"செலவுக்கு காசு இல்லை" - ஐ.நா சபை

  • 28 ஜூலை 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர்: செலவுக்கு காசு இல்லை - ஐ.நா

படத்தின் காப்புரிமை Getty Images

கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர், அன்டோனியோ குட்டெரஸ் கடிதம் எழுதி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உரிய காலத்தில் செலுத்தவில்லை என்பதால் சபையின் முக்கிய நடவடிக்கைகளுக்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சில மாதங்களுக்கு முன், 123 கோடியை செலுத்தி உள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பிரேசில், எகிப்து, இஸ்ரேல் உள்ளிட்ட 81 நாடுகள் இன்னும் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

தினமணி : ஓ.பி.எஸ்-உடன் இணைந்தே செயல்படுகிறேன் - இ.பி.எஸ்

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் துணை முதல்வரும் நானும் இணைந்தே செயல்படுகிறோம் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"எனக்கும், துணை முதல்வருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு இடையில் ஏதேனும் பிரச்சனை வருமா என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இருவரும் இணைந்தே செயல்படுகிறோம்" என்று அவர் கூறியதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்): தன்னை தானே புதைத்து கொள்ள முயன்ற நபர்

குண்டூரில், தன்னை தானே புதைத்து கொள்ள முயன்ற நபரை போலீஸார் தடுத்து நிறுத்தியதாக ’தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

லச்சிரெட்டி என்ற அந்த நபர், மரணத்தை அடையுமாறு சிவன் கூறியதாகவும், அதனால் மோட்சம் அடைய இருந்ததாகவும் கூறியுள்ளார். தன்னை தானே உயிரோடு புதைத்துக் கொள்ள நினைத்த அவருக்கு, உள்ளூர் அதிகாரிகள் புத்திமதி கூறினர் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :