தமிழகத்தில் கருணாநிதி கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன?

  • பேராசிரியர் மு.நாகநாதன்,
  • முன்னாள் துணைத் தலைவர், மாநில திட்டக் குழு

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

தமிழக அரசியல் வரலாற்றில் தனது பேராற்றலாலும் பெரும் பணிகளாலும் அயராத உழைப்பினாலும் ஆற்றல்மிக்க படைப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கலைஞர்.

திராவிட இயக்கமானது, இடஒதுக்கீடு கொள்கை, பெண் சமத்துவம், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளிட்ட உயர் நெறிகளை நீதிக்கட்சி காலத்தில் இருந்து பின்பற்றி, டாக்டர் நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்ற பல பெரும் தலைவர்களை உருவாக்கியது.

தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார். 1944ல் திராவிடர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற இளம் தலைவர்களை உருவாக்கி, திராவிடர் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார் பெரியார். 95 வயதுவரை வாழ்ந்து ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளராகப் பெரியார் மறைந்தார்.

அறிஞர் அண்ணா பெரும் சிந்தனையாளராக திராவிட முன்னனேற்றக் கழகத்தை 1949ல் தோற்றுவித்தவராக, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவராக அரசியலில் தனித்தன்மையோடு இயங்கி 1969ல் மறைந்தார். அறிஞர் அண்ணா பிரிவினைக் கோரிக்கையை 1961ல் கைவிட்டாலும் மாநிலங்கள் முழு உரிமையோடு இந்திய ஒன்றியத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினார். தனது இறுதிக் கடிதத்திலும் அக்கருத்தையே வலியுறுத்தினார்.

1969ல் அண்ணா மறைந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காக்கும் பெரும் சுமை கலைஞருக்கு 45 வயதிலேயே ஏற்பட்டது. ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ந்து இருந்த சாதனையிலும் உலக நாடுகளின் தலைவர்களைக் கலைஞர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

பெரியார், அண்ணா ஆகிய இரு பெரும் தலைவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து செயல்பட்ட திராவிட இயக்கத் தலைவர்களில் முதன்மையானவராக கலைஞர் விளங்குகிறார்.

62 ஆண்டுகள் சட்டமன்றப் பணி 50 ஆண்டுகள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த கலைஞரின் சாதனைகள் எண்ணிலடங்கா. இத்தனை பணிகளுக்கிடையே அவர் எழுத்துப் பணியையும் விடவே இல்லை. நாடகம், திரைப்படம், இலக்கியம், ஊடகம், சின்னத்திரை, அரசியல் களம் என அவர் தொடாத் துறையே இல்லை எனலாம்.

1969ல் மத்திய - மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 1973ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார். இந்தத் தீர்மானத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி மாநில உரிமைகளுக்கு வித்திட்ட முதல் முதல்வர் கலைஞர் என்பது அவர் ஆற்றிய அரசியல் பணிகளில் முதன்மையானது என்று குறிப்பிடலாம். இன்று மாநிலங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று ஆந்திரம் தொடங்கி தில்லி வரை முழக்கங்களைக் கேட்க முடிகிறது. இதற்கு முன்னோடி கலைஞர்தான்.

பட மூலாதாரம், FACEBOOK/PG/KALAIGNAR89

சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றியதில் அவரின் சாதனை அளப்பரியது. சான்றாக, கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது ஆகியன பெண்ணுரிமைக்கான, சமூகப் புரட்சிக்கான அடையாளங்களாகும்.

கல்வித்துறையில் பாரதிதாசன் பல்கலைக் கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடைப் பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களை அமைத்துக் கல்விப் புரட்சி செய்ததும் கலைஞரின் மாபெரும் சாதனைகளாகும்.

பட மூலாதாரம், Getty Images

விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்துள்ள ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் தூர்வாரும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. நூற்றுக் கணக்கான உழவர் சந்தைகள் உருவாக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களுக்கு உரிய விலையைப் பெற்றனர்.

வருமுன் காப்போம் திட்டம், கால்நடைப் பாதுகாப்புத் திட்டம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன. ஹுண்டாய், ஃபோர்டு கார் தொழிற்சாலைகள், செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை ஆகியன தமிழகத்தின் தொழில் துறையை மேல்நிலை வளர்ச்சிக்கு எடுத்துச் சென்றன. வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதில் தமிழகம் முன்னிலை பெறும் மாநிலமாகத் திகழ்கிறது.

பணித்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெறுவதற்கு குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் புரட்சி தமிழகத்தில் உருவாவதற்கு டைடல் பூங்கா என்ற கட்டமைப்பை உருவாக்கினார். இதன் வழியாக தமிழ்நாடு மென்பொருள் உற்பத்தியில் பெரும் வளர்ச்சியை எட்டியது. இவ்வாறு, எல்லாத் துறைகளிலும் கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஊக்கப்படுத்தியதால் இயைந்த வளர்ச்சியை தமிழ்நாட்டில் காண முடிகிறது.

பட மூலாதாரம், Getty Images

சமூக நலத்துறையில் முன்னோடியான திட்டங்களை நிறைவேற்றியதால், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்ததாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி பல ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கு சமம் என்று பொருளியல் அறிஞர்கள் அமெர்தியா சென்னும் ஜீன் த்ரெசும் குறிப்பிட்டுள்ளனர்.

விமர்சனமே இல்லாத அரசியல் தலைவர்கள் உலகில் எங்கும் கிடையாது. ஆனால், கலைஞரைத் தனிப்பட்ட முறையில் தாக்கியவர்கள் தமிழக அரசியலில் ஏராளம். அப்படித் தாக்கியவர்களையும் நேரில் கண்டால் நலம் விசாரிப்பது கலைஞரின் உயரிய பண்பாகும். இலக்கியவாதிகளை, கல்வியாளர்களை மதித்துப் போற்றிய மாண்பும் கலைஞருக்கே உரித்தானது.

பண்பாட்டுத் துறையில் அவர் படைத்த சாதனைகள் ஓர் அரும்பெரும் செயலாகும். 133 அடி உயரத்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவருக்குச் சிலை அமைத்த சாதனை காலத்தை வென்று நிற்கும். 1330 குறளுக்கும் மிக எளிய முறையில் உரை எழுதி, திருக்குறள் உரையாசிரியர்களில் இவரும் தனித்த இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வராக 5வது முறை பணியாற்றி 95 அகவையை எட்டி சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்ம, சமூகநீதி சார்ந்த பொருளியல் கொள்கைகளையும், திட்டங்களையும் தீட்டிய கலைஞர், இந்திய அரசியல் வானில் மங்காமல் உலா வரும் ஒரு ஒளிச்சுடர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :