சுதந்திரப் போராட்ட வீரர் திலகர் இந்து மதவாதி என குற்றம் சாட்டப்படுவது ஏன்?

  • அனந்த் பிரகாஷ்
  • பிபிசி செய்தியாளர்
பால கங்காதர திலகர்

பட மூலாதாரம், PIB

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் பால கங்காதர திலகர். மகாத்மா காந்திக்கு முன்பே தேசிய அளவிலான தலைவர் என்றால் அது திலகர் தான் என நம்பப்படுகிறது.

அவர் இறந்து 97 ஆண்டுகள் கடந்துவிட்டன. திலகருக்கு இறுதி மரியாதை செலுத்தும்போது, 'எங்கள் சகாப்தத்தின் மிகப்பெரிய தலைவர் திலகர்'. என்று மகாத்மா காந்தி புகழாரம் சூட்டினார்.

ஆனால் சமீபத்தில் திலகருக்கு மதச் சாயம் பூசும் அரசியல் கட்சிகள், திலகர் அரசியலில் மதத்தை கொண்டுவந்தார் என குற்றம் சாட்டுகின்றன.

இது கவலைக்குரிய போக்கு என்று வருந்துகிறார் லோகமான்ய பாலகங்காதர திலகரைப் பற்றி 'திலக்-ஜின்னா ஒப்பந்தத்தின் 100 ஆண்டுகள்' (100 Years of Tilak-Jinnah Pact) என்ற புத்தகத்தை எழுதிய சுதீந்த்ர குல்கர்ணி.

பட மூலாதாரம், PMO India

"திலகர் எப்போதுமே இந்து மதத் தலைவராக இருந்ததில்லை. இடதுசாரிகள் எப்போதுமே திலகரை சரியாக புரிந்து கொண்டதில்லை. இந்து மதத்தினர் பெரும்பான்மையினராக இருக்கும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மற்றும் சிவாஜி ஜெயந்தி போன்ற பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக சமூக விழிப்புணர்வையும், புரட்சியையும் கொண்டு வர விரும்பினார். ஆனால் அது முஸ்லிம் விரோத எண்ணத்தின் வெளிப்பாடு அல்ல என்று உறுதியாக சொல்லமுடியும்.

மொஹரம் போன்ற இஸ்லாமிய பண்டிகைகளிலும் திலகர் கலந்து கொண்டிருக்கிறார். லக்னோவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரிட்டனின் ஆளுகையில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும்; ஆங்கிலேயர்களின் ஆட்சியின்கீழ் இருப்பதற்கு பதிலாக முஸ்லிம்களின் கைகளில் அதிகாரம் இருந்தால்கூட பரவாயில்லை ஏனெனில் அவர் நம்மவர்கள்; வெளிநாட்டினர் அல்ல என்று முழங்கினார். உண்மை இப்படி இருக்கையில் திலகரை இந்து மத சார்புடையவர் என்று கூறுவது முற்றிலும் தவறானது."

திலகரின் அரசியல்

1908 முதல் 1914 வரை தேச துரோக குற்றச்சாட்டில் மாண்ட்லே (தற்போதைய மியன்மர்) சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார் பால கங்காதர திலகர்.

உண்மையில், தன்னுடைய "கேசரி" என்ற பத்திரிகையில் முசாஃபர்பூரை சேர்ந்த குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல் சாகியின் வழக்கு பற்றி எழுதினார். அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை எழுதிய திலகர், இந்தியாவுக்கு உடனடியாக சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார். ஐரோப்பிய பெண்கள் இருவரை கொலை செய்ததாக அவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தின்ஷா டாவர் (முகமது அலி ஜின்னாவின் மாமனார்) என்ற நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தது. திலகரின் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்டவர் முகமது அலி ஜின்னா.

பிரபல வழக்கறிஞரான ஜின்னா, திலகருக்காக கடுமையாக வாதிட்ட போதிலும் அவருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜாமீன் விடுதலை கூட சாத்தியமில்லாமல் போனது.

திலகரை பற்றி கூறும் சுதீந்த்ர குல்கர்ணி, "பிற தலைவர்களைப் போலவே, பால கங்காதர திலகரின் சிந்தனைப் போக்கும், வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் மாற்றங்களை கண்டது. ஆரம்பகால திலகருக்கும், அனுபவ முதிர்ச்சி பெற்ற திலகருக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது.

இது இயல்பானதே. மாண்ட்லே சிறைவாசம் திலகரின் வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. சிறையில் இருந்து திரும்பிய திலகரின் சிந்தனையிலும் அரசியல் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் இருந்தன."

பட மூலாதாரம், Hulton Archive

திலகர்-ஜின்னா-இந்திய பிரிவினை

ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு பிறகும்கூட இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிவினையின் சோகத்தையும், தாக்கத்தையும், பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றன.

ஆனால், லோகமான்ய திலகர் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இந்தியாவின் எதிர்காலம் மாறுபட்டிருக்கலாம் என்று கருதுகிறார் சுதீந்தர குல்கர்ணி.

அவரது கருத்துப்படி "திலகர் மேலும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால், இந்திய பிரிவினையின் சோகங்களை நம் நாடு அனுபவித்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது.

இப்படி சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா? இந்து-முஸ்லிம் ஒற்றுமை மற்றும் இரு தரப்பினரும் ஆட்சியில் சமமாக பங்கு வகிக்குமாறு ஒரு திட்டத்தை உருவாக்கிய திலகரும் ஜின்னாவும் அதற்கு 1916இல் திலகர்-ஜின்னா ஒப்பந்தம் என்று வடிவம் கொடுத்தனர். அந்த ஒப்பந்தம் திலகர் இறந்த பிறகும் முறைப்படி அமல்படுத்தப்பட்டிருந்தால் இந்தியா இரு நாடுகளாக துண்டாடப்பட்டிருக்காது."

திலகரிடம் நெருக்கமான ஜின்னா, விலகிய காந்தி

பொதுவாக ஜின்னா ஒரு முஸ்லிம் தலைவராகவே பார்க்கப்படுகிறார்.

ஜின்னா, தன்னை ஒரு முஸ்லிம் தலைவராக கருதியதும் இல்லை; முஸ்லிம் தலைவராக அரசியல் செய்யவும் விரும்பியதில்லை என்று சொல்கிறார் குல்கர்ணி. அதனால்தான் காந்தியின் கிலாஃபத் இயக்கத்திற்கு ஜின்னா ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் திலகரின் வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களில் ஜின்னா அவருக்கு நெருக்கமாக இருந்தார். இருவருமே இந்து-முஸ்லிம் சமுதாயங்களில் அரசியல் ஈடுபாடு குறித்த ஒரு புரிதலை உருவாக்கும் பணியில் பாங்காற்றினார்கள். 1920ஆம் ஆண்டு பாலகங்காதர திலகரின் மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் அரசியலில் இருந்து முகமது அலி ஜின்னா விலகி சென்றுவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :