“கட்டியை கர்ப்பம் எனக் கூறி சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள்”

  • 29 ஜூலை 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்திதான் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது.

தினத்தந்தி: "கட்டியை கர்ப்பம் என கூறி சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள்"

படத்தின் காப்புரிமை Getty Images

வயிற்றில் உள்ள கட்டியை கர்ப்பம் எனக் கூறி சிகிச்சை அளித்த அரசு டாக்டர்களுக்கு எதிராக ஒரு பெண் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இதில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"எனக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறி தெரிந்ததால், அதே ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள் நான் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர். எனக்கு நவம்பர் 18-ந்தேதி பிரசவம் நடைபெற வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் கூறினார்கள். தொடர்ந்து கஸ்தூரிபா மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றேன்.சீமந்தம் செய்து மகிழ்ந்தனர். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னரும் எனக்கு பிரசவ வலி எதுவும் ஏற்படவில்லை. 2016-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி என்னை பரிசோதித்த கஸ்தூரிபா அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நான் கர்ப்பம் அடையவில்லை. அடிவயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக கூறினார்கள். இதைக் கேட்டு எனது குடும்பமே அதிர்ச்சியடைந்தது.கர்ப்பம் அடைந்ததாக கூறியதால், டாக்டர்கள் பரிந்துரை செய்த மாத்திரை, மருந்துகளை 8 மாதங்களாக சாப்பிட்டு வந்தேன்.தவறான பரிசோதனையால், எனக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்கும் மனரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்திய டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்." என்று சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த அசினா பேகம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டிருப்பதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

"ரஜினியை அ.தி.மு.க தலைவராக்க பா.ஜ.க முயற்சி செய்கிறதா?"

ஹலோ எப்.எம்.மில் ஒலிபரப்பாகும் 'ஸ்பாட் லைட்' நிகழ்ச்சியில் பேசிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தங்களை பொறுத்தவரை மோடிதான் சூப்பர் ஸ்டார் என்று கூறி உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரி சோதனைகள் குறித்து தமிழிசை, வருமான வரித்துறை தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு என்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் சோதனைகள் நடப்பதாக கூறுவது தவறு" என்று கூறினார் என்கிறது அச்செய்தி.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, பாதுகாப்பு துறை மந்திரி சந்திக்க மறுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை இதுபற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் முறையான அனுமதி பெற்றுத்தான் மந்திரியை சந்திக்க சென்றாரா? என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார் என்று விவரிக்கும் அந்நாளிதழ் செய்தி, நடிகர் ரஜினிகாந்தை அ.தி.மு.க. தலைவராக்க பா.ஜனதா முயற்சி செய்கிறதா? என வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு, நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. யாரையும் வெளியே போகவும் சொல்லவில்லை. தங்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டாராக மோடி இருக்கிறார். எதற்கு இன்னொரு சூப்பர் ஸ்டார் என தமிழிசை கூறினார் என்கிறது அந்நாளிதழ்.

படத்தின் காப்புரிமை Dinamalar

தினமணி: 'தா. பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதி'

சிறுநீரக பாதிப்பு காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் (85) சனிக்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக மருத்துவமனைக்கு பகல் 12 மணியளவில் அவர் கொண்டு வரப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு அவர் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

தா.பாண்டியன் நாள்பட்ட சிறுநீரக நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அரசு பொது மருத்துவமனையில் அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சை நடைபெற்று வருகிறது. சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரக மருத்துவ நிபுணர்களின் இரண்டு அல்லது மூன்று நாள்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தனியார் பள்ளிகள் நன்கொடைக்கு வற்புறுத்த முடியாது'

தனியார் பள்ளிகள் நன்கொடை கட்டணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ் கண்ணப்பன் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். அண்மையில் எஸ்எஸ்எம் தனியார் பள்ளி இரண்டு லட்சம் வைப்பு தொகை கேட்டுள்ளது. அப்படி தரவில்லை என்றால் பள்ளியை மூடிவிடுவோம் என்று பெற்றோர்களை எச்சரித்துள்ளது, அதனை தொடர்ந்தே இவ்வாறான அறிக்கை வந்துள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'மரபணு மாற்றம் செய்த உணவுகளை புறக்கணிப்போம்: ரோஹிணி'

நமது உடலுக்கு தீங்கு செய்யும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை நாம் அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்று நடிகர் ரோஹிணி தெரிவித்தார் கூறுகிறது இந்து தமிழ் நாளிதழ்.

இந்து தமிழ்' நாளிதழின் 'நிலமும் வளமும்' இணைப்பிதழ் சார்பில் இயற்கை வேளாண்மை திருவிழாவில் பேசியபோது இவ்வாறாக அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் தற்போதும் அதிகமாக புழங்கிக் கொண்டு இருக்கின்றன. அவற்றை நாம் அடியோடு புறக் கணிக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை நாம் கையில் எடுக்க வேண்டி உள்ளது. பால் உட்பட 21 உணவு வகைகளில் கலப்படம் இருப்பதாக சொல்கிறார்கள். ஆட்சியாளர்களிடம் இயற்கை விவசாயத்தை பற்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். கேரளாவைபோல் தமிழகத்திலும் இயற்கை விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறியதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :