"விளம்பரத்தாலே உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகாது"

"விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது"

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2014-18ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.4,880 கோடி செலவிட்டுள்ளது

"இந்த நிதியை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட்டிருக்கலம் என்று வாதிடுவது சரியா? அரசின் பணிகளை மக்களிடம் கொண்டு செல்ல இவ்வளவு தொகை செலவிட்டது ஏற்புடையதா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"அரசாங்கம் அநாவசியமாக செலவிடுவது விளம்பரத்தில் மட்டுமல்ல, மற்ற விஷயங்களிலும்தான். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. மக்கள் நலனை பேணிக் காத்தாலே தன்னால் மக்களிடம் சென்று அடையும். விளம்பரம் என்றாலே பொருள் நன்றாக இல்லை என்றுதானே அர்த்தம்" என்று கருத்து பதிவிட்டுள்ளார் சுப்பு லட்சுமி என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.

"மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் தங்கள் சுயவிளம்பரத்திற்காக இந்த தொகையை செலவிட்டார்களா?. இல்லையே, மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல தானே செலவிடப்பட்டது. இதில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது என தெரியவில்லை. அரசின் காப்பீடு திட்டம் , விவசாய மானியங்கள், வீட்டு வசதி திட்டங்கள் மற்றும் இதர துறையினரின் அறிவிப்புகள் விளம்பரம் செய்தால் தான் மக்களிடம் சேரும். அரசுத்துறைகளின் விளம்பரங்கள் செய்தால் தான் பயனாளிகள் வருவார்கள்" என்று கூறியுள்ளார் முத்துச்செல்வம் என்ற நேயர்.

"விளம்பரத்தால் ஆட்சியை பிடித்தவர்களின் எண்ணம் எப்படி இருக்கும். ஆட்சியின் சாதனையை விளம்பரபடுத்துவதை விட 10 பள்ளிகள் கட்டிவிடுவேன் என்று சொன்ன காமராஜர் எங்கே? எதுவுமே செய்யாமல் உலகையே வென்றது போல் விளம்பரத்திற்கு மட்டும் செலவு செய்யும் மோடி எங்கே? இன்னும் மோடியின் வெளிநாட்டு சுற்றுபயண செலவை கணக்கில் கொண்டால்? இவற்றால் சாமானிய மக்கள் கண்ட பயன் என்ன?" என்று கேள்வியெழுப்பியுள்ளார் முகம்மது.

"விளம்பரம் தேவைதான் போலியோ சொட்டு மருந்து விளம்பரம் முதல் கழிப்பறை கட்டுங்கள் என்று மக்களிடம் சொல்ல வேண்டிய அவசியமானது. இந்தியா இன்னும் அடிப்படை வசதி கூட பூர்த்தியாகவில்லை" என்று பதிவிட்டுள்ளார் சீதாராமன் கோவிந்தராஜலு.

"விளம்பரம் ஒரு அளவிற்குதான் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. விளம்பரத்தில் உண்மை இருந்தால்தான் திட்டங்கள் வெற்றி பெறும், பொய்யால் ஆன விளம்பரம் ஒன்றுக்கும் உதவாது" என்று பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :