பாப்பாளை இடமாற்றம் செய்த அலுவலர் மேல் வழக்கு: தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டன் பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி சத்துணவு பணியாளர் பாப்பாள், சாதியைக் காரணம் காட்டி சொந்த ஊரில் பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்ட விவகாரத்தில் அவரை இடமாற்றம் செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தலித் பெண்

வேறொரு ஊரில் வேலை செய்துவந்த பாப்பாள் அண்மையில் வந்து சேர்ந்தார் பாப்பாள். பணியில் சேர்ந்த முதல் நாளே அந்த ஊரின் இடைநிலைச் சாதியைச் சேர்ந்த சேர்ந்த சிலர் சமையலர் பாப்பாள் சமைக்க கூடாது என தடுத்து, அவரை இடமாற்றம் செய்யவேண்டும் என்று தலைமை ஆசிரியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் வற்புறுத்தினர். இதையடுத்து அவர் பழைய பள்ளிக்கே மாற்றப்பட்டார்.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெருமளவில் விமர்சிக்கப்பட்டது. சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து, அவர் திருமலைக் கவுண்டன் பாளையத்திலேயே வேலை செய்ய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அதிகாரி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், ஆணையத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சாதிய வன்கொடுமை செய்ததாக சேவூர் காவல் நிலையத்தில் 88 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நடந்த விசாரணையில், சமையலர் பாப்பாளை பிரச்சனைக்குள்ளான அதே பள்ளியில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், அவருக்கு பணியிட மாறுதல் கொடுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :