முதல் பார்வையிலேயே கலைஞரை கவர்ந்த தொண்டர் - பகுதி 1

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

கலைஞர் படத்தின் காப்புரிமை The India Today Group

கலைஞர் அவர்கள், 1970களில் மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் பின்புறமுள்ள மணல் பரப்பில் இரவு நேரங்களில் நண்பர்களோடு அமர்ந்து கடல் காற்றை சுவாசித்து பல விசயங்கள் குறித்து விவாதிப்பதுண்டு. அப்போது தூரத்தில் இருந்து ஈழப் போராளி நண்பர்களோடு பார்த்ததுண்டு. தன்னுடைய வாகனத்தில் ஏறும்போது வணக்கம் தெரிவித்தால், ஒரு நிமிடம் நின்று, யாரு, என்ன? என்று நலம் விசாரிப்பது கலைஞருடைய வாடிக்கை. அப்படித்தான் என்னுடைய முகம் அவருக்கு அறிமுகமானது.

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 1979-ஆம் ஆண்டில் இருந்து என்னை பெயர் சொல்லி அழைக்கும் அளவில் கலைஞர் அவர்களுக்கு பரிச்சயமானேன். தி.சு.கிள்ளிவளவனும், எம்.கே.டி.சுப்பிரமணியமும் (இவர் யாரென்றால் பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுகவை ராபின்சன் பார்க்கில் துவங்கிய நிகழ்ச்சியின் அழைப்பிதழில் இடம்பெற்ற 6, 7 பெயர்களில் இவரும் ஒருவர்), நானும் அன்றைக்கு அரசினர் தோட்டத்திலுள்ள திமுக சட்டமன்ற அலுவலகத்திற்கு செல்லும்போது தான், முழுமையாக கலைஞருக்கு நான் அறிமுகமானேன்.

காங்கிரஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பில் இடம்பெற்று பழ.நெடுமாறனோடு அந்த கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நேரத்தில் சில பிரச்சனைகள் நிகழ்ந்தன. அப்போது தி.சு.கிள்ளிவளவனையும், என்னையும் அழைத்து கலைஞர் அவர்கள் இதுகுறித்து விசாரித்ததும் உண்டு.

தமிழக விவசாயிகள் சங்கம், நாரயணசாமி நாயுடு தலைமையில் தமிழகமெங்கும் போராட்டத்தை எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு எதிராக முன்னெடுத்தது. அப்போது அந்த விவசாய சங்கத்தில் மாணவர்கள், இளைஞர்களை பொறுப்பெடுத்து களப்பணிகள் ஆற்றியதுண்டு. நாராயணசாமி நாயுடு எப்போதும் என்னுடன் தொடர்பில் இருப்பார். என்னுடைய கிராமத்தில் 8 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானார்கள் என்பதை கலைஞர் அறிந்து அதனை கண்டித்ததும் உண்டு. நாராயணசாமி நாயுடுவை சந்திக்க வேண்டும். சென்னைக்கு வந்தால் சொல்லுப்பா என்று கலைஞர் என்னிடம் கூறினார். அவரை சந்திக்கவும் ஏற்பாடுகளை செய்தேன்.

சென்னையில் பாண்டி பஜாரில் 19-05-1982 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டதை ஒட்டி என்னோடு அவர் தங்கியிருந்ததற்காக, எங்களுடைய இருப்பிடமான மைலாப்பூர் 39, சாலைத் தெரு வீட்டை காவல் துறையினர் சோதனை நடத்திய போது தொலைபேசியில் அழைத்து கலைஞர் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

படத்தின் காப்புரிமை Mail Today

குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை போன்றவர்ககளை கலைஞர் தான் கைது செய்தார் என்று எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, பகிரங்மாக குற்றஞ்சாட்டியதை மறுத்து குட்டிமணியிடம் இருந்து கைப்படக் கடிதம் வாங்கி, வழக்கறிஞர் கரிகாலன் மூலமாக கலைஞரிடம் கொடுத்து எம்.ஜி.ஆருக்கு தக்க பதிலை வழங்கியதெல்லாம் அப்போது பரபப்பாக பேசப்பட்டது. இதற்காகவே கரிகாலன் எழும்பூர் கென்னட் லேனில் உள்ள அவருடைய விடுதியில் தினமும் சந்தித்ததும் உண்டு.

ஈழப்பிரச்சனை கடுமையாக உருவெடுத்த போது, குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோருக்கு வெலிக்கடை சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் அவர்களுக்கு கருணை காட்டி தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று பழ.நெடுமாறன் அவர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் கையொப்பம் வாங்கி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று என்னிடம் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை தயார் செய்து கலைஞரிடம் முதலில் கையொப்பம் வாங்குங்கள் என்று சொன்னபோது, நானும், தி.சு.கிள்ளிவளவனும் 05-09-1982 அன்று மதியம் 12 மணியளவில் கலைஞரைத் தொடர்பு கொண்டோம். அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்றக் கட்சி அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள் என்றார்.

நாங்கள் செல்லும்வரை காத்திருந்து, மனுவைப் படித்துவிட்டு யார் தயாரித்தது என்று கேட்டவுடன், உடனே கிள்ளிவளவன், ராதா தான் என்றார். ஆங்கிலத்தில் முதல் கையெழுத்தாக அந்த மனுவில் கையொப்பமிட்டார். அதுமட்டுமல்ல, மறுநாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணிகள் முடிந்துவிட்டதா? டெல்லிக்கு பிரதமர் இந்திரா காந்திக்கு உடனே அனுப்புங்கள். தாமதமாகிவிடப் போகிறது என்று நினைவு வைத்து எங்களிடம் பேசியதெல்லாம் மறக்க முடியாது.

ஆனால் சிங்கள அரசு நியாயங்களை மீறி இவர்களை தூக்கிலிடப்பட்டப்பின் பெரியார் திடலில் 29-08-1983 அன்று நடந்த நிகழ்வில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோரின் படங்களை திறந்து வைத்து கலைஞர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். ஈழப் பிரச்சனையில் அப்போது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு கேட்பதெல்லாம் கலைஞருக்கு வாடிக்கை.

திரு. நெடுமாறன் அவர்கள் மதுரையில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் சென்று இலங்கைக்கு படகில் தன்னுடைய சகாக்களோடு செல்ல வேண்டுமென்று தியாகப் பயணத்தை 07-08-1983அன்று துவக்கினார். இந்த நிகழ்வை வாழ்த்தியனுப்ப கலைஞர் வருவதாக இருந்தது. ஆனால் கலைஞருக்கு உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. எனவே பேராசிரியரை அனுப்புகிறேன் என்று என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசி 18-08-1983 அன்று நடைபயணத்தில் இருந்த நெடுமாறனை பாண்டிக் கண்மாய் பகுதியில் பேராசிரியர் சந்தித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், கி.வீரமணி, அய்யன் அம்பலம் ஆகியோர் கலந்து பேசி கலைஞர் தலைமையில் டெசோ என்ற தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பை , 13-05-1985 அன்று தொடங்கினார்கள். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளிலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் நான் பங்கேற்றேன்.

டெசோ பேரணிகளும், மாநாடு போன்ற பொதுக் கூட்டங்களும் கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, சேலம், வேலூர் போன்ற நகரங்களில் கலைஞர், நெடுமாறன், வீரமணி, அய்யன் அம்பலம் கலந்து கொள்ள சிறப்பாக நடந்தது. இதற்கிடையில் நெடுமாறன் அவர்கள் இரகசியமாக இலங்கைக்கு சென்றபோது, அவர் தனித்தனியாக கலைஞர் அவர்களுக்கும், வீரமணி அவர்களுக்கும் கைப்பட எழுதிய கடிதங்களை என்னிடம் நான் இலங்கைக்கு சென்றபின் ஒப்படையுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். அதன்படி 02-11-1985 அன்று இரவில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆலிவர் இல்லத்தில் வழங்கினேன்.

அப்போது தலைவர் அவர்களோடு மன்னை நாராயணசாமி, துரைமுருகன், இரகுமான்கான் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது தலைவர் என்னை தனியாக அழைத்து, எப்போது பழ.நெடுமாறன் இலங்கைக்குச் சென்றார். அங்கு கொடும் துயரங்கள் நடக்கின்றதே. பத்திரமான இவர் திரும்ப வேண்டுமே? இதை என்னிடம் நீ ஏன் உடனடியாக சொல்லவில்லை? கோபல்சாமி மூலமாகவாவது இதை என்னிடம் முன்கூட்டி சொல்லியிருக்கலாமே? அதற்காக தான் அவர் தாடி வளர்த்தாரா?

உடல்நிலை சரியில்லை என்று வேலூர் டெசோ பேரணிக்கு வரமுடியவில்லை என்று நீதானே காரணம் சொன்னாய். அப்போதே உண்மையை என்னிடம் சொல்லியிருக்கலோமே என்று கடிந்து கொண்டார். பின் நிலைமைகள் அங்கே எப்படி இருக்கிறதோ? என்று தனது கவலையை தெரிவித்திருந்தார். நெடுமாறனுடைய இந்த பயணத்தை அகநானூறு பாடல்களோடு முரசொலியில் 04-11-1985இல் விரிவாக உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதினார்.

இதற்கிடையில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1985 செப்டம்பர் என்று நினைவு. ஈழத் தலைவர்கள் ஆன்டன் பாலசிங்கம், சந்திரஹாசன், சத்தியேந்திரா ஆகியோர் சென்னையில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

அப்போது தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், கி.வீரமணி, அய்யன அம்பலம் ஆகியோர் இணைந்து நடத்திய "டெசோ" இந்த மூவரையும் நாடு கடத்தியதை உடனடியாக கண்டித்தனர். அன்றைக்கு மாலையே டெசோ சார்பில் சென்னையே குலுங்கிய மாபெரும் பேரணியும் நடந்தது. 1985 செப்டம்பரில் வெறும் ஆறு மணி நேரத்தில் இந்த பேரணி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியாக அமைந்தது ஒரு ஆச்சர்யமான நடவடிக்கையாகும். அப்போது டி.ஆர்.பாலு ஒன்றுபட்ட சென்னை மாவட்ட தி.மு.க செயலாளர். இந்தப் பேரணிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் பங்கேற்றது அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆரையே அதிரவைத்தது.

படத்தின் காப்புரிமை The India Today Group

இதற்கிடையே, ஈழத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் நாடு கடத்தியது தவறு என்றும், அவர்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்துவர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. என்னோடு சந்திரஹாசனுடைய மனைவி நிர்மலா நித்யானந்தம் சர்வதேச சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நானும் அவரும் இணைந்து இந்த வழக்குப் பணிகளை விரைவாக செய்தோம். அப்போது கலைஞர் அவர்கள் இதைக் குறித்து அவ்வப்போது நிலைமை என்ன என்று விசாரிப்பார். சில நேரங்களிலும் நேரடியாகவும் அழைத்துக் கேட்பார்.

அன்றைய தினம் வெள்ளிக்கிழமை. மறுநாள் நீதிமன்றம் விடுமுறை. முறைப்படி உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் மறுநாள் சனிக்கிழமை முறையிட்டு, வழக்கை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டுவர முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையில் நிர்மலா சந்திரஹாசன் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தந்தி மூலமாக நாடுகடத்தப்பட்ட மூவரையும் திரும்ப அழைக்க வேண்டுமென்று அவசரமாக முறையிட்டார். இன்றைக்கு இருக்கின்ற நவீன வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத அந்த நேரத்தில், நீதிமன்ற விடுமுறை நாளில் இந்த வழக்கையும் காத்துக் கிடந்து நடத்தியது ஒரு பரபரப்பான சூழ்நிலையே.

இந்த பேரணிகளுக்குப் பின், மாபெரும் டெசோ மாநாடு, 04-05-1986 அன்று மதுரை பாண்டியன் ஹோட்டலில் வாஜ்பாய், என்.டி. ராமாராவ், எச்.என். பகுகுணா, ஃபரூக் அப்துல்லா, ராமுவாலியா, ராசைய்யா, கே.பி.உன்னிகிருஷ்ணன், ஓம் பிரகாஷ் சவுதாலா போன்ற பல அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் என்னைப் போன்றோர்கள் எல்லாம் அப்போது முன்னின்று மாநாட்டின் ஏற்பாடு மற்றும் முக்கியப் பணிகளை செய்தோம்.

இந்நிகழ்வில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அழைக்க நெடுமாறன் கேட்டுக் கொண்டதால் நேரில் சென்று அழைத்தேன். அப்போது 'அண்ணே பயிற்சி பணிகள் ஏற்கனவே திட்டமிட்டுவிட்டோம். அதனால் வர இயலவில்லை' என்றார். எனவே பிரபாகரன் சார்பில் பேபி சுப்பிரமணியம், திலகர் கலந்து கொண்டனர்.

அப்போது மாநாடு (Conclave) துவங்கும் போது, திடீரென என்.டி.ராமாராவ் கலைஞரிடம் எல்.டி.டி.ஈ மற்றும் இலங்கை தமிழர் இயக்கங்களின் பெயர்களின் விரிவாக்கத்தை ஆங்கிலத்தில் கேட்டார். அருகில் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த பழ.நெடுமாறன், என்னிடம் 'ராதா இந்த அரங்கத்தில் இதை பற்றியான புரிதலுள்ள ஆட்கள் யாருமில்லை, நீங்களே எழுதிக் கொடுங்கள்' என்று என்னிடம் கூறினார். நான் அனைத்திற்கும் விரிவாக்கம் எழுதி கொடுத்தேன்.

இந்த நிகழ்வில் பேராசிரியர், கி. வீரமணி, முரசொலி மாறன், வைகோ, அய்யன அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.டி. தண்டபாணி, பொன் முத்துராமலிங்கம் மாநாட்டு அரங்கில் இருந்தனர்.

இந்த மாநாட்டில் பல அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் குறிப்பாக எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பின் தலைவர் பிரபாகரன் சார்பில் பேபி சுப்பிரமணியம் ,திலகர், கலந்து கொண்டனர். டி.யு.எல்.எப் (TULF) சார்பில் ஏ. அமிர்தலிங்கம் மற்றும் எம். சிவசிதம்பரம், ஈ.பி.ஆர்.எல்.எப் (EPRLF) சார்பில் எஸ். வரதராஜபெருமாள், ப்ரோடெக் (ProTEC) சார்பில் எஸ்.சி.சந்திரஹாசன்,ஏ.தங்கதுரை, ஆகியோர் பங்கேற்றனர்.

படத்தின் காப்புரிமை MANPREET ROMANA

ஈரோஸ் (EROS) சார்பில் ஈ. ரத்தினசபாபதி, கோவை மகேசன், ஆகியோர் டி.ஈ.எல்.எப் (TELF) எம்.கே.ஈழவேந்தன் சார்பில் பங்கேற்றனர். டெலோ (TELO) சார்பாக மதி, தமிழ்நாடு தகவல் மையம், மதுரையின் சார்பில் மகேஸ்வரி வேலாயுதம், தமிழ்நாடு தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (TIRU) எஸ். விநாயகம், ஈ.பி.ஆர்.எல்.எப். (EPRLF) சார்பில் ரூபன், பிளாட் (PLOTE) அமைப்பின் சார்பில் முகுந்தன் மற்றும் ENDLF போன்ற பல்வேறு ஈழ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

மாநாடு தொடங்கியதற்கு பின்னர் புகைப்படக் கலைஞர்களை அனுமதிக்கவில்லை. அதனால் தாமதமாக வந்த பிளாட் பிரதிநிதிகளை படமெடுக்கவில்லை.

மாலையில் மதுரை ரேஸ் கோர்சில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வாஜ்பாய், என்.டி.ராமாராவ் உள்பட, அகில இந்திய தலைவர்கள் உரையாற்றினார்கள். நான் மாநாட்டு பிரதிநிதிகளுக்கு அறைகளை ஒதுக்குதல், மாநாட்டு பாஸ்கள் போன்ற நிர்வாகப் பணிகள் மட்டுமல்லாமல், மாநாட்டின் தீர்மானங்களை முரசொலி மாறனோடு சேர்ந்து ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டிருந்தேன். மாநாடு முடிந்தவுடன் தலைவர் கலைஞர் என்னை அழைத்து பாராட்டினார்.

என்னுடைய திருமணத்தை 12-05-1986 அன்று மயிலாப்பூர் கச்சேரி சாலை, இராஜா திருமண மண்டபத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் பழ.நெடுமாறன் தலைமையில் நடத்தி வைத்தார்.

அந்த நிகழ்வில் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.இராம்மூர்த்தி, வி.பி.சிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சோ.அழகிரிசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் வி.இராமசாமி, இரத்தினவேல் பாண்டியன், தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் சிவ. சிதம்பரம், அமிர்தலிங்கம் அன்று சென்னையில் இல்லாததால் அவருடைய துணைவியார் மங்கையர்கரசி அமிர்தலிங்கம், ஈழவேந்தன், சந்திரகாசன் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விடுதலைப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றோர், பிளாட் இயக்கம், டெலோ இயக்கப் போராளிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் தான் பிரபாகரனை முதன்முதலில் சந்தித்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும் போது, கடந்த 03-05-1986 அன்று மதுரையில் டெசோ பேரணியில் திரு. சிறீ சபாரத்தினத்தை கொன்றுவிடாதீர்கள் என்று நானும், என்.டி.ராமாராவ் மற்றும் அகில இந்திய தலைவர்கள் கேட்டுக் கொண்ட பின்னும் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

நெடுமாறன் அவர்களுக்கு இதைப் பற்றி நன்கு தெரியும். இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து என்ன செய்ய முடியும்? என்ற வினாவை எழுப்பினார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை உளவு பார்த்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதிகளையும் நாளைக்கு எம்.ஜி.ஆர் உளவு பார்ப்பார் என்று கலைஞர் பேசினார்.

இந்த திருமண நிகழ்வையும், கலைஞர் பேச்சையும் மறுநாள் 13-05-1986 அன்று முரசொலியில் முழுப்பக்க கட்டுரையாக வெளியிட்டபோது, கலைஞர் என்னை தொலைபேசியில் அழைத்து முரசொலி கட்டுரையை பார்த்தாயா என்று கேட்டதெல்லாம் நினைவுகள்.

படத்தின் காப்புரிமை The India Today Group

இன்னொரு சம்பவத்தையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். 1989 தேர்தலுக்குப் பின் பிப்ரவரி 5ஆம் தேதியென்று நினைக்கின்றேன். நண்பர் குட்டி மூலமாக தலைவர் கலைஞருக்கு கடிதம் கொடுத்துவிட்டு ரகசியமாக ஈழச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

மறுவாரம், ஜூனியர் விகடன் கழுகுப் பகுதியில் இந்த செய்தி வெளிவந்தது. அதன் ஆசிரியராக இருந்த சுதாங்கனும், ராவும் பிப்ரவரி 7ஆம் தேதி என்னிடம் தொலைபேசியில் இது என்ன உண்மைதானா? என்று கேட்டதற்கு நான் ஒன்றும் தெரியவில்லை என்று மறுத்தேன்.

ஆனால், அரசல் புரசலாக ஈழ நண்பர்கள் மூலமாக காதுக்கு வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இந்த செய்தி வந்தவுடன் சட்டமன்றத்தில் குமரி அனந்தன் கேள்வி நேரத்தில் எழுப்பினார். அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பணியில் இருக்கும்போது, முதலமைச்சர் கலைஞர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். உனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டேன்.

வைகோ அவர்கள் இந்தியாவிற்கு 03-04-1989அன்று மாலை திரும்பியதாக என்னுடைய நினைவு. அந்த சமயத்தில், தினமும் நீதிமன்றத்திலிருந்து அண்ணாநகரில் அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கு சற்று நேரம் இருந்துவிட்டு 7 மணிக்கு தான் என்னுடைய வீட்டிற்கு திரும்புவேன்.

நாடு திரும்பிய அன்றைய தினமே வைகோ அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து விடியற்காலை 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார். அடுத்த நாள் 04-04-1989ஆம் தேதி, அண்ணா நகர் - ஒய் பிளாக் வீட்டிற்கு விடியலில் சென்றபோது, முகம், கால் எல்லாம் கறுத்து உடல் மற்றும் மனம் அலுப்பாக காட்டிக் கொள்ளாமல், எப்போதும் போல சிரித்துக் கொண்டு பேசினார். நேராக தலைவர் கலைஞருடைய கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றோம்.

கலைஞர் அவர்களை தனியாக சந்தித்து பேசினார். பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டுமென்றார். அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். அறிவாலயத்தில் அன்றைக்கு தொலைபேசி மேசையிருக்கும் இடம் இன்றைக்கு செய்தியாளர் கூடமாக மாறிவிட்டது.

அந்த இடத்தில் அன்றைய சென்னை மாவட்டச் செயலாளர் டி.ஆர்.பாலு உடனிருக்க பத்திரிகையாளர் மத்தியில் என்னுடைய சொந்த விருப்பமும், பொறுப்பின் காரணமாக இலங்கைக்குச் சென்றேன். கலைஞர் அவர்களுக்குத் தெரியாது என்று குறிப்பிட்டார். அன்று மாலையும், மறுநாள் பத்திரிக்கைகளிலும் இவை தலைப்புச் செய்திகளாக வந்தன.

(கருணாநிதி கைதான காணொளி அடங்கிய ஒளிநாடா, எவ்வளவு சிரமங்களுக்கிடையில் அன்றைக்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் தொலைக்காட்சிக்கு சென்று சேர்ந்தது என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் அடுத்த பகுதியில்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்