அப்துல் கலாம்: தவழ்ந்து வந்து அஞ்சலி செலுத்திய மாற்றுத்திறனாளிகள்

  • 27 ஜூலை 2018

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு முன்றாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த மாற்றுதிறனாளிகள் கொளுத்தும் வெயிலில் தவந்து வந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

43 பேர் சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் மொத்தமாக 19 இரு சக்கர வகனங்களில் அப்துல் கலாமின் சாதனை குறித்து விளக்கி தமிழகம் முழுவதும் பேரணி நடத்தி இன்று கலாம் நினைவகம் வந்தடைந்தனர்.

கன்னியாகுமரியை சேர்நத மாற்றுதிறனாளி தில்லைமணி பிபிசி தமிழிடம் பேசியபோது, “கடந்த 17ம் தேதி சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி தமிழகத்தின் செங்கல்படடு, புதுச்சேரி, பழனி, கோயம்பத்தூர் வழியாக இராமேஸ்வரம் வந்தடைந்துள்ளோம். வழிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் அப்துல் கலாம் அவர்களின் பொன் மொழிகள் குறித்து விளக்கி, பொன் மொழிகள் அச்சிடப்பட்ட 15 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன” என்று கூறினார்.

இனிவரும் நாட்களில் மாற்றுத் திறனாளிகள் கலாம் நினைவத்திற்க்குள் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருச்சியை சேர்ந்த சுற்றுலா பயணி செந்தில் கூறும்போது, ”அப்துல் கலாமுடைய 3வது நினைவு தினத்திற்காக இங்கு நினைவுமண்டபத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தவந்தேன். அவரிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது அவருடைய எளிமை. கடைசி நேரம் வரைக்கும் அவர் எளிமையாகவே இருந்ததும் அவரின் அமைதி மற்றும் நமது நாட்டின் வளர்ச்சியை குறித்த எண்ணமும் அனைவரையும் கவர்ந்தது,” என்றார்.

“அய்யாவோட நினைவு மண்டபத்தை பார்த்தோம் ரொம்ப நல்லா இருந்தது. சாதாரண ஒரு நிலையிலிருந்து இந்த அளவுக்கு முன்னேறி ஜனாதிபதியாகி விண்வெளி ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு மாணவர்களுடன் கலந்துரையாடி நமது நாட்டை வல்லரசாக்க பாடுபட்டார் அதே மதிரி மாணவர்களும், இளைஞர்களும் அவருடைய கொள்கையை கடைபிடித்து ஒரு ரோல் மாடலாக பாடுபட்டு அவரின் கனவை நனவாக்கும் விதமாக இந்தியாவை வல்லரசாக்க ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்” என திருச்சி சுற்றுலா பயணி தமிழரசி தெரிவித்தார்.

பெங்கலூரவை சேர்ந்த துளசி பிபிசி தமிழிடம் கருத்து தெரிவிக்கையில், “அப்துல் கலாமுடைய புத்தகங்களை படித்தும் அவருடைய ஓவியங்களை பார்த்தும் அதே போல அவர் பாதுகாப்பு துறையில் பணியாற்றும்போது உள்ள காட்சிகளை பார்த்தோம். அனைத்தும் நேரில் பார்ப்பதைப்போன்று பிரமிப்பாக இருந்தது. இது எங்களுடைய கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இன்று அவரது நினைவு தினத்தில் அவரை ரோல் மாடலாக ஏற்போம்,” என்றார்.

நான் பெங்களூரில் இருந்து வருகிறேன். கலாம் சாரின் நினைவு மண்டபத்துக்கு போய் பார்த்தோம். அவர் பயன்படுத்திய பொருள்கள் எல்லாம் பார்த்தோம். அந்தப் பொருளைப் பார்க்கும்போது, அவை இன்னும் உயிரோட்டமாய் இருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த நினைவு மண்டபத்தை இங்கு வந்து பார்ப்போர் அனைவருமே அவர் உயிரோடு இருப்பதைப்போன்றே உணர்கின்றோம்” என பெங்களுர் மாணவர் விக்னேஷ் தெரிவித்தார்.

கலாம் அண்ணன் மகள் நசிமா கூறுகையில், “இன்னைக்கு எங்க சித்தப்பா ஏபிஜே அப்துல் கலாமுடைய மூன்றாவது நினைவு தினம். அவருடைய வாழ்நாள் முழுவதும் இந்திய நாடு தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கணும். அதற்கு ஏற்ற வகையில் மாணவர்களையும் இளைஞர்களை சந்தித்து வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் திறந்துவைக்கப்பட்ட கலாம் நினைவு மண்டபத்தை கடந்த ஆண்டு 33 லட்சம் பேர் பார்த்துசென்றுள்ளனர் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதே உணர்வோடு அனைவரும் வந்து செல்வார்கள் என நம்புகின்றோம்” என்றார்.

தத்தா கலாம் கண்ட கனவு என்பது ஒட்டுமொத்த இந்தியாவில் வாழும் 120 கோடி மக்களின் கனவு. சுகாதார மிக்க, வளம் மிகுந்த, முன்னேற்றமடைந்ததாக இந்தியா உருவாக வேண்டும் என்பதே. இளைஞர்களும், மாணவர்களும் இந்த கனவை நினைவாக்குவர் என நம்பினார். அவருடைய வாழ்வில் அவர் விஞ்ஞானியாக இருந்தபோதும் சரி, ஜனாதிபதியாக இருந்தபோதும் சரி இந்தியாவை ஒரு வளர்ச்சி மிகுந்த இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதே. வீட்டுக்கொரு நூலகம் அமைக்கவும், மரம் வளர்க்கும் திட்டத்தையும் கலாம் அறக்கட்டளையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலாமின் பேரன் சலீம் கூறினார்.

தமிழக தென் கோடியில் உருவான அறிஞர்

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.

இவர் பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என பல்வேறு விருதுகளை பெற்றவர்.

தனது பதவிக்காலம் முடிந்த பின் அப்துல் கலாம் டெல்லியில் ராஜாஜி மார்க் சாலையில் அமைந்துள்ள வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த 2015 ஜீலை 27ல் அவர் காலமானார். இதனையடுத்து அவரது உடல் அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரத்திற்க்கு கொண்டுவரப்பட்டு ஜீலை 30ல் பேக்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவு மணிமண்டபம்

அந்த இடத்தில் மணிமண்டபமும், மணவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் அறிவுசார் மையமும் அமைக்க வேண்டும் என கலாமின் சகோதார் முத்தமீரான் மரைக்காயர் இந்திய பிரதமர் மோதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து கடந்த 2016ம் ஆண்டு ரூ 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கட்டுமான பணிகள் மேம்பாட்டுதுறை சார்பில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி மணிமண்டபத்தை திறந்து வைத்தார் அதுமுதல் பொது மக்களும் அங்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இதிலுள்ள நினைவகத்தில் கலாம் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவர் அணிந்த உடைகளின் மாதிரி, ராக்கெட் உள்ளிட்ட 3 வடிவத்தைபோல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு மக்களின் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :