கருணாநிதி உடல்நிலை - 'தலைவர் நல்ல நிலையில் இருக்கிறார்; வதந்திகளை நம்ப வேண்டாம்' - ஆ.ராசா

படத்தின் காப்புரிமை facebook/pg/Kalaignar89

இரவு 10.15: "தமிழின தலைவர் முத்தமிழ் அறிஞர் உடல்நிலையில் தற்காலிகமாக சிறிது நேரம் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவர் நல்ல நிலையில் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்," என ஆ.ராசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

10.05: திமுக பொதுச் செயலாளரும் கருணாநிதியின் நீண்ட நாள் நண்பருமான க.அன்பழகன் காவேரி மருத்துவமனை வந்தார்.

9.55: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்காலிக பின்னடைவுக்கு பிறகு தற்போது மீண்டும் சீரடைந்து வருவதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரவு 9.50 மணிக்கு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அவரது உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

8.45: காவேரி மருத்துவமனை மற்றும் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலாபுரம் பகுதியில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

8.30: கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அங்கு சென்றார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்தாகவும் வெங்கைய நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதி ஓரிரு நாட்களில் நலம் பெற்று வீடு திரும்புவார் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

95 வயதான திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி தெரிந்துகொள்ள அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், திமுக கட்சி தொண்டர்கள் என பலரும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

காவேரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, கருணாநிதியின் உடல்நலன் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்ததாகவும், அவரின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

''திமுக-வின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக மாநிலங்களவை தலைவர் கனிமொழி ஆகியோரை சந்தித்தேன். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நலம் பெற்று ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். மருத்துவர்கள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள்,'' என்று வீரமணி தெரிவித்தார்.

முன்னதாக மருத்துவமனைக்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைதளங்களில் கருணாநிதி குறித்து வெளியாகும் அவதூறுகள் குறித்து பேசினார். '' செயல்தலைவர் மு.க ஸ்டாலின், மு.க அழகிரி, கனிமொழி ஆகியோரை சந்தித்தேன். உடல் நலம் தேறி வருவதாக அவர்கள் சொன்னார்கள். அவர் வழமை போல அரசியலில் பணியாற்ற வேண்டும். கருணாநிதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளியாவதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளேன். அவரது கருத்தை விமர்சிப்பது என்பது வேறு, அவரை வெறுப்பது என்பது வேறு,'' என்று சீமான் கூறினார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க பா.ஜ.கவின் முரளிதர ராவ் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் அங்கு சென்றனர்.

அதே போல, மேற்கு வங்க எம்.பி டெரிக் ஓ பிரையனும் கருணாநிதி குறித்து விசாரிக்க மருத்துவமனை சென்றார். திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மம்தா பேனர்ஜி சார்பாக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக டெரிக் தெரிவித்தார்.

அதேபோல மதுரை ஆதினமும், காவேரி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்றும் அவருக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை தொடர்வதாகவும் காவேரி மருத்துவமனை, சனிக்கிழமை மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.

இதனிடையே காவேரி மருத்துவமனைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கருணாநிதியின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

மருத்துவமனையில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்க அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல் நிலை மோசமடைந்து வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவந்த கருணாநிதி (95), வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க சனிக்கிழமை காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார். மு.க ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்த ஆளுநர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER@JULIE MARIAPPAN
Image caption மருத்துவமனையில் மு.க.ஸ்டாலினுடன் ஆளுநர் பன்வாரிலால்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாச்னிக், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். ஆடிட்டர் குருமூர்த்தியும் மருத்துவமனைக்கு சென்றார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், கருணாநிதி தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரை பார்க்கவில்லை என்றும், ஆனால் மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தெரிவித்தார்.

நள்ளிரவு திடீர் சிக்கல்

வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்ததாக வெள்ளிக்கிழமையன்று கூறப்பட்டது.

ஆனால், அதே நாளில் நள்ளிரவு அவரது உடல்நலத்தில் சிக்கல் ஏற்பட்டதால் அவரது மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோபாலபுர இல்லத்திற்கு விரைந்தார். ஆ.ராசா, துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களும் வந்தனர்.

இதையடுத்து சுமார் 12.15 மணிக்கு, கருணாநிதியை கொண்டு செல்ல காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது. தொண்டர்கள் கூட்டமும் அதற்குள் வீட்டின் முன்பு அதிகமானது.

சுமார் 12.20க்கு கருணாநிதியை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் காவேரி மருத்துவமனை நோக்கிப் புறப்பட்டது. உடன் ஸ்டாலின் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

2016 முதல்...

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உடல் நலக் குறைவின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார் கருணாநிதி. அவர் மூச்சு விடுவதை எளிதாக்க அவருக்கு ட்ராக்யோஸ்டமி குழாயும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம், ட்ராக்யோஸ்டமி குழாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டது. இதற்குப் பிறகு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று

கடந்த புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் பயப்படும்வகையில் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், கருணாநிதிக்கு சிகிச்சையளித்துவரும் காவிரி மருத்துவமனை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்தச் செய்திக் குறிப்பில் அவருக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைக் குணப்படுத்த தேவையான மருந்துகள் தரப்பட்டுவருவதாகவும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனைக்கான வசதிகள் செய்யப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு அவரைக் கண்காணித்துவருவதாகவும் கூறப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்