ஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணியில் இருவர் காயம்

  • 2 ஆகஸ்ட் 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'ஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணியில் இருவர் காயம்'

படத்தின் காப்புரிமை Vedanta

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அமிலங்களை அகற்றும் பணி யின்போது, விபத்து ஏற்பட்டு 2 ஒப்பந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலைக்கு கடந்த மே மாதம் 28-ம் தேதி சீல் வைக்கப்பட்டது. ஆலை யில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொட்டி யில் கடந்த ஜூன் மாதம் கசிவு ஏற்பட்டது.

அமிலங்கள் மற்றும் ரசாயன பொருட்களை அகற்றும் பணியில் நேற்று ஸ்டெர்லைட் நிறுவன நிரந்தர ஊழியர்கள் சுமார் 300 பேர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 200 பேர் வரை ஈடுபட்டிருந்தனர். தூத்துக் குடி கிருபை நகரைச் சேர்ந்த பால சுப்பிரமணியன்(39), அத்திமரப் பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கர் (27) ஆகிய 2 ஒப்பந்த தொழி லாளர்கள், நேற்று காலை 11 மணியளவில் ஆலையில் கந்தக அமிலம் உற்பத்தி பகுதியில் இருந்து, சேகரிப்பு டேங்குக்கு வரும் குழாயில் தேங்கியிருந்த அமிலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்தக் குழாய் திடீரென வெடித்து, 2 பேர் மீதும் கந்தக அமிலம் கொட்டியது. இதில் பாலசுப்பிரமணியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஜெய சங்கருக்கு முகம், கை உள்ளிட்ட 4 இடங்களில் பலத்த காயம் ஏற் பட்டது. ஜெயசங்கர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கருக் கலைப்புக்கு அனுமதி அளித்த உயர்நீதி மன்றம்'

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 16 வயது பெண் ஒருவரின் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்துள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். மணிகண்டன் என்ற நபர் சிவகங்கையை சேர்ந்த இந்த மாணவியை கடத்தி பாலியல் வல்லுறவு கொண்டதில், மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருக் கலைப்புக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது என்றும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினத்தந்தி: 'அண்ணா பல்கலைக்கழகம் - மறு மதிப்பீட்டில் மாபெரும் ஊழல்'

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"கடந்த ஆண்டு 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த இவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் 16 ஆயிரத்து 636 மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளனர். இதில்தான் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமணி: 'விசாரணை ஆணையங்கள்'

புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுவது, ஜெயலலிதா மரணம் உள்பட பல சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 5 விசாரணை ஆணையங்களை தமிழக அரசு அமைத்துள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்தத் தகவலை அரசுத் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் கூறினார் என்று கூறும் அந்நாளிதழ் செய்தி, "ரகுபதி ஆணையத்துக்கு கடந்த 2015-2016 காலகட்டத்தில் ரூ.69 லட்சமும், கடந்த 2016-2017 காலக்கட்டத்தில் ரூ.78 லட்சமும், 2017-2018 காலக்கட்டத்தில் ரூ.76 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது என்றும் இதுவரை ரகுபதி ஆணையத்துக்கு மொத்தம் ரூ.4.11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ரகுபதி ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.2.23 கோடியை அரசு வீணாக செலவு செய்தது ஏன்? இந்த ஆணையம் செயல்படுகிறதா இல்லையா என்பதைக் கூட அரசு முறையாக கண்காணிக்கவில்லை. நீதிமன்றம் இதுபோன்ற தேவையற்ற செலவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது." என்று நீதிபதி கூறியதாக விவரிக்கிறது.

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடும் வலியையும் நகைச்சுவை செய்த கருணாநிதி - சிறப்பு தொகுப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்