சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க முடிவு

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சரியாக செயல்படாததால், இது தொடர்பாக விசாரிக்கப்பட்டுவரும் வழக்குகள் அனைத்தையும் மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Ishara S.KODIKARA/AFP/Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டுமென ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியாகச் செயல்படவில்லை. இந்த நிலை நீடித்தால் வழக்குகளை சி.பி.ஐயிடம் ஒப்படைப்போம் எனவும் கூறினார்.

இதற்குப் பிறகு, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மகாதேவன், ஆதிகேசவலு ஆடங்கிய தனி அமர்வை அமைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சரியாக செயல்படாததால், இது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.

இந்தப் பிரிவு அமைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் ஒரு அறிக்கைகூட தமிழக அரசுக்கு பொன். மாணிக்கவேல் அளிக்கவில்லையென்று கூறிய அரவிந்த் பாண்டியன், இனி சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐயே விசாரிக்கும் என்று கூறினார்.

பட மூலாதாரம், Ishara S.KODIKARA/AFP/Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

அப்படியானால் தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் மீதே உங்களுக்கு நம்பிக்கையில்லையா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்கு, தமிழக காவல்துறை இதனை விசாரித்தவரை நன்றாகத்தான் இருந்தது என அரவிந்த் பாண்டியன் பதிலளித்தார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பான விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று பொன். மாணிக்கவேல் தரப்பு தெரிவித்தது. மேலும் அரசின் நிலை குறித்து தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது.

இதையடுத்து, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் கொள்கை முடிவை அறிக்கையாக தாக்கல் செய்யவும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் விசாரணை நிலைஅறிக்கையும் சிலைகளை வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கடந்த சில மாதங்களாகவே கோவில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் அதிகாரிகள் சிலை கடத்தல், சிலை செய்ததில் மோசடி போன்ற புகார்களை முன்வைத்து கைதுசெய்யப்பட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் வந்தனர்.

இந்த நிலையில்தான் தமிழக அரசு, வழக்குகளை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க முடிவுசெய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: