நான் ஏன் கருணாநிதியை சந்திக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன்? - குஷ்பு

கருணாநிதி என்றால் ராஜதந்திரி, கருணாநிதி என்றால் வரலாறு, கருணாநிதி என்றால் சகாப்தம் என்கிறார் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு.

படத்தின் காப்புரிமை Facebook

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தான நினைவுகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்த குஷ்பு, "நான் அரசியலில் இணைவது என்று முடிவெடுத்தப்பின் என் முதல் முடிவாக இருந்தது திராவிட முன்னேற்ற கழகம்தான். அதற்கு காரணம் கருணாநிதி" என்கிறார்.

"நான் அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்ற போகிறேன் என்று முதலில் நான் சொன்னது என் கணவர் சுந்தரிடம்தான். அவர் என்ன கட்சியில் சேரப் போகிறாய்? என்றார். அதற்கு நான் 'திமுக' என்றவுடன், அவர் வியந்து போனார். அதற்கு காரணம் அப்போது நான் ஜெயா டிவியில் தொலைக்காட்சி தொடர் ஒன்றை தயாரித்து நடித்து வந்தேன். ஆனால், திமுகவில் உடனே சேர கூடாது என்று நான் முடிவெடுத்தேன்" என்கிறார்.

திமுகவில் நான்...

அவரே தொடர்கிறார், "அப்போது என் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த சமயத்தில் நான் திமுகவில் இணைந்தால், நான் அரசியல் ஆதாயத்திற்காக இணைவதாக மக்கள் நினைப்பார்கள் என்பதால், என் வழக்கை வென்றபின் தான் நான் கலைஞரை பார்க்க சென்றேன்" என்று சொல்லும் குஷ்பு அந்த சமயத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவலை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"நான் அரசியலில் இணைய இருக்கிறேன் என்று நான் அவரிடம் (கருணாநிதி) சொன்னதும், அவர் சொன்ன முதல் வார்த்தை வாழ்த்துகள்தான். அவர் என்னை திமுகவில் இணைய வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. உனக்கு விருப்பமான கட்சியில் சேர் என்றுதான் சொன்னார். பின், அவரிடம் நான் 'திமுகவில்தான் இணைய விரும்புகிறேன்' என்றதும், அவர் ஆச்சர்யப்பட்டார். 'ஜெயா டிவியில்தானே இருக்கிறாய்' என்றார். 'ஆமாம். ஆனால், கொள்கை ரீதியாக எனக்கு உடன்பாடான கட்சி திமுகதான்' என்றேன். அவரும் மகிழ்ச்சியுடன் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டார்" என்று தெரிவித்தார்.

திமுகவில் வெளியேறிய தருணம்

"சில சம்பவங்களுக்குப் பின் திமுகவிலிருந்து வெளியேறலாம் என்று நான் முடிவெடுத்த போது, எக்காரணத்தை கொண்டும் கலைஞரை சந்தித்துவிட கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தேன். ஒரு வேளை அவரை சந்தித்தால் எனது மனம் மாறலாம் என்று நான் கருதியதுதான் அதற்கு காரணம். அறிவாலயத்தில் நான் என் ராஜிநாமா கடிதத்தை அளித்தேன். அவர்கள் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பின் கோபாலபுர இல்லத்திற்கு சென்று அங்கு இருந்த அமைப்பாளர்களிடம் என் ராஜிநாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்தேன்" என்று கட்சியிலிருந்து விலகிய தருணத்தை பிபிசி தமிழிடம் நினைவு கூர்ந்தார் குஷ்பு.

முதல் சந்திப்பு

கருணாநி்தியுடனான முதல் சந்திப்பு 1991 ஆம் ஆண்டு நிகழ்ந்ததாக கூறும் குஷ்பு அப்போதுதான் சின்ன தம்பி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"எனக்கு அப்போது தமிழ் தெரியாது. சென்னை ஈரோடு செல்லும் ரயிலில் அவரை சந்தித்தபோது நடிப்பு எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு மொழியை புரிந்துக்கொண்டு பேசுவதும் முக்கியம். விரைவாக தமிழ் கற்றுக் கொள் என்றார். பின் அவரது கதையிலேயே என் சொந்த குரலில் பேசி இளைஞன் படத்திலும் நடித்துவிட்டேன்" என்று தன் நினைவுகளை திரட்டி பேசினார் குஷ்பு.

வடக்கு எப்படி கருணாநிதியை பார்க்கிறது?

படத்தின் காப்புரிமை Twitter

"ராஜதந்திரியாக, ஒரு சகாப்தமாக அவரை பார்க்கிறது வடக்கு. வடக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை அவ்வாறாகதான் பார்க்கிறது. கட்சி வேறுபாடுகளை கடந்து அவர் மிகவும் மதிக்கப்பட்டார். அதற்கு காவேரி மருத்துவமனை வாசலே சாட்சி. சித்தாந்த வேறுபாடு கொண்ட எத்தனை தலைவர்கள் வந்து பார்த்தார்கள். அவருக்கு நிகர் அவர் மட்டும்தான்" என்கிறார் குஷ்பு.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்