாக இருப்பதால், பாடி ஃபில்டிங் மற்றும் கை மல்யுத்தப் போட்டியில் கவனம் செலுத்தலாம் என யோசனை தெரிவித்தார். அவரின் அறிவுரையை பின்பற்றினேன், இப்படித்தான் என்னுடைய விளையாட்டு வாழ்க்கை தொடர்கிறது' என்று சொல்கிறார்.

அவருடைய கிராமத்தில் இதுபோன்ற விளையாட்டுகளுக்கான எந்தவித வசதிகளும் கிடையாது என்கிறார் மஜீஜியா. பயிற்சிக்காக பல கிலோமீட்டர் தொலைவு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

விளையாட்டுக்கான தனது போராட்டங்களைப் பற்றி கூறும் மஜீஜியா, 'நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த என்னுடைய குடும்பத்தில் பண வசதியோ அல்லது வேறு வசதிகளோ கிடையாது. கை மல்யுத்தம், பவர் லிஃப்டிங் போன்ற விளையாட்டுகளுக்கு ஆகும் செலவை செய்யும் அளவு, எனது குடும்பத்தில் வசதி இல்லை.

இதுபோன்ற விளையாட்டுகளுக்கு நிறைய பணம் செலவாகும். ஊட்டச்சத்துள்ள உணவுகள் அவசியம். அதோடு, சிறப்பான பயிற்சியும் தேவை. பயிற்சிக்காக ரயிலில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு தினசரி செல்ல வேண்டியிருக்கிறது' என்கிறார் அவர்.

மகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் மஜீஜியாவின் பெற்றோர், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், மகளுக்கு உறுதுணையாக நிற்கின்றனர். பெற்றோர் மட்டுமல்ல, மஜீஜியாவின் வருங்கால கணவரும், அவரது திறமையை முன்னுக்கு கொண்டுவருவதில் உறுதுணையாக இருக்கிறார்.

தனது குடும்ப வழக்கத்தை கடைபிடிக்கும் மஜீஜியா, ஹிஜாப் அணிகிறார். 'என் பெற்றோர், எனக்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். பொறியியலாளரான என்னுடைய வருங்கால கணவரும் என்னுடைய விளையாட்டு ஆர்வத்துக்கு ஊக்கமளிக்கிறார். விளையாட்டில் ஈடுபட வேண்டுமானால் ஹிஜாபை கைவிட வேண்டியிருக்கும் என்று நானும் முதலில் நினைத்தேன்.

ஆனால், விளையாட்டுத் துறை அதிகாரிகளுடன் பேசியபோது, ஹிஜாப் அணிந்துக் கொண்டு போட்டியில் பங்கேற்பதற்கு தடையில்லை என்று தெரிந்துக் கொண்டேன். ஏனெனில், இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பெண்களும் ஹிஜாப் அணிந்துக் கொண்டுதான் போட்டிகளில் பங்கேற்கின்றனர்'.

பட மூலாதாரம், MAJIZIYA BHANU

எதிர்கொள்ளும் சவால்கள்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கப் சென்றபோது பல இளைஞர்கள் தன்னை கேலி செய்ததாக மஜீஜியா கூறுகிறார். நான் போட்டியில் பங்கேற்று நேரத்தை வீணடிக்கப் போவதாகத் குறை கூறியதை மஜீஜியா நினைவுகூர்கிறார். வெற்றி பெற்றபோது எனது உறுதியையும், திறமையையும் அனைவரும் புரிந்துக் கொண்டனர்.

தான் எதிர்கொண்ட சவால்களை வெளிப்படையாக பேசுகிறார் மஜீஜியா. 'ஹிஜாப் அணிவதால் பல சமயங்களில் எனக்கு ஸ்பான்சர்கள் கிடைக்காமாட்டார்கள். கை மல்யுத்தத்திற்கு அரசு உதவி கிடையாது. வெவ்வேறு அமைப்புகளால் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி தேவைப்பட்டபோது, ஹிஜாப் அணிந்திருந்த ஒரே காரணத்திற்காக உள்ளூர் நிறுவனம் ஒன்று ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக் கொண்டது' என்று அவர் கூறுகிறார்.

பிற விளையாட்டுகளில் இஸ்லாமிய பெண்கள் பங்கேற்கின்றனர், வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிவதில்லை எனும்போது, மஜீஜியா மட்டும் ஏன் ஹிஜாப் அணிகிறார்?

அதற்கான பதிலை மஜீஜியாவே கூறுகிறார்- "சானியா மிர்ஸா டென்னிஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார், அவர் ஹிஜாப் அணியாமல் விளையாடுகிறார், அது அவரது சொந்த விருப்பம், அவரது உரிமை. அதேபோல, ஹிஜாப் அணிவது என்னுடைய சுய விருப்பம். நான் விளையாட்டின் எதாவது விதிமுறைகளை மீறினால் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து தடை செய்யலாம், ஆனால் ஹிஜாப் அணிகிறேன் என்ற காரணத்தால் மட்டுமே எனக்கு தடை விதிக்க முடியாது".

பட மூலாதாரம், MAJIZIYA BHANU

ஆடைகளால் மூடிய கைகளுடன் போட்டியில் பங்கேற்பது எப்படி?

இந்தியாவில் கை மல்யுத்த போட்டிகளை பேரார்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள் இருந்தாலும், அரசு தரப்பில் இருந்து அதற்கு அங்கீகாரம் இல்லை. இந்திய கை மல்யுத்த கூட்டமைப்பு 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் பல மாநிலங்களில் இந்த அமைப்புக்கு கிளைகளும் உள்ளன. ஆனால், இந்த விளையாட்டு அரசு ஆவணங்களில் இடம் பிடிப்பதற்காக இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறது.

கை மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மனோஜ் நாயரிடம் பிபிசி பேசியது. 'நாடு முழுவதும் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகளை ஏற்பாடு செய்கிறோம். அண்மையில் ஜூன் மாதம் ஹரியானாவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டன' என்கிறார் அவர்.

கை மல்யுத்த விளையாட்டு தொடர்பாக இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசும் மனோஜ், 'இந்த விளையாட்டில் பெண்களுக்கென இரண்டு பிரிவுகள் உள்ளன, ஒன்று சிறுமிகள் பிரிவு, அடுத்தது, மகளிர் பிரிவு. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இருந்து 100 முதல் 150 பெண்கள் கை மல்யுத்த போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்கின்றனர்."

ஹிஜாப் அணிந்துக் கொண்டு போட்டியில் பங்கேற்பது பற்றி பேசும் அவர், பொதுவாக கை மல்யுத்தப் போட்டிகளின் விதிமுறைகளின்படி, ஆடை கட்டுப்பாடு உள்ளது. அதன்படி, வீராங்கனை வட்ட கழுத்து கொண்ட டீ-ஷர்ட் அணிந்துக் கொண்டு தனது புஜங்களை காட்ட வேண்டும்.

ஆனால், தனது மதங்களின் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுமென பங்கேற்பாளர்கள் கருதினால், அதற்கு தடையேதும் கிடையாது என்கிறார் அவர்.

ஹிஜாப் அணிந்து கை மல்யுத்தத்தில் பங்கேற்பது விளையாட்டு விதிகளை மீறிய செயல் இல்லையா என்று கேட்டோம். அதற்கு பதிலளிக்கும் மஜீஜியா, 'கை மல்யுத்தப்போட்டியில் எனது வலது கையை பயன்படுத்துகிறேன்.

அப்போது எனது கையை உயர்த்துகிறேன். எனவே, நான் கைகளுக்கு ஆதரவாக எதையும் வைத்துக் கொள்ளவிலை என்ற சந்தேகம் யாருக்கும் எழுவதில்லை' என்கிறார்.

பட மூலாதாரம், MAJIZIYA BHANU

உலக கை மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஒசேனியா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என்ற ஐந்து பிரிவுகளில் ஆசியா பிரிவின்கீழ் 22 நாடுகள் வருகின்றன.

தற்போது, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை பெறும் முயற்சிகளை உலக கை மல்யுத்த கூட்டமைப்பு மேற்கொண்டிருப்பதாக மனோஜ் கூறுகிறார்.

அது மட்டுமல்ல, 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பேராலிம்பிக் (மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள்) போட்டிகளில் கை மல்யுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது, கை மல்யுத்த வீரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக மனோஜ் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :