நாளிதழ்களில் இன்று: பாம்பன் அருகே புதிய எட்டு வழிச்சாலை பாலம்

  • 27 ஜூலை 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்): பாம்பன் அருகே புதிய எட்டு வழிச்சாலை பாலம்

படத்தின் காப்புரிமை Getty Images

ராமேஸ்வரம் பாம்பன் ஜலசந்திக்கிடையில், உலகளவிலான எட்டு வழிச்சாலை பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தொடங்கிவிட்டதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

1,250 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பாலம், ராமேஸ்வரம் தீவில் இருந்து தமிழகத்துக்கு இணைப்பாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பாலம், கனமில்லாத வாகனங்கள் பயன்பாட்டிற்கு இருக்கும்.

இந்த எட்டு வழிப்பாலம் திட்டத்திற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கிவிட்டதாகவும், விரைவில் இத்திட்டம் தொடங்கும் என்றும் அச்செய்தி விவரிக்கிறது.

தினமலர்: "மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் விசாரணை கமிஷன்கள்"

படத்தின் காப்புரிமை Getty Images

விசாரணை கமிஷன்கள் அமைப்பது தேவையற்றது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கண் துடைப்பிற்காகவும், திசை திருப்பவும் அமைக்கப்படும் விசாரணை கமிஷன்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை, இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்கு கடந்த 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கமிஷனுக்கு தடை விதிக்கப்பட்டும், அதற்காக அரசு செலவு செய்வதாகவும், மக்கள் வரிப்பணம் வீணாவதாகவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

அரசு இவ்வாறு செயல்பட்டால், விசாரணை கமிஷன் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்றும் நீதிபதி கூறியதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தினமணி: "சமூக வலைதளங்களில் வதந்திகளை தடுப்பது பெரும் சவால்"

படத்தின் காப்புரிமை Getty Images

சமூக வலைதளங்களில் கட்டற்று பரவும் வதந்திகளை தடுப்பது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமூகத்துக்கு பாதகம் ஏற்படுத்தாது, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு மட்டுமே சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :