ஆறு பேரை பலி வாங்கிய கோவை கோர விபத்து - நடந்தது என்ன?

கோவையில் ’ஆடி’ கார் ஒன்று அதிவேகமாக சென்று சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் கல்லூரி மாணவி உள்பட, 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

road accident car crash

கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுந்தராபுரம் பகுதி. கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள அந்த பகுதி இருபுறமும் வணிக வளாகங்கள் நிறைந்து பொதுமக்களும் அதிக அளவில் காணப்படும் ஒரு பரபரப்பான பகுதியாகும்.

காலை, மாலை நேரங்களில் அதிகமான போக்குவரத்து மற்றும் அதிகமான மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப அகலமான சாலை இல்லாததால் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தவிர்கவும் சுந்தராபுரம் நான்கு சாலை சந்திக்கும் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு பரபரப்பான சாலையில்தான் இன்று காலை சிக்னலை அதிவேகமாக கடந்து வந்த ’ஆடி’ கார் ஒன்று சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்தவர்கள் மீதும், ஒரு ஆட்டோவின் மீதும் மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படக்குறிப்பு,

ஓட்டுநர் ஜெகதீசன்

தற்போது வந்துள்ள தகவலின்படி, ஆடி கார் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த வழக்கில் ஏற்கனவே 279, 337, 338, 304 (2) ஐபிசி என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், 185 என்பது மது அருந்தி அல்லது போதையினால் வாகனத்தை இயக்கியது என்ற பிரிவாகும்.

முன்னதாக, பொள்ளாச்சி மார்க்கமாக இருந்து கோவை நோக்கி அதிவேகத்தில் வந்த கார் சிக்னலை அடுத்துள்ள பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி செல்வதற்காக நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவி சுபாஷினி, பூக்கடை நடத்திவந்த வேலம்மாள், சாலை ஓரமாகவும், ஆட்டோவிலும் இருந்த அம்சவேனி, சோமு, சுரேஷ் ஸ்ரீரங்கன், வேல்ராஜ் ஆகியோரை கண் இமைக்கும் நேரத்தில் அடித்து தூக்கி வீசியது.

கார் மோதிய வேகத்தில் ஆட்டோ பூக்கடை மற்றும் மின் கம்பம் மீது விழுந்ததில் அனைவரும் உடல் நசுங்கி பலியாகினர்.

விபத்து நடந்ததும் கார் ஓட்டுநரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படக்குறிப்பு,

விபத்தில் சேதமடைந்த ஆட்டோ

சம்பவ இடத்திற்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா நேரடியாக சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் பிபிசி தமிழிடம் விபத்து குறித்து தெரிவித்த அவர், காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் ’ஆடி’ காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பெயர் ஜெகதீசன் என்று தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்திய கார் ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்விக்குழுமத்தின் உரிமையாளருடையது. விபத்தை ஏற்படுத்திய அந்த கார், உரிமையாளரின் பெயரில் இல்லாமல் அவர் நடத்திவரும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது.

மேலும் ஓட்டுநர் அவரது உரிமையாளரை அழைக்க வந்த போது இந்த விபத்து நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டுநரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றார்.

படுகாயமடைந்த சிலர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: