கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்- பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு

  • 3 ஆகஸ்ட் 2018

இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - கே.எம்.ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிறார்

படத்தின் காப்புரிமை PTI
Image caption நீதியரசர் கேஎம் ஜோசப்

உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவேண்டும் என்ற பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, அவரது நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

நீதிபதிகள் கே.எம்.ஜோசப், இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவேண்டும் என்று கொலீஜியம் கடந்த ஜனவரியில் பரிந்துரைத்தது. ஆனால், இந்து மல்ஹோத்ரா நியமனத்தை மட்டும் ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கே.எம்.ஜோசப் நியமனத்தை மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது. இதையடுத்து கொலீஜியம் சமீபத்தில் மீண்டும் கூடி கே.எம்.ஜோசப் நியமனத்தை மீண்டும் வலியுறுத்துவது என்று முடிவு செய்து மத்திய அரசுக்கும் எழுதியது.

அத்துடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வினீத் சரன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியைப் படிக்க: மோதி அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் நடக்கும் 'நீயா நானா' போரின் பின்னணி .

இந்து-தமிழ்: தேசத்துரோக வழக்கில் நீதிபதி முன் ஆஜரான வைகோ

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக த இந்து தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசியது தொடர்பாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு பதிவுக்காக நேற்று வைகோ, சென்னை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஈஸ்வரன் முன்பாக ஆஜராகி, "இந்திய அரசு மீது குற்றம் சாட்டியது உண்மைதான். ஆனால் தேசத்துரோக குற்றம் புரியவில்லை"என்று வைகோ கூறியதாக இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

தினமணி: சூப்பர்சோனிக் இடைமறி ஏவுகணை சோதனை வெற்றி

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் ஒடிஸா மாநிலத்திலுள்ள பாலாசோரில் இருந்து இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட சூப்பர்சோனிக் இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணையில் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களின் திறனை அறிவதற்கு இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாக்டர் அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை சோதனை மையத்தில், கடல் மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து இந்த அதிநவீன இடைமறி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தினமணி செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்