டெல்லியில் மூன்று சிறுமிகள் பட்டினியில் சாவு, தந்தையை காணவில்லை #GroundReport

தந்தை மங்கள் சிங்குடன் சுக்கா, பாருல் மற்றும் மான்சி படத்தின் காப்புரிமை BHUMIKA RAI/BBC
Image caption தந்தை மங்கள் சிங்குடன் சுக்கா, பாருல் மற்றும் மான்சி

டெல்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள மண்டாவ்லியில் பட்டினியால் மூன்று குழந்தைகள் இறந்துபோனதாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இரண்டு வயது சுக்கா, நான்கு வயது பாரூல் மற்றும் எட்டு வயது மான்சி ஆகிய மூன்று குழந்தைகளும்தான் பட்டினிக்கு இரையானவர்கள்.

இந்தக் குழந்தைகளின் தந்தை மங்கள் சிங் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. தாய் பீனா அங்கே இருந்தாலும் பிரம்மை பிடித்தவர்போல் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மனநிலை சரியில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

மங்கள் சிங்கின் நண்பர் நாராயண் யாதவ் சமையல் தொழில் செய்பவர். கடந்த வாரம் சனிக்கிழமையன்றுதான் மங்கள் சிங்கையும் அவரது குடும்பத்தையும் இங்கு அழைத்து வந்தார் நாராயண்.

ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மங்கள் சிங்கின் ரிக்‌ஷா திருட்டுபோய்விட்டது. குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். கையில் பணமும் இல்லை. மழை பெய்துக்கொண்டிருந்த அந்த நாளில், குடும்பத்துடன் போக்கிடம் இல்லாமல் நடுத்தெருவில் நின்ற மங்களின் இந்த பரிதாப நிலையைப் பார்த்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தார் நாராயண்.

குடும்பத்தை என் வீட்டில் விட்டுவிட்டு, "பணம் சம்பாதித்துக்கொண்டு ஓரிரு நாட்களில் வந்துவிடுகிறேன், இவர்களை மட்டும் வீட்டில் வைத்துக் கொள். வந்தவுடனே பனம் தந்து விடுகிறேன்" என்று நண்பர் மங்கள் சொன்னதை நினைத்து கண் கலங்குகிறார் நாராயண்.

மங்கள் தன்னுடைய நண்பர் மட்டுமல்ல, சொந்த சகோதரனைப் போன்றே பாசம் காட்டுவதாக சொல்லும் நாராயண், ரிக்‌ஷா ஓட்டி கிடைக்கும் பணம் அவனது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று சொல்கிறார். மங்களின் மனைவியும் வேலைக்கு சென்று சம்பாதிக்கவில்லை. வருமானமும் நிலையாக இல்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுவார். இந்தமுறை வீட்டு சொந்தக்காரர் அவரது பேச்சை கேட்கவில்லை. வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

படத்தின் காப்புரிமை BHUMIKA RAI/BBC
Image caption நாராயண் யாதவ் மற்றும் பீனா

நாராயண் வசிக்கும் குடியிருப்பு பகுதி இரண்டு மாடிகளைக் கொண்டது. அங்கு முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கீழ்தளத்தில் இருக்கும் நாராயணனின் வீட்டுக்கும், அடுத்த வீட்டுக்கும் ஐந்து அடி தூரம்தான் இருக்கும், குழந்தைகள் இறந்ததை பார்க்கவில்லை என்று அங்கு வசிக்கும் குடும்பங்கள் கூறுகின்றன.

"பீனாவின் குடும்பம் வந்ததை நாங்கள் பார்த்தோம். ஆனால் கதவு எப்போதும் சாத்தியிருக்கும் என்பதால் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை" என்று சொல்கிறார் பக்கத்து வீட்டு பெண்மணி.

"சனிக்கிழமையன்று அவர்கள் வந்தபோதே குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் இருந்தது. மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என்று சொன்னேன். ஆனால் அதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது" என்று சொல்கிறார் நாராயண் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மனைவி. தன்னுடைய பெயரை வெளியிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

படத்தின் காப்புரிமை BHUMIKA RAI/BBC
Image caption உடற்கூறாய்வு அறிக்கையின் ஒரு பகுதி

இந்த விவகாரத்தில் குழந்தைகளின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, முதல்கட்ட அறிக்கை வெளிவந்துவிட்டது. அதில் இறப்புக்கு காரணம் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் தங்கள் வீட்டுக்கு வந்தபோதே உடல்நலம் இல்லாமல் இருந்ததை நாராயண் ஒப்புக்கொள்கிறார். அந்தக் குழந்தைகளுக்கு பல நேரங்களில் சாப்பிடக்கூட உணவு இருக்காது, அந்த அளவு வறுமை நிலையில் மங்கள் இருந்தார் என்று அவர் கூறுகிறார்.

"நாங்கள் அனைவரும் திங்கட்கிழமையன்று ஒன்றாக உட்கார்ந்து சாதமும், பருப்பும் சாப்பிட்டோம். ஆனால் குழந்தைகளுக்கு பசி அடங்கவில்லை போலும். செவ்வாயன்று நான் வேலைக்கு போய்விட்டேன். மதியம் வந்து பார்க்கும்போது, மூன்று குழந்தைகளும் படுத்திருந்தார்கள். அவர்களின் கண்கள் மூடியிருந்தன; எழுந்திரிக்கவே இல்லை." என்று நாராயண் சொல்கிறார்.

அதன் பிறகு நடந்ததை நாராயண் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன் பிரதீப் சொல்கிறார். "செவ்வாய்க்கிழமை மதியம் எங்களிடம் வந்த நாராயண், நண்பணின் குழந்தைகள் மயக்கமடைந்துவிட்டதாக சொன்னார். நாங்கள் அனைவரும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு லால்பஹாதுர் சாஸ்திரி மருத்துமனைக்கு சென்றோம். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூவருமே இறந்துவிட்டாதாக சொன்னார்கள்."

மருத்துவமனையில் இருந்து மண்டாவ்லி காவல்நிலையத்திற்கு சுமார் ஒன்றரை மணிக்கு தொலைபேசியில் இறந்துபோன மூன்று குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட தகவல் கூறப்பட்டது என்று சொல்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்த்ர மீனா.

"ஒரு நாள் முன்பு உணவு சாப்பிட்டிருந்தாலும், நீண்ட நேரம் பட்டினியால் இருந்தாதால் இந்த மரணத்தை பட்டினி மற்றும் சத்து குறைபாட்டால் ஏற்பட்டது என்று வகைப்படுத்தலாம்" என்கிறார் சர் கங்காராம் மருத்துவமனையின் மருத்துவர் நரேஷ் பன்சல்.

குழந்தைகளின் தாய் பேசவிலை

படத்தின் காப்புரிமை BHUMIKA RAI/BBC

நாராயணின் வீட்டின் வெளியே கூடியிருக்கும் பலரும் குழந்தையின் தாய் பீனாவை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்கின்றனர். சிலரோ, குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு பேசமுடியாமல் பிரம்மை பிடித்து உட்கார்ந்திருக்கிறார் என்று சொல்கின்றனர்.

நாராயணனின் ஒற்றை அறை வீட்டின் அறை மூடப்பட்டிருந்தது. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. 12க்கு 12 அங்குலம் அளவு கொண்ட ஒரே ஜன்னலில் ஊடகங்களின் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் இருப்பதை பார்ப்பதற்கான ஒரே வழி அந்த ஜன்னல்தான்.

அந்த அறைக்குள் பீனா, நாராயண் மற்றும் ஒரு பெண் காவலர் ஆகியோர் இருந்தனர். வெளியே அமர்ந்திருக்கும் காவல்துறையினருடன் சுமார் ஐம்பது பேர் இருந்தனர். உள்ளே இருப்பவர்களுக்கு காற்று தேவை என்பதற்காக காவல்துறையினர் அவ்வப்போது கதவை திறந்து வைத்தனர்.

மங்கள் எங்கே என்று தெரியவில்லை. அவர் எப்போது வருவார், வருவாரா இல்லையா என்ற எந்த தகவலும் தெரியவில்லை என்று நாராயண் வருத்தத்துடன் சொல்கிறார். கணவன் இருக்கும் இடமும் தெரியாமல், குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பீனா என்ன செய்வார் என்று தெரியவில்லை. தானும் கைவிட்டுவிட்டால், நண்பனின் மனைவி எங்கே செல்வார் என்று சொல்லி கவலையுடன் நண்பருக்காக காத்திருக்கிறார் நாராயண்.

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி வந்தார் மங்கள் சிங்.

குடும்ப அட்டை இல்லை

படத்தின் காப்புரிமை BHUMIKA RAI/BBC

மங்கள் சிங்கிடம் குடும்ப அட்டை இல்லை என்று சொல்லும் நாராயண், அதை வாங்குவதற்கும் பணம் செலவு செய்யவேண்டும் என்று கூறுகிறார். சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள், குடும்ப அட்டை வாங்க பணத்திற்கு என்ன செய்வார்கள் என்று நாராயண் கேட்கிறார்.

இந்த பிரச்சனை மங்கள் சிங்குக்கு மட்டுமல்ல, நாராயண் வசிக்கும் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 30 குடும்பங்களில் பல குடும்பத்தினரிடம் குடும்ப அட்டை இல்லை.

குடும்ப அட்டை வாங்குவதற்கு தேவையான குடியிருப்பு முகவரி சான்றிதழை வீட்டு உரிமையாளர் கொடுப்பதிலை, ஏனெனில் இங்கு வசிப்பவர்களில் சிலர் ரிக்‌ஷா ஓட்டுபவர் என்றால், பலர் கூலித் தொழிலாளிகள். யாருமே நீண்ட நாட்கள் ஒரே வீட்டில் வசிப்பதில்லை. அடிக்கடி வீடு மாற்றுவார்கள். டெல்லி போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த நகரில் தங்குவதற்கு 1000 - 1500 ரூபாய் என்ற வீட்டு வாடகையில் இதுபோன்ற சிறிய வீடுதான் கிடைக்கும். யார் எத்தனை நாள் குடியிருப்பார்கள், எப்படிப்பட்டவர்கள் என்று தெரியாமல் அவர்களுக்காக எங்கள் அடையாள அட்டையை எப்படி கொடுக்கமுடியும் என்று வீட்டு உரிமையாளர்கள் கருதுவதாக நாராயணின் வீட்டு உரிமையாளர் மகன் பிரதீப் கூறினார்.

குருவிக்கூடு போன்ற வீடு

படத்தின் காப்புரிமை BHUMIKA RAI/BBC

நாராயணின் வீட்டுக்கு செல்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், பெரிய அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் வரும்போது மட்டும் கதவு திறக்கப்பட்டது. கதவு திறந்ததும் உள்ளே இருக்கும் நாராயண் மற்றும் பீனாவை பார்த்து பேசிவிட்டு வெளியே வந்து பேட்டி கொடுத்துவிட்டு அவர்கள் சென்று விடுவார்கள்.

டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், மனோஜ் திவாரி, வீட்டினுள் சென்று பீனாவையும், நாரயணையும் பார்த்துவிட்டு வெளியே வந்து, இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்று சொன்னார். ஆனால் இது அரசின் அலட்சியம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

டெல்லி அரசை நிர்வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி ரேஷன் அட்டை வழங்குவதில் ஊழல் செய்வதாக அவர் குற்றஞ்சாட்டினார். "முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இங்கு நேரடியாக வந்து நிலைமையை மதிப்பிடவேண்டும். அவர் ஏன் இதுவரை வரவில்லை என்று கேள்வி எழுகிறது" என்று சொன்னார்.

நாராயணின் வீட்டிற்கு வந்து அவர்களை சந்தித்தபின் செய்தியாளர்களிடையே பேசிய ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், மாநில துணை முதலமைச்சருமான மனீஷ் சிசோதியா, அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக உறுதியளித்தார். கவனக்குறைவால் நிகழ்ந்த இந்த விசயத்தில் விசாரணை முறையாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் பீனாவுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

மண்டாவ்லியில் மூன்று குழந்தைகள் இறந்த விவகாரத்தில் பட்டினிதான் காரணமா என்ற விவாதம் தலைநகரில் சூடு பிடித்துள்ளது. ஆனால், இங்கு வசிப்பவர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கையாவது சாத்தியமா என்று சிந்தித்து பார்க்கத் தோன்றுகிறது.

பிரதான சாலையில் இருந்து நாராயணின் வீட்டிற்கு வருவதற்கு கடந்து வந்த பல குறுகிய தெருக்கள் வெறும் மூன்று அல்லது நான்கு அடி அகலம் கொண்டவையாக இருந்ததை பார்க்கமுடிந்தது. சாக்கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருக்களில் தேங்கி நின்றது.

மூக்கை மூடிக்கொண்டு, துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு தெருவை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. வீதிகளில் இறைந்தும், சேர்ந்தும் கிடக்கும் குப்பைகளுக்கு இடையே கால் பதித்துதான் செல்ல வேண்டும்.

மூன்று-நான்கு பேர் குடும்பம் வசிக்கும் வீடோ மிகச் சிறிய அறைதான். அங்கு காற்று வருவதற்கான வசதிகூட இருக்காது. கதவை திறந்து வைத்தால்தான் காற்று உள்ளே வரும் என்ற நிலைமை.

மூச்சுக் காற்றுக்கே கதவை திறக்கவேண்டும், கதவைத் திறந்தாலோ துர்நாற்றத்தால் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும் என்ற நிலையில் இங்கிருப்பவர்களின் ஆரோக்கியமும், சுகாதாரமும் கேள்விக் குறியாய் தொக்கி நிற்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :