கருணாநிதி ஒரு பிறவிப் போராளி - கேரள முதல்வர் பினராயி விஜயன்

  • 2 ஆகஸ்ட் 2018

மருத்துவமனையில் ஆறாவது நாளாக சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

Image caption ஸ்டாலின், கனிமொழியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு.

இன்று வியாழக்கிழமை காவேரி மருத்துவமனைக்கு வந்த பினராயி விஜயன், ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரிடமும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்" என்றார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடும் வலியையும் நகைச்சுவை செய்த கருணாநிதி - சிறப்பு தொகுப்பு

மேலும் கருணாநிதியைப் பிறவிப் போராளி என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ட்விட்டரில் கருணாநிதி உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார் பினராயி விஜயன்.

இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.

முன்னதாக, நேற்று நடிகர் கவுண்டமணி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்தனர்.

புதன்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து கிளம்பும்போது கருணாநிதி உடல்நிலை தேறி வருவதாகவும் தொண்டர்கள் வீட்டிற்கு செல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.

படத்தின் காப்புரிமை Facebook

செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "நான் கருணாநிதியை பார்க்க விரும்பினேன். அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க விரும்பினேன். எங்களுக்குக் கருணாநிதியுடன் நீண்ட கால உறவு இருக்கிறது. ஆகவே அவரை நான் பார்க்க வந்திருக்கிறேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மிக உறுதியாக இருக்கிறார். உடல்நிலை சீராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நலத்தை நடிகர் விஜய் நேரில் சென்று விசாரித்தார். புதன்கிழமை காலை மருத்துவமனை சென்ற நடிகர் விஜய், திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி உடனிருந்தார்.

இதைப் போலவே மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் விசாரித்துவிட்டுத் திரும்பும்போது பேசிய ரஜினிகாந்த் "கருணாநிதியின் உடல்நலம் குறித்து அழகிரி மற்றும் கனிமொழியிடம் விசாரித்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்" என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :