கருணாநிதியின் உடல்நலன் குறித்து விசாரிக்க அஜித், விஜய் மருத்துவமனை வருகை

கருணாநிதி ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, நடிகர்கள் விஜய், அஜித், கவுண்டமணி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்றும் கட்சித் தொண்டர்கள் யாரும் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாமென்றும் மு.க. ஸ்டாலின் கோரிக்கைவிடுத்திருந்தார்.

கருணாநிதி உடல்நலம் குன்றியிருக்கிறார் என்ற செய்தி கேட்டு 21 தி.மு.க. தொண்டர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி தனக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டும் மழையிலும் நனைந்துகொண்டே ‘தலைவா வா‘ என்று எழுப்பிய முழக்கங்கள் வீண் போகவில்லையென்றும், கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் கூறியுள்ள மு.க. ஸ்டாலின், கட்சியினர் யாரும் தங்கள் உயிரை மாய்க்கும் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே இருந்துவருகிறது.

குறிப்பாக கடந்த 29ஆம் தேதியன்று, கருணாநிதியின் உடல்நிலையில் ஒரு பின்னடைவு ஏற்பட்ட தகவல், தி.மு.க. தொண்டர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகு, நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் வந்து பார்த்தார். அந்தப் புகைப்படமும் வெளியிடப்பட்டது.

கருணாநிதி எந்தப் பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு வந்தாரோ, அந்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் காவேரி மருத்துவமனை செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று புதன்கிழமை காலையில் காவேரி மருத்துவமனைக்கு வந்து, மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

நேற்றைய மருத்துவ அறிக்கைக்குப் பிறகு, கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றமோ, பின்னடைவோ இல்லையென மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், அவரது உடல்நலம் சீரடைந்துவருவதாக மு.க. ஸ்டாலின் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :